பரியாசமா? பதறாதே!
தியானம்: நவம்பர் 13 ஞாயிறு; வாசிப்பு: நெகேமியா 2:9-20
‘அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே
பரியாசம்பண்ணி: ….தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்
திராணியில்லை, என்று சொல்லிக்கொண்டார்கள்.’ (மாற்கு 15:31,32)
பரியாசம் பண்ணும் கூட்டத்தார் அன்றும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அன்று இரட்சிப்பை அருளிய இரட்சகரையே பரியாசம் செய்தவர்கள், இன்றும், அந்த இரட்சிப்பின் வழியில் ஜீவிக்க எத்தனம் பண்ணும் பிள்ளைகளையும் பரியாசம் பண்ணத்தான் செய்கிறார்கள். மனம்போனபடி ஜீவித்து அழிவுக்கு நேராக சென்றுகொண்டிருக்கும்போது, ஆத்தும கரிசனையற்றிருக்கும் இந்தப் பரியாசக் கூட்டத்தார், நாம் வாழ்க்கையில் மாறுதலடைந்து, கர்த்தருக்குள் ஜீவிக்க ஆரம்பிக்கும்போது விழித்துக்கொள்கின்றனர். அதிக கரிசனையுள்ளவர்கள் போல் அதிக புத்திமதிகள் கூறுவார்கள். கேட்கவில்லையானால், ‘பைத்தியம்’ என்று பட்டம் வேறு சூட்டிவிடுவார்கள். நாம் சிறு தவறு செய்து விட்டாலும், ‘மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிப்பவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியாமல் போனானே’ என்று பரியாசம் பண்ணுவார்கள்; ‘செய்வதையும் செய்துவிட்டு ஜெபமும் செய்வான்’ என்று நையாண்டி பண்ணுவார்கள். ஆம், இப்படியான இடறல்கள் வரும்போது நிச்சயமாகவே சோர்வு ஏற்படத்தான் செய்யும். மேற்கொண்டு ஊழியங்களில் ஈடுபடவோ, ஜெபங்களில் பங்கெடுக்கவோ தயக்கமாக இருக்கும். உள்ளம் உடையும்.
இப்படியாக மனமடிவுக்குள்ளாகி இருக்கின்ற தேவபிள்ளையே, நீ திடன்கொண்டு எழுந்து நில். சிறையிருப்பிலிருந்து திரும்பிய நெகேமியா தேவாலயத்தின் அலங்கத்தைக் கட்டும்படி ஜனங்களைத் திடப்படுத்தினார். இது அவரது சொந்த வேலையல்ல; எருசலேம் தேவாலயம், தேவனுடைய வீடு. ஆனால் முதற்படியிலேயே அவருக்குக் கிடைத்தது, சன்பல்லாத்து, தொபியா, கேஷேம் என்பவர்களின் பரியாச வார்த்தைகளும், நிந்தைகளுமே. அதற்காக நெகேமியா தோற்றுப்போய் பின்வாங்கினாரா? சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்த்து, மற்றவர்களை இரட்சிக்கப் போகிறானாம்; முதலில் தன்னைத் தானே இரட்சிக்க முடியாமல் தொங்குகிறானே என்று பரிகசித்தார்கள். ஆனால் பிதாவின் சித்தத்திற்குத் தம்மை அர்ப்பணித்த ஆண்டவர்; அமைதலாயிருந்தார். ஆம், தேவ சித்தத்தை நிறைவேற்றப் புறப்படும்போது இப்படியான பரியாசங்களைச் சந்திக்க வேண்டியதுவரும். ஆனால் பரியாசத்திற்குள்ளான இயேசுவின் முடிவு சிலுவையல்லவே. வெறுமையான சிலுவையும் காலியான கல்லறையும் பரியாசங்களைத் தோற்கடித்துவிட்டது. இன்றும் நமக்கு அதுவே ஜெயத்தைக் கொடுக்கின்றது. ஆகையால் தைரியமாயிருங்கள்; இன்று உங்களைப் பரியாசம் பண்ணுகிறவர்களும் அந்த மேன்மையான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உங்கள் அமைதலுள்ள சாட்சிக்கூடாக தேவன் கிரியை செய்யலாமே!
ஜெபம்: “பிதாவே, உமது சித்தத்தை நிறைவேற்றுவதே என் வாழ்வின் ஒரே நோக்கமாக கொண்டு எந்தப் பரியாசங்களையும் தாங்கி முன்னேறிச் செல்ல எனக்கு அருள் புரிந்தருளும் ஆமென்.”