கரிசனையுள்ள தேவன்
தியானம்: பிப்ரவரி 22 புதன்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:6-7
“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேதுரு 5:7).
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.” (ஆதி.1:1,25). தேவன் சர்வ அதிகாரமும் மிக்கவர். அவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். சிருஷ்டித்தவர் சிருஷ்டிகளை அப்படியே விட்டுவிடவில்லை.ஒவ்வொருமுறையும் தாம் உண்டாக்கின ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்; அவை நல்லது என்று கண்டார். அவர் தமக்குள் பூரண திருப்தியடைந்த பின்னரே அடுத்ததைச் சிருஷ்டித்தார். இறுதியில் தாம் உண்டாக்கின சகலத்தையும் பார்த்து, அவை “மிகவும் நல்லது” என்று உறுதிப் படுத்தினார். அதாவது பூமியும் அதிலுள்ள அனைத்தும் தேவனுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
படைப்பாளியான தேவன் தமது படைப்புகளை விட்டுவிட்டுத் தூரம் போகிறவர் அல்ல. அத்தனை சிருஷ்டிகளிலும் மிகுந்த கரிசனை உள்ளவராயிருந்தார். இல்லாவிட்டால் இந்தப் பூமியைப் பண்படுத்தி அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மனிதனிடம் தமது பொறுப்பைக் கொடுத்திருப்பாரா? சகலத்தையும் நல்லது என்று கண்டவர், அவை நல்லவையாகவே இருக்கவேண்டும் என்று விரும்பினார். மனிதன் பாவத்தில் விழுந்தபோதுதானே இந்தப் பூமியும் சபிக்கப்பட்டது. தீமை உண்டானது. ஆனாலும் தேவன் கைவிடவில்லை. இன்றும் காட்டுப் பூவுக்கு உடுத்துவிப்பதிலும், காகங்களைப் போஷிப்பதிலும் தேவன் தமது கிருபையை விளங்கப்பண்ணுகிறாரே! அப்படியிருக்க, அவரது சாயலில் அவருக்கென்றே படைக்கப்பட்ட நம்முடைய விஷயத்தில் அவர் பாரா முகமாய் இருப்பாரா? அவர் தமக்கென்று தாமே படைத்த மனிதர்மீது கரிசனை உள்ள தேவன் என்பதை அடிக்கடி ஞாபகத்தில் வைத்திருங்கள்.
ஆகையால், “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6,7).
தேவன் சிருஷ்டிகர். அவர் நம்மைக் குறித்து கரிசனை கொண்டுள்ளார். நமது அன்றாடத் தேவைகளைக் குறித்த கவனம் தேவனுக்குண்டு. சிறிதோ பெரிதோ நமக்குக் கிடைக்கும் எல்லாமுமே தேவனுடைய கரத்திலிருந்துதான் கிடைக்கிறது. இத்தனை கரிசனையுள்ள தேவன் நல்லது என்று கண்டதை நாம் அசுத்தப்படுத்தலாமா? தேவனுடைய உன்னதமான படைப்பில் நாமும் அடங்கியுள்ளோம். அவர் நம்மில் கரிசனையாயிருப்பதுபோல அவர் மனதுக்கேற்றவிதமாக நல்லவர்களாக நாமும் இருப்போமாக!
ஜெபம்: சிருஷ்டிக்கர்த்தாவே, எங்களை நீர் படைத்தீர், எங்கள்மீது நீர் கொண்டி ருக்கும் கரிசனைக்காக அன்பிற்காக உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.