குடும்பத்திற்கு முன்மாதிரி!

தியானம்: ஆகஸ்டு 21 ஞாயிறு; வாசிப்பு: யோபு 1:4-5

யோபு …அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி,
அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படி
யேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான் (யோபு 1:5)

யோபு நிறைந்த செல்வங்களும், பொறுப்புகளும் மிகுந்த ஒருவர். என்றாலும் தேவனோடு உறவுகொண்டு, அவருக்குப் பயந்து ஜீவித்ததுடன் தனது பிள்ளைகளையும் தேவசமுகத்தில் கொண்டுவந்து, அவர்களுக்காகவும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திய ஒரு நல்ல தகப்பனாகவே வாழ்ந்தார். யோபு கர்த்தரோடு வைத்திருந்த உறவுக்கு அடுத்ததாக, தனது குடும்பத்திற்கே முதலிடம் கொடுத்திருந்தார். தன் குடும்பத்தின் சாதாரண தேவைகளைச் சந்திப்பதுடன் நின்றுவிடாமல், அவர்களது ஆத்மீக ஜீவியத்தில் அக்கறையுடையவராகவும் இருந்தார். எந்தவொரு மனுஷனும், தனது ஆவிக்குரிய ஜீவியத்திற்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதற்கு யோபு தன்னுடைய குடும்பத்திற்கு மாத்திரமல்ல, நமக்கும் முன்மாதிரியாக ஜீவித்தார்.

குடும்பத் தலைவனே, நீ தேவனுக்குப் பயப்படுபவனாக, தேவனுக்குப் பிரியமுள்ளவனாக, தேவபாதத்தில் அமர்ந்து, ஜெபித்து, வேதம் வாசித்து, உன் ஆவிக்குரிய ஜீவியத்தில் உனது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக ஜீவிக்கிறாயா? பெற்றோரே, பிள்ளைகளுடைய எதிர்கால வாழ்விற்கு, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு வழிகாட்ட ஏதுவாக நம் ஜீவியம் அமையாவிட்டால், நமது பிள்ளைகள் கர்த்தருடன் வைத்திருக்கவேண்டிய தனிப்பட்ட உறவில், அவருடன் நடக்கவேண்டிய வழிகளில் விழுந்துபோவது நிச்சயம். பிள்ளையின் வளர்ச்சி, கல்வி, எதிர்காலம் என்பவற்றைக் குறித்து கரிசனையுடன் இருப்பது நல்லது! அதிலும் மேலாக பிள்ளைகளை கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும், அவரை நேசிக்கும் நேசத்திலும், அறிகிற அறிவிலும் வளர்த்து வருகிறோமா? பிள்ளைகளின் உலகப் பிரகாரமான தேவைகளுக்காக மாத்திரம் ஜெபிப்பதுடன் நின்று விடாமல், தினமும் அதிகாலையில் அவர்களைத் தேவகரத்தில் ஒப்படைத்து, அவர்களது ஆத்மீக வளர்ச்சிக்காக ஜெபிக்கிறீர்களா? இன்று பிள்ளைகளுக்குப் பயந்து வாழும் பெற்றோர் அதிகரித்து வருவது துக்கத்திற்குரிய காரியம்.

தினமும் குடும்பத்திலுள்ளவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் கவனியுங்கள். நீ அவைகளை (கட்டளைகளை) உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்து.. (உபா.6:6-9) பேசும்படி கூறப்பட்டுள்ளது. பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியைக் குறித்து நீங்கள் காட்டும் அக்கறை எப்படிப்பட்டது? உங்கள் முதல் வாஞ்சை உலக ஆசீர்வாதங்களிலா? அல்லது தேவனுடைய முகத்தைத் தேடுவதிலா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக.

ஜெபம்: கர்த்தாவே, அதிகாலையில் தூங்கும் என்னைத் தட்டி எழுப்பும். எனது குடும்பத்துக்கு நான் ஒரு முன்மாதிரியாக ஜீவிக்க பெலன் தாரும். ஆமென்.