நன்றியுள்ளவர்களாய் இருங்கள்!

தியானம்: ஆகஸ்டு 28 ஞாயிறு; வாசிப்பு: லூக்கா 17:11-19

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய
தேவனை ஸ்தோத்திரித்து,.. (எபேசியர் 5:20)

ஒருவர் நமக்கு உதவி செய்தால் சாதாரணமாக அதற்கு நாம் நன்றி சொல்வது வழக்கம். இன்றும் நமது தமிழ் கலாச்சாரத்தில் பதில் உபகாரம் செய்வது ஊறிப்போன விஷயம். ஒருவர் ஏதாவது உணவுப்பண்டத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து அனுப்பிவிட்டால் அப்பாத்திரத்தைக் கவனமாய் வைத்திருந்து அதில் வேறேதாவது வைத்து அனுப்பாவிட்டால் சிலருக்குத் திருப்தியிராது. இப்படியிருக்க, நமது நடைமுறை வாழ்விலே தேவன் செய்யும் நன்மைகளை நாம் இலகுவில் மறந்துவிடுவது ஏன்?

வாழ்விலே இன்பமும், துன்பமும் மாறி மாறி வரத்தான் செய்யும். இன்பம் வரும்போது தேவனைப் போற்றி வாழும் நாம், துன்பம் வரும்போது கடந்த நாட்களில் அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பாராது அவரைத் தூற்றி வாழ முற்படுகிறோம். அதுமட்டுமல்ல, தேவையான நேரத்தில் அவரைத் தேடுகிறோம். மற்றப்படி நாம் நம் பாதையில் போய்க்கொண்டே இருக்கிறோம்.

ஒருமுறை தேவையோடிருந்த பத்துப்பேர் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டனர். தேவை தீர்ந்ததும் ஒன்பதுபேரும் காணாமல் போய்விட்டனர். ஆனால் நன்றியறிதலுள்ள ஒரு மனுஷன் மாத்திரம் நன்றி சொல்ல இயேசுவைத் தேடி வந்தான். இயேசு அவனை நோக்கி மற்ற ஒன்பது பேரும் எங்கே? என்று கேட்டார்.

நாம், தேவைகள் இருக்கும்போது மட்டும் தேவனைத் தேடுகிறோமா? மற்றவேளைகளில் நம் விருப்பம்போல வாழ்கிறோமா? ஒருகணம் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் எங்கே நிற்கிறோம்?

கடன் தொல்லை தலை தூக்கும்போதுதான் கணவன் தேவனைத் தேடுகிறார். குடும்பத்தில் வியாதி வரும்போதுதான் மனைவி தேவனிடம் ஓடுகிறார். பரீட்சை நெருங்கும்போதுதான் பிள்ளைகள் தேவனை நினைக்கிறார்கள். அப்படியானால் இப்படிப்பட்ட குடும்பத்தில் தேவன் எங்கே? பொதுவாக அருகில் இல்லாத ஒருவரைத்தான், தேவை வரும்போது தேடி ஓடவேண்டி வரும். நம் குடும்பத்தில் தேவன் இருந்தால் அவரை ஆராதிக்கும் ஆராதனையும் அவர் நம் வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்து, எப்போதும் அவரைத் துதிக்கும் துதியும் நம் வாயில் இருக்கவேண்டும். அவர் செய்யும் நன்மைகளை எண்ணி… என்று நாம் சொல்லுவதுண்டு. அது தவறு. அப்படியானால் தீமையும் செய்வார் என்று கருதத் தோன்றும். அவர் செய்வது யாவுமே நன்மைக்குத்தான். ஆகவே, எப்போதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து நன்றியறிதலுள்ளவர்களாய் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.

ஜெபம்: கர்த்தாவே, எப்பொழுதும் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலும் நன்றியறிதலுள்ள பிள்ளையாய் வாழ என்னைத் தாழ்த்தி ஒப்புவிக்கிறேன். ஆமென்.