பழிக்குப் பழிவாங்காமலும்…

தியானம்: செப்டம்பர் 24 சனி; வாசிப்பு: தானியேல் 6:23-24

செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத்
தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே
பிடிபடுவார்கள். (நீதி.; 11:6)

அநியாயமாக நமக்குத் துரோகம் பண்ணுகிறவர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? இன்றுகூட நம்மில் யார் யார், யார் யார் பேரில் ஆத்திரத்துடன் இருக்கிறோமோ? பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்…. நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோமர் 12:19) என்று வாசிக்கிறோம். மேலும், மனதால்கூட நாம் யாரையும் வெறுக்கக்கூடாது என்பதற்காகத்தான், சத்துருவையும் நேசி என்று ஆண்டவர் கற்றுத் தந்திருக்கிறார். கர்த்தர் யாவையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மாத்திரம் நமக்கிருந்தால் போதும்.

எஸ்தர் காலத்தில் தனக்கு மரியாதை செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஆமான், மொர்தெகாய்க்கு விரோதமாக தந்திர திட்டம் தீட்டி அவனையும் அவன் இனமாகிய யூதரையும் அழிக்க ஆயத்தமானான். அன்று ராஜாவின் நித்திரையைக் குழப்பிய தேவன் யாவையும் தலைகீழாக மாற்றிப் போட்டார். இறுதியில், ஆமான் மொர்தெகாய்க்காகச் செய்த அதே மரத்திலே தூக்கிலே போடப்பட்டான். இங்கேயும் அப்படியொரு காரியம்தான் நடந்தது. தானியேல் என்ன தவறு செய்தார் என்று அந்த பிரதானிகள் அவருக்கு எதிராக எழுந்தார்கள்? முழுவதும் எரிச்சலும் பொறாமையுமே தவிர வேறெதுவுமில்லை. தானியேலை ஒழிக்க அவர்கள் நேர்வழி செல்லவில்லை. தந்திரமாகத் திட்டம் வகுத்தார்கள். ராஜாவும் அத்திட்டத்தில் ஏமாந்துவிட்டார். ஆனால் சிங்கத்தின் வாயையே கட்டிப்போட்ட கர்த்தருக்கு ராஜாவிற்கு உண்மையைப் புலப்படுத்த எவ்வளவு நேரமாகும்? தானியேலின் மீது குற்றஞ்சாட்டினவர்களை மாத்திரமல்ல, அவர்களது மனைவிகளையும் குமாரரையும் சேர்த்து அதே கெபியிலே போடும்படி ராஜா கட்டளையிட்டான். அப்படியே ஆயிற்று.

கர்த்தர் யாவையும் பார்த்துக்கொள்வார். தீவினை செய்கிறவர்களை அவர் பார்த்துக்கொள்ளட்டும். நாமே சரிக்குச் சரிக்கட்ட தீவிரிக்காதபடி அல்லது ஆத்திரத்தை மனதில் அடக்கிக்கொண்டு தருணம் பார்த்திராதபடி அமைதலாயிருப்போமாக. மறுபுறத்தில் நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு வேறுவிதத்தில் தீமை நேரிட்டால் நம்மில் எத்தனைபேர் மனதளவிலாவது, இவனுக்கு இது தேவைதான் என்று திருப்திப்படுகிறோம். அதுவும் நமக்குத் தூரமாயிருப்பதாக. ஏனெனில், நமது தீவினைகளை இயேசு நமக்கு மன்னித்தாரே! மாத்திரமல்ல, தீமைக்குத் தீமை செய்தால் நமது எதிரிக்கு மாத்திரமல்ல; அது நமது நிம்மதியையும் கெடுத்துப் போடுவது நிச்சயம். ஆகவே, சகலத்தையும் கர்த்தர் பாதத்தில் வைத்துவிட்டு சுத்த மனதோடு தீமை செய்கிறவர்ளையும் நேசிக்கும் மனதைக் கட்டியெழுப்புவோமாக. மிகுதியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

ஜெபம்: பிதாவே, பழிக்குப் பழி வாங்க நினையாமலும், யாவையும் உம்மிடம் ஒப்புவித்து அமைதலாய் வாழ உமதாவியைத் தாரும் ஐயா. ஆமென்.