உறுதியான உறவு

தியானம்: செப்டம்பர் 17 சனி; வாசிப்பு: தானியேல் 6:6-10

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக்
கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும்….
(தானியேல் 6:10)

கர்த்தருக்கென்று ஊழியம் பண்ணியும் இத்தனை பிரச்சனையா என்று கேள்வி எழுப்பும் நமக்கு தானியேல் ஒரு சவாலாக இருக்கிறார். அவர் தேவ பயத்துடன் உண்மையுள்ளவராக இருந்ததை வைத்தே அவருக்குப் பிரச்சனை உருவாயிற்று. வேறு குற்றம் காணப்படாதபடியினால், அவரது ஜெப வாழ்வை கவனித்த எதிரிகள், அதைக்கொண்டே தானியேலுக்கு எதிராக சதி செய்தனர். அந்நாட்களில் ராஜா கையெழுத்து வைத்தால் பின்னர் அதை ராஜாவாலேயே மாற்றமுடியாது. ஆகவே, 30 நாட்களுக்கு உம்மையல்லாமல் வேறு யாரிடமும் எவரும் ஒன்றுக்கும் விண்ணப்பம் பண்ணக்கூடாது, இந்த முப்பது நாட்களுக்கும் நீரே எல்லாம் என்று உம்மை மேன்மைப்படுத்திட நாங்கள் எல்லாரும் ஆலோசனை செய்திருக்கிறோம் என்று ராஜாவிற்கு ஒரு புகழ்ச்சியைக் கொடுத்து, மயக்கி, அதை எழுத வைத்து, கையெழுத்தும் வைக்கும்படி செய்துவிட்டார்கள். இது ஏன், எதற்காக என்று எதுவும் கேட்காமல், பெருமைகொண்ட ராஜாவும் எழுதி கையெழுத்து வைத்துவிட்டான். தன்னிடம் வந்த அதிகாரிகளின் கூட்டத்தில் தானியேல் இல்லை என்பதையும் ராஜா கவனிக்கவில்லை.

இவை யாவையும் அறிந்திருந்தும், அதாவது, ஜெபம் செய்தால் சிங்கக் கெபிக்குள் போடப்படுவது உறுதி என்று தெரிந்திருந்தும், தானியேல் தான் முன் செய்துவந்தபடியே தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான் என்று வாசிக்கிறோம். இந்தத் தைரியம் நம்மிடம் உண்டா? முன் செய்துவந்தபடியே, அதாவது, எப்போதும் என்ன வேலைப்பளு இருந்தாலும் எருசலேமின் தேவாலயம் இருக்கும் பக்கமாக ஜன்னலைத் திறந்துவைத்து மூன்று வேளையும் கிரமமாக ஜெபித்து வந்த தானியேலுக்கு, அதை எந்த சூழ்நிலையிலும் நிறுத்திவிட முடியவில்லை. ஏனெனில் தேவனோடு அவருக்கு இருந்த உறவு அவ்வளவு நெருக்கமாயிருந்தது. அதனால் அவர் தன் உயிரையும் துச்சமாக எண்ணினார்.

தேவபிள்ளையே, நமது ஜெபவாழ்க்கை எப்படிப்பட்டது? சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறுமா? அல்லது, தேவைக்கேற்றபடி நீளுமா? ஜெபம் என்பது தேவனோடுள்ள உறவு. அந்த உறவில் வேறு எதற்கும் இடமிருக்கக்கூடாது. ஜெபிக்க வேண்டுமென்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கும் ஒரு ஒழுங்கு, உள்ளான வாஞ்சை, வைராக்கியம் அவசியம். ஜெபிப்பதற்குத் தடைவந்தாலும்கூட அந்த உறவை விடமாட்டேன் என்ற வைராக்கியமாயிருந்த தானியேல் எங்கே? நாம் எங்கே?

ஜெபம்: பிதாவே, என்ன நேர்ந்தாலும் எது நேர்ந்தாலும் உம்மோடுள்ள உறவு மாத்திரம் கொள்ளையிடப்பட்டு விடாதபடி என்னை ஆட்கொள்ளும். ஆமென்.