பரிசுக்காக ஓடுதல்!
தியானம்: ஜுன் 12 ஞாயிறு; வாசிப்பு: 1 கொரிந்தியர் 9:24-27
‘நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.’
(1கொரி. 9:24)
பல ஓட்டப்போட்டிகளிலே கலந்துகொண்டு வெற்றியீட்டிய ஒரு வீரன், வெற்றியை நிர்ணயிக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும்போது இன்னும் அதிகமான ஆயத்தங்களிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். மாறாக, தன் இஷ்டம்போல அவன் இருக்கமுடியாது. கட்டுப்பாட்டோடும், இச்சையடக்கத்தோடும் பல்வேறுபட்ட பயிற்சிகளில் ஈடுபட்டவனாகவும், எப்போதும் சுறுசுறுப்பானவனாகவும், இறுதிப்போட்டியில் எப்படியாவது பரிசைத் தட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனுமே இருப்பான். தனது வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிக்கப்போகும் இறுதிப்போட்டி இதுவே என்பதில் அவன் எப்போதும் கரிசனை கொண்டவனாயிருப்பான்.
ஆனால் நமது வாழ்வின் ஓட்டத்திலே, பல்வேறுபட்ட ஓட்டங்கள் என்று இல்லை. நாம் ஓடுவதே கடைசியும் இறுதியுமான ஒரே ஓட்டம்தான். அதை நாம் எப்படியாக ஓடிக்கொண்டிருக்கிறோம்? நாம் எந்த ஓட்டத்திற்காக ஓட நிர்ணயிக்கப்பட்டோம் என்பதை இனங்கண்டு அதை வெற்றியோடு ஓடுவதே சிறந்த ஓட்டமாக இருக்கும். சிலர் இவ்வுலகிற்கு வந்த நோக்கத்தையே அறியாமல், ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று ஓட்டத்தை முடித்துக் கொள்ளுகிறார்கள். நாம் எப்படி? நமது வாழ்வின் சரியான இலக்கை அடைய நாம் ஓடும் இந்த ஓட்டத்துக்கும் பலவிதமான ஆயத்தங்களை நாம் செய்ய வேண்டும். ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதுகிறார். நமது வாழ்வின் ஓட்டத்துக்கும் ஒரு நோக்கம் நிச்சயமாக உண்டு. அதை நாம் சரிவர உணர்ந்து பிடித்துக்கொண்டு ஓடினால்தான் நாம் ஓட்டத்தை வெற்றியாக ஓடிமுடிக்க முடியும். ஒரு நோக்கமும் இல்லாத ஓட்டம் தோல்வியையே கண்டடையும் என்பதில் ஐயமில்லை.
ஓட்டப்போட்டியில் ஓடுகிறவனின் கண்கள் எப்போதுமே இலக்கை நோக்கியே இருக்கும். அவன் அங்கும் இங்கும் கண்களையோ மனதையோ அலையவிடமாட்டான். அதுபோலவே நோக்கத்தோடு ஓடுகின்ற ஒருவனது வாழ்க்கை ஓட்டமும் தான் அடையவேண்டிய இலக்கிலேயே நோக்கமாய் இருக்கும். அவன் வேறு பக்கமாய் இழுபட்டுப்போய் விழுந்து போகமாட்டான். நோக்கமில்லாமல் ஓடுகிறவனே பாதை தவறி இழுப்புண்டு விழுந்துபோகக் கூடும். நமது வாழ்விற்கு நோக்கமும், நோக்கத்தோடு கூடிய ஓட்டமுமே தேவை என்பது இப்போது புரிகிறதா? நாம் எங்கே, எந்நிலையில் இருக்கிறோம்; நமது வாழ்வில் தேவனின் நோக்கம் என்ன? சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
ஜெபம்: "அன்பின் ஆண்டவரே, இவ்வுலகில் என் வாழ்வுக்காய் நீர் வைத்திருக்கும் நோக்கத்தைக் கண்டறிந்து அதன்படி என்றும் நடக்க, சரியான இலக்கைச் சென்றடைய கிருபை செய்தருளும், ஆமென்."