எதிர் நீச்சல்!
தியானம்: ஆகஸ்டு 24 புதன்; வாசிப்பு: 1பேதுரு 4:1-11
‘நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்
…உங்கள் மனம் புதிதாகிறதினாலே
மறுரூபமாகுங்கள்.’ (ரோமர் 12:2)
கீழ்ப்படியும் கிறிஸ்தவன் எல்லா வேளைகளிலும், உலகத்தோடு ஒத்து ஓட முடியாது. அவன் எதிர்நீச்சல் போடவேண்டிய சந்தர்ப்பங்கள் அநேகமுண்டு. ஓடும் நீரில், அது செல்லும் திசையில் நாமும் செல்வது மிகவும் இலகு. சில வேளைகளில் நாம் சும்மா இருக்கும்போதே, தண்ணீர் நம்மைத் தன் பக்கமாக இழுத்துச் செல்லவும் வாய்ப்புண்டு. ஆனால் தண்ணீரின் திசைக்கு எதிர்நீச்சல் போடுவதென்பது, மிகவும் கடினமான விஷயம். தண்ணீர் நம்மை தன் சக்தியால் இழுக்க இழுக்க, அதை எதிர்த்து நாம்தான் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும்.
இப்பிரபஞ்சத்தில் தேவனுக்கும் அவரது வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிகின்ற ஒரு கிறிஸ்தவனின் வாழ்வும் எதிர்நீச்சல் போடும் ஒரு வாழ்க்கைதான். உலகம் தன் பக்கம் இழுக்கும். ஆனால் அதனோடு ஒத்து வாழாமல், அதை எதிர்த்து நீச்சல் போடவேண்டும். உலகத்தோடு ஒத்து வாழ்ந்தால், நமக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கமாட்டாது. எதிர்நீச்சல் சற்றுக் கடினமானதுதான்.
இயேசு சொன்னார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா.16:33). தேவனின் வார்த்தைகளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படிகிறவன்தான் உலகத்தை எதிர்ப்பான். ஏனெனில் அவனுக்குத்தான் உலகத்தின் பொல்லாத காரியங்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் தான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு, உலகத்துக்கு ஒத்தவேஷம் தரித்திருப்பவனோ, உலகத்தை எதிர்க்கமாட்டான். அவன் உலகத்தோடு சேர்ந்து ஓடுவதால் அவனுக்கு உலகத்தால் எவ்வித பிரச்சனையும் வராது.
மீன் தண்ணீரில் எதிர்நீச்சல் போடும்போது அதற்குக் கடினமாயிருக்கும். ஆனால் செத்த மீனுக்கு எவ்விதக் கஷ்டமும் இல்லை. அது தண்ணீர் அடிக்கும் பக்கமெல்லாம் அடிபட்டுச் செல்லும். உலகத்துக்கொத்த வேஷம் தரித்திருப்பவனும் இந்த செத்த மீனைப்போலவே இருக்கிறான்.
பேதுரு நமக்குத் தரும் சவால் என்ன? கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டதால், நாமும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாய் தரித்துக்கொள்ளுவோம் (1பேது.4:1) என்பதே. பாடுபடும் சிந்தையோடு வாழ நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் கீழ்ப்படியும் மனதையுடைய ஒரு மெய்யான கிறிஸ்தவன், நிச்சயமாய் பாடுகளையும், துன்பங்களையும், அவமானங்களையும் எதிர்நோக்க ஆயத்தமுள்ளவனாய் இருக்கவேண்டியது அவசியம். இப்படியிருக்க, நாம் இப்பிரபஞ்சத்துக்கு ஒத்தவேஷம் தரியாமல் எதிர்நீச்சல் போட ஆயத்தமாக இருக்கின்றோமா?
ஜெபம்: “இந்த உலகத்தில் வாழ்ந்து முன்மாதிரி காட்டிச் சென்ற ஆண்டவரே, நீர் சென்ற பாதையை நானும் பின்தொடர கிருபை தாரும். ஆமென்.”