சத்திய வசனம்

தியானம்: செப்டம்பர் 26 திங்கள்; வாசிப்பு: தானியேல் 9:1-3

…இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்…
(வெளிப்படுத்தல் 19:9)

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்.119:105) ஆம், அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரியாத இருண்ட நமது வாழ்க்கைப் பாதைக்கு வேதவசனமே நமக்கு விளக்கு வெளிச்சம்! அந்த விளக்கு வெளிச்சம் கொடுக்காவிட்டால், அல்லது அதன் தீபம் மூடி மறைக்கப்பட்டால் அவ்விளக்கினால் என்ன பயன்? ஒருவர் சொன்ன இந்தக் காரியம் என்னைச் சிந்திக்கவைத்தது. உண்மைதான், வேதம் நம்மிடம் இருந்தும் பலனில்லை. அதன் வெளிப்பாடு, அதன் ஆலோசனை, வழிநடத்துதல் எதுவும் நம் வாழ்வில் இல்லாவிட்டால் நமக்கு அது பெரிய இழப்பையே கொண்டுவரும். ஏனெனில் கடந்தது, நடக்கிறது, முடிவு யாவையுமே இந்த வேதபுத்தகத்தில் மனிதன் அறியவேண்டிய விதத்தில் கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறார். நமது கையில் இருப்பது வெறும் புத்தகம் அல்ல. அது தேவனுடைய வெளிப்பாடு. அதிலுள்ளவை சத்தியமான வசனங்கள்.

பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் அரசாட்சியின் முதலாம், மூன்றாம் வருஷங்களிலே தானியேல் தரிசனங்களைக் கண்டார். இஸ்ரவேலுக்கு நடக்கப் போகும் காரியங்கள், முடிவுகாலத்துக்கு அடுத்த விஷயங்கள் யாவும் தானியேலுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் அவர் நினைவுகளில் கலங்கினார். சோர்வடைந்து வியாதிப்பட்டார்; திகைத்துப்போனார். ஆனால் அதன் காரியங்களை அறியும்படி அவர் யாரிடமும் போகவில்லை. தரியுவின் காலம்வரைக்கும் அவர் அமைதியாயிருந்தார். தரியுவின் முதலாம் வருஷத்திலே ஒரு புத்தகத்தை அவர் கண்டுகொண்டார். அதன்மூலம் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித் தீரும் வருஷங்கள் பற்றி கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே பேசியிருந்தது தெரியவந்தது. அதை அறிந்துகொண்டதும் அதைப் பறைசாற்றித் திரியவில்லை. உடனடியாக உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேவனைத் தேட ஆரம்பித்தார்.

தேவபிள்ளையே, உன் சொந்த வாழ்வின் கலக்கங்களா? நீ வாழும் பிரதேசத்தின் பிரச்சனைகளா? நாட்டின் சஞ்சலங்களா? எங்கேயும் ஓடித்திரியாதே. உன் கையிலிருக்கும் வேதப்புத்தகத்தைத் திறந்து படி. அதிலே எல்லாப் பதில்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்ற சத்தியமும் உண்டு. வாழ்வில் உனக்கு விளங்காதவற்றையும் அது உனக்கு விளங்கவைக்கும். உண்மையாய் அதைத் தேடு. நீ தேடுவதை அது உனக்குக் காட்டும். அதன்பின் அதற்கேற்றபடி ஜெபி. மனவேதனையோடே ஜெபி. நிச்சயம் பதில் கிடைக்கும்.

ஜெபம்: பிதாவே, என் கையில் நீர் தந்திருக்கும் விளக்கை மூடிவைக்காமல், அதன் வெளிச்சத்தை அறிந்து அதிலே நடக்க கிருபை செய்யும் ஐயா. ஆமென்.