சந்தோஷமான முடிவு!
தியானம்: ஜுன் 1 புதன்; வாசிப்பு: அப்போஸ்தலர் 20:17-32
'என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும்,
…இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே
விரும்புகிறேன்.' (அப்போஸ்தலர் 20:24)
ஓட்டப்பந்தயத்திலே ஓடுகிறவனுக்கு நிச்சயமாகவே ஒரு நோக்கம் இருக்கும். எதை நோக்கி ஓடுவது என்று ஒரு இலக்கும், அந்த இலக்கை சரிவர ஓடி முடிப்பதிலுமே அவனது நிறைவான சந்தோஷமும் இருக்கும். வாசற்கதவைத் திறந்துகொண்டு, வெளியிலே காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் எங்கே போகிறோம் என்ற ஒரு நோக்கமும், தீர்மானமும் வேண்டும். இவ்விதமாக சிறிய பிரயாணங்களுக்கும், ஓட்டங்களுக்குமே ஒரு நோக்கம் இருக்குமானால், நமது வாழ்க்கைப் பயணத்துக்கு, ஒரு நோக்கம் இல்லாமல் எப்படி வாழ முடியும்? உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று சாதாரணமாக ஒருவரிடம் கேட்டால், வைத்தியராவது, பொறியியலாளராவது, போதகராவது என்று சொல்லக்கூடும். ஆனால் தாயின் கர்ப்பத்தில் நம்மை உருவாக்கி இவ்வுலகிற்கு கொண்டுவந்த தேவன், நமது வாழ்வுக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அவர் தந்த மீட்பை நம் வாழ்விலே பெற்று, அவர் சித்தப் படியாக, அவர் நம் வாழ்விலே வைத்திருக்கும் நோக்கத்தை நோக்கி ஓடுவோமானால், அந்த ஓட்டமே வெற்றியான சந்தோஷமான முடிவாக அமையும்.
இன்றைய தியானப்பகுதியிலே, பவுல் தனது ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க விரும்புவதாகவும், இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார். அதற்காக அவர் கொடுத்த விலைக் கிரயமோ, மனத்தாழ்மை, கண்ணீர், யூதருடைய தீமையான யோசனையால் வந்த சோதனைகள், கட்டுக்கள், உபத்திரவங்கள், உயிராபத்துக்கள், ஆபத்துக்கள் என்று பல. இத்தனைக்கும் மத்தியிலும் தனது ஓட்டத்தைச் சந்தோஷமாக முடிக்கவே அவர் எத்தனிக்கிறார் என்று சொன்னால், அவர் தனது வாழ்வின் நோக்கத்துக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா!
நமது வாழ்வின் நோக்கம் என்ன? நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்? நமது வாழ்வின் ஓட்டத்தில் தேவனின் சித்தம், நமது வாழ்வுக்கான அவரது நோக்கம் நிறைவேற்றப்படுகிறதா? அல்லாவிட்டால், இவ்வுலகத்தோடு முடிந்துபோகும் பணம், பொருள், அந்தஸ்து, அழகு, பெருமை, சரீர இச்சை இவற்றை மாத்திரம் நோக்கித்தான் நமது ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோமா? அழிந்துபோகும் காரியங்களைக் குறித்ததான நமது ஓட்டம் நிச்சயமாகவே நமக்கு சந்தோஷமான முடிவைத் தரப்போவதில்லை. அழிவை நோக்கி ஓடினால் நாம் அழிந்துபோவதும் நிச்சயம். தேவனை நோக்கிப் பார்ப்போம். அவரது சித்தப்படியாக நமது ஓட்டத்தை ஓடுவோம்.
ஜெபம்: "எனது வாழ்வுக்கு நீர் வைத்திருக்கும் நோக்கத்தை மறந்து ஓடிக்கொண்டிருக்கும் என்னை இன்று நோக்கிப் பாரும் ஆண்டவரே. உன்னதமான உமது திட்டத்தின் நோக்கத்தை நோக்கி ஓட கிருபை தாரும்." ஆமென்."