முன்னோர்களின் வழிகள்
தியானம்: செப்டம்பர் 8 வியாழன்;
வாசிப்பு: எரேமியா 6:16-19; தானியேல் 5:13-21
‘வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு
விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே
நடவுங்கள்.’ (எரேமியா 6:16)
நமது பெற்றோர், மூதாதையரைக் குறித்து நாம் ஓரளவாவது அறிந்திருக்கிறோம். அவர்களிலே அதிக வசதிகளோடு வாழ்ந்து, கெட்டுப்போனவர்களும் உண்டு; தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்தோரும் உண்டு. அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை உதாசீனப் படுத்தக்கூடாது. ஏனெனில் அவை நமக்கு முன்மாதிரியாகவோ, அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கிறது. அவர்களது அனுபவங்களை அறிந்து, நமது வாழ்வைச் சீர்ப்படுத்த அதிக வாய்ப்பு உண்டு. இதைச் செய்யாததால்தான் பெல்ஷாத்சார் அழிந்தான்.
சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்களோ அதன் அர்த்தமோ யாருக்கும் புரியாததால், தானியேல் வரவழைக்கப்பட்டு அர்த்தத்தைச் சொல்லும்படி பணிக்கப்பட்டார். தானியேலோ, அவசரப்பட்டுப் பேசவில்லை. முதலில், ராஜா அறிந்திருந்த செய்திகளையே அவருக்கு ஞாபகப்படுத்தத் தொடங்கினார். நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தைக் கொடுத்ததே உன்னதமான தேவன் என்றார் தானியேல். அதாவது, ‘தேவன் நேபுகாத்நேச்சாருக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுத்ததால்தானே, இன்று நீரும் இதில் அமர்ந்திருக்கிறீர்’ என்பதைச் சுட்டிக்காட்டினார். பின்னர் அளிக்கப்பட்ட ராஜாஸ்தானத்தை தனது பெருமைக்காக எப்படி அவன் மாற்றிப்போட்டான் என்பதை எடுத்துரைத்தார். ‘அந்த வழியில்தானே நீரும் இருக்கிறீர்’ என்பதையே தானியேல் எடுத்துக் காட்டினார். நேபுகாத்நேச்சார் மேட்டிமையடைந்து எப்படித் தள்ளுண்டுபோனார் என்றும் ஞாபகப்படுத்தினார் தானியேல். இதையெல்லாம் அறிந்திருந்தும், தன்னைத் தாழ்த்தாத பெல்ஷாத்சார் அழிந்துபோனான்.
பயமுறுத்தல்களும் மனக்கலக்கங்களும் வரும்வரைக்கும் எந்தவித சிந்தனையுமின்றி மனம்போனபடி வாழுகிறோம். நெருக்கடி வந்ததும் மனம் அலசடிப்பட்டுத் திரிகிறோம். ஆண்டவர் ஒருபோதும் நூதனம் செய்கிறவரல்ல. முன்னர் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. முன்னோரின் அனுபவங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், பெல்ஷாத்சாருக்கும் நேபுகாத்நேச்சாருக்கும் நடந்த சங்கதி அனைத்தும் இன்று நமக்குத் தெரியுமே. பின்னரும் ஏன் மனமேட்டிமை? எதற்குப் பெருமைப் பேச்சுக்கள்? முன்னோர்களின் பழமை வாய்ந்த முன்னோடியான வாழ்வு நமக்கு அதிகம் பிரியமில்லை. நமக்குப் புதிது புதிதாக காரியங்கள் தேவை. ஆனால் அவை எங்கே கொண்டுபோய் விடுமோ யாரறிவார்! அன்று இஸ்ரவேல் பூர்வ பாதைளை விசாரித்து நடக்க மறுத்தார்கள். கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார் (எரே.6:30). அதை அறிந்து கொண்டும் நாமும் அவர்கள் வழி நடக்கலாமா?
ஜெபம்: “பிதாவே, பூர்வ பாதைகளைக் கேட்டறிந்து, அதிலே நடந்து, உமது இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.”