உள்ளது போதுமே!
தியானம்: ஆகஸ்டு 10 புதன்; வாசிப்பு: லூக்கா 19:1-10
‘…நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய்
வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச்
செலுத்துகிறேன்’ (லூக்கா 19:8)
ஒரு பெண்கள் குழுவினரின் ஆராதனையைப் பற்றி ஒரு பிரசங்கியார் எழுதிய குறிப்பு இது: “பலர் எழுந்து கர்த்தர் அருளிய ஆசீர்வாதங்களைக் குறித்துச் சாட்சி கூறினர். நான்கு பெண்கள் கூறிமுடித்த பின் கூட்டத்தை நடத்தியவர் மேலும் ஒருவரை சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டார். அங்கிருந்த ஒரு பெண் எழும்பி: ‘இங்கே சாட்சி சொன்ன நான்கு பேரும் எனக்குப் பணம் திருப்பிக் கொடுக்கவேண்டியவர்கள். நானும் என் குடும்பமுமோ மிகுந்த கஷ்டத்தில் அரைப்பட்டினியாய் இருக்கிறோம். இப்படியிருக்க நான் எப்படி எதை சாட்சி சொல்லுவது?’ என்று வேதனையோடு கூறி அமர்ந்தாள்”. ‘ஊழியத்திற்கு அதிகமாகக் கொடுத்ததில் பணம் குறைந்துவிட்டது. தர வேண்டிய ரூபாய் இரண்டாயிரத்தை மிக விரைவில் தந்துவிடுவேன்’ என்று ஒருவர் ஒரு விதவைத் தாயாருக்குச் சாக்குச் சொன்னாராம்.
பிரியமானவனே! பிறருடைய புத்தகங்கள் எத்தனை நம்மிடத்தில் உண்டு? பிறருடைய பாத்திரங்கள் எத்தனை நம்மிடத்தில் உண்டு? நம்மில் எத்தனைபேர் அலுவலக நேரங்களைக் களவாடுகிறோம். பிந்திப்போய் முந்தி கையெழுத்திடுகிறோம். வேலை நேரம் 9 மணிக்கு ஆரம்பம் என்றால், 9 மணிக்குத்தான் காலை ஆகாரம், தேனீர் எல்லாம்; அதன்பின் அழகுபடுத்தி, பின்னர் பத்திரிக்கையை, தியானப் புத்தகத்தை, அன்றைய வேதப்பகுதியைக் கூட அலுவலகத்திற்கு வந்துதான் வாசிக்கின்றனர். இவை களவில்லையா?
தரம் குறைந்த பொருட்களை விற்பதும், ஒரு விலைக்கு சாமான் வாங்கிவிட்டு வேறொரு விலையைச் சொல்லி அம்மாவிடம் காசு கேட்பதும்கூட களவுதான். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை யாவும் பிறரிடம் செய்யும் களவுகள். மனந்திரும்பிய ஒருவன் தான் செய்தவற்றை உணரும்போது, களவு செய்ததற்காக மன்னிப்புக் கேட்பது மாத்திரமல்ல, எடுத்ததைத் திரும்பக் கொடுக்கவும் வேண்டும். அதைத்தான் சகேயு நாலத்தனையாய் செய்துகாட்டினார். அதுதான் உண்மையான மனந்திரும்புதல். ஆனால் இன்று மனந்திரும்பிவிட்டதாகக் கூறுபவர்களே மாறுபாடாக நடக்கிறார்கள். அந்த வஞ்சகத்தில் நாம் விழாதிருப்போமாக.
விசுவாசியே, திருப்பிக் கொடாத கடன்கள் – பொருட்கள் இருந்தால் அவற்றைக் கொடுத்து சரிசெய்வோமாக. நமது பிதா ஐசுவரிய சம்பன்னராக இருக்கும்போது நமக்கு மற்றவர் பொருள் எதற்கு? மற்றவர் பணம் எதற்கு? பிறருடைய முறுமுறுப்புக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்? நமக்கு உள்ளது போதும் என்ற மனதுடன், அதற்குள் மனரம்மியத்துடன் வாழுவோமாக.
ஜெபம்: “கர்த்தாவே, நீர் எனக்குத் தந்தது போதும் என்ற மனதுடனும், மனரம்மியத்துடனும் வாழ எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.”