ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறீர்கள். மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ‘இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசகம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மாற்.10:42). ஆண்டவர் தாமே இதற்கேற்ற பலனை உங்களுக்குத் தந்து ஆசீர்வதிக்க நாங்களும் ஜெபிக்கிறோம்.

கடந்த நாட்களில் தியான புத்தகம் மூலமாக தாங்கள் பெற்ற நன்மைகளை எழுதித் தெரிவித்திருந்தீர்கள். இத்தியானங்கள் ஒவ்வொருவரது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதிக ஆசீர்வாதமாக இருப்பதை அறிந்து தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். மேலும் 2016 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை அட்டவணைப்படி வாசித்து முடித்தவர்களுடைய பெயர்களை இந்த இதழில் பிரசுரித்திருக்கிறோம். யாவருக்கும் எங்கள் பாராட்டுதல் களைத் தெரிவிக்கிறோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வாசித்து முடிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம். சத்தியவசன வானொலி பணிகள், தொலைகாட்சி ஊழியங்கள் யாவற்றிற்காகவும் உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் லெந்து நாட்கள் மற்றும் உயிர்த்தெழுந்த நாட்களுக்கான தியானங்களை சகோதரி.தர்ஷினி சேவியர் அவர்களும், ஏனைய தியானங்களை சகோ.தர்மகுல சிங்கம் அவர்களும் எழுதியுள்ளார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பாடு மரணங்களை அதிகமாக தியானித்து வருகிற இந்நாட்களில் இத்தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் பெலப்படுகிறதற்கு ஏதுவாயிருக்கும் என்றே கர்த்தருக்குள் நம்புகிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபியுங்கள்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்