தீர்மானித்துச் செயற்படுங்கள்!

தியானம்: ஆகஸ்டு 18 வியாழன்; வாசிப்பு: தானியேல் 1:8-20

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம், உன்னைக் காக்கும்
படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்…
(எரேமியா 1:8)

நமது மீட்புக்கான சகலவற்றையும் தேவன் செய்து முடித்துவிட்டார். அந்த மீட்பைப் பெற்றுக்கொள்ள நாம், நமது வாழ்வில் தீர்மானம் எடுக்க வேண்டும். நமது இதயக் கதவின் வாசலில் நின்று தட்டிக்கொண்டிருக்கும் இயேசுவை உள்ளே அழைக்க கதவைத் திறப்பதா? வேண்டாமா? கதவைத் திறந்து அவரை உள்ளே அழைப்போமானால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தீர்மானங்கள் எடுக்க வேண்டியவர்களாக இருப்போம். தேவன் வலுக்கட்டாயமாக எதையும் நமக்குள் திணிக்கிறவர் அல்ல. நமக்கு முழுச் சுதந்திரத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். நாம் அவர் சித்தத்திற்குள் நம் வாழ்வைத் தத்தம் செய்தால் அவர் நம்மில் சுயாதீனமாகக் கிரியை செய்வார். இல்லையானால் அவர் நம்மைக் கட்டாயப்படுத்தமாட்டார்.

தானியேல் இராஜ போஜனத்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது எனத் தீர்மானம் செய்துகொண்டான். அதைத் தேவனும் ஆதரித்தார். பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுப்போன தானியேலுக்கு இத்தீர்மானம் தொடர்ந்தும் தேவனுக்காய் உறுதியோடு நிற்க மிகவும் உதவி செய்தது. சிங்கக் குகையிலும் அவர் தன் விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. அதேபோல் காணாமற்போன மகன், மீண்டும் தன்னுடைய தகப்பனிடத்துக்குப் போய் இன்னின்ன பிரகாரமாய்ச் சொல்லுவேன் என ஒரு தீர்மானம் பண்ணிக்கொண்டு புறப்பட்டுப் போனான். அந்தத் தீர்மானமே அவனுக்கு ஒரு புதிய வாழ்வைக் கொடுத்தது. தனது தந்தையின் பாசமிகு பிள்ளையாக வாழ மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைத் தேடிக் கொடுத்தது. எனவே தீர்மானம் எடுப்பதும் அதைச் செயற்படுத்துவதும் கிறிஸ்தவ வாழ்வுக்கு இன்றியமையாதது என்றால் அது மிகையாகாது.

நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டதோடு நம் கிறிஸ்தவ வாழ்வு முடிந்துவிடவில்லை. தொடர்ந்தும் சாட்சியாக வாழவேண்டிய பொறுப்பு நமக்குண்டு. வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானங்களுமே நமக்கு உதவி செய்கின்றன. நமது தீர்மானங்கள் வேதத்தின் அடிப்படையில் இருத்தல் அவசியம். தேவ வழிநடத்துதலோடு இருக்கவேண்டியதும் அவசியம். நமக்கு ஒரு தொழிலைத் தெரிந்தெடுக்கும்போதும், வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் முக்கியபடிகளிலும், நிச்சயமாகவே தீர்மானம் முக்கிய பங்குவகிக்கிறது. நமது கிறிஸ்தவ ஓட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்மானமே நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. நாம் செய்யும் திடமான தீர்மானங்களே பாவத்தில் நாம் விழுந்துவிடாமல் உறுதியாக இருக்க நமக்குத் துணை புரிகின்றது.

ஜெபம்: பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற திடமான தீர்மானத்தோடு உலகிற்கு வந்து வெற்றியடைந்த ஆண்டவரே, உம்மைப்போல நானும் உமது சித்தத்திற்கேற்ப தீர்மானங்கள் எடுத்து உறுதியோடு வாழ எனக்கு உதவிடும். ஆமென்.