தேவனுக்கே மகிமை!

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2017)
– Dr.உட்ரோ குரோல்

 வேதபகுதி : நியாயாதிபதிகள் 7:1-25
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது (நியாதி.7:1).

இயல்பாகவே மனிதன் இறைவனைத் தேடும் மனநிலை கொண்டவனாய் உள்ளான். பரிணாமக் கொள்கையானது ‘இறைவனே சிருஷ்டிகர்’ என்ற கருத்தை மறுக்கிறது. தாராளவாதிகளான சில இறைவல்லுநர்களும் வேதாகமத்தில் காணப்படும் தேவனுடைய அற்புதங்களை ஏற்காமல் பல மரபு இயல்புகளை மாற்ற முயற்சிக்கின்றனர். இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட அபூர்வ காரியங்களை மனிதன் மறுத்து அதனைத் தன்னால் இயன்ற அளவு வேறுமுறைகளில் விளக்கமளிக்க முயற்சிக்கிறான்.

தம்முடைய பதவியையும் அதிகாரத்தையும் அபகரிக்க விரும்பும் மனிதனின் இயல்பை தேவன் நன்கு அறிவார். தேவனால் மாத்திரமே விடுதலையைத் தரமுடியும் என்று மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில சிக்கலானச் சூழ்நிலைகளை அவர் உருவாக்கினார் என்று வேதாகமத்தில் பல இடங்களில் நாம் வாசிக்கிறோம். இயல்பான விளக்கத்தைக் கூற இயலாத காரியங்களை அவர் நீக்கிவிடும்பொழுது, மனிதன் தேவனுடைய அதிசய செயல்களைத் தெளிவுற அறிந்துகொள்கிறான். இன்றைய வேதப்பகுதியும் அவ்விதமான ஒன்று.

மீதியானியருக்கு விரோதமான ஒரு யுத்தத்துக்கு இஸ்ரவேலர் ஆயத்தமாகிக் கூடிவந்தனர். தேவனுடைய பிரசன்னத்தின் உறுதியைப் பெற்றுக்கொள்ள கிதியோன் தோலில் அடையாளத்தைக் காண காத்திருந்ததற்காய் யுத்தம் இரண்டு நாட்கள் தாமதமானது. இரண்டாவது நாளின் காலையில் கிதியோனும் அவனுடன் இருந்த மக்களும் “அதிகாலையில் எழுந்து ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்” (நியா.7:1). போரிட ஆர்வத்துடன் முன்சென்ற வீரர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர்களாய் உள்ளனர் என தேவன் கிதியோனிடம் கூறினார். தேவனுடைய கரமே வெற்றியைத் தந்தது என கிதியோனும் இஸ்ரவேலரும் மற்ற தேசத்தார் அனைவரும் அறிய வேண்டும் என தேவன் எண்ணினார். எனவே அவர் கிதியோனிடம் முப்பத்திரண்டாயிரம் போர்வீரர்களில் யுத்தத்துக்கு பயப்படுபவர்களைத் திரும்பிச் செல்லக் கட்டளையிடச் சொன்னார். தங்களுடைய அச்சத்தையும் திகிலையும் ஒப்புக்கொண்டு இருபத்திரண்டாயிரம்பேர் திரும்பிச் சென்றது கிதியோனுக்கு அதிர்ச்சியை அளித்தது. முப்பத்தைந்தாயிரம் மீதியானியருக்கு எதிராக பத்தாயிரம் இஸ்ரவேலர் சென்று போரிட்டு வென்றால் அது தேவனால் தரப்பட்ட வெற்றியாகும். ஆனால், இந்த பத்தாயிரம் பேரும் அதிகம் என தேவன் கூறியது கிதியோனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இப்போர்வீரர்களை வித்தியாசமான கடினமான ஒரு சோதனைக்குக் கீழ்ப்படுத்த ஆரோத் என்னும் நீருற்றின் அருகில் பாளயமிறங்கக் கிதியோன் கட்டளை பெற்றான். தண்ணீரை நாய்போல நக்கிக் குடித்தவர்கள், முழங்கால் ஊன்றிக் குனிந்து குடித்தவர்கள் என வீரர்கள் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். இந்த சோதனையின் நோக்கம் எதுவாக இருந்தாலும் கிதியோனின் படைக்கு முந்நூறு பேர் மாத்திரமே தெரிந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்ததாக தேவன் கிதியோனை அவனுடைய வேலைக்காரன் பூராவுடன் மீதியானியரின் கூடாரத்துக்குச் செல்ல அறிவுரை கூறினார். அவர்கள் அங்கு சென்றபொழுது ஒருவன் மற்றவனிடம் தான் கண்ட கனவினைப் பகிர்ந்துகொண்டிருந்தான். “சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரம் மட்டும் வந்தபோது, அதை விழத் தள்ளிக் கவிழ்த்துப் போட்டது; கூடாரம் விழுந்துகிடந்தது” என்று கூற, மற்றவன் “அது கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும் இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக் கொடுத்தார்” என்றான். கனவினையும் அதன் பொருளையும் செவியுற்ற கிதியோன் உடனடியாக இஸ்ரவேலின் பாளையத்துக்கு வந்து, “எழுந்திருங்கள். கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார்” என்று கூறினான். முந்நூறு இஸ்ரவேலர் மீதியானியரை வென்றனர். மகிமையனைத்தும் தேவனுக்கே உரித்தானது.

அசாதாரண சூழ்நிலையைக் கண்டு நாம் தயங்கக்கூடாது. நம்முடைய வெற்றிக்கு எதிரான காரணிகள் சில இருந்தாலும் அது நம் வெற்றியின் மூலம் தேவன் பெறும் மகிமைக்கு ஏது வானவைகளாகும். மாபெரும் படையைவிட அர்ப்பணிப்புள்ள சிறு குழுவே சிறந்தது. அமெரிக்க தேசத்தின் கடற்படையின் முழக்கமானது, “சில நல்ல மனிதர்கள்” என்பதாகும். தேவனும் இவர்களையே எதிர்பார்க்கிறார். நீங்கள் இவ்வாறான ஒருவரா?


அதிகாலைப் பாடல்:

இரட்சிப்பின் தலைக்கவசம் அணிந்தும்
சத்தியம் என்னும் கச்சையைக் கட்டியும்
விசுவாச வீரராய் விழித்தெழும்புவோம்.
சுகமான கூடாரத்தை தள்ளிவிட்டு
நாம் காணும் ஒவ்வொரு எதிரியையும்
எதிர்த்து பயப்படாமல் முன்னோக்கி
வரிசையாகச் செல்லுவோம்
உலகமனைத்தும் நமது காலடியில்;
ஜெயகிறிஸ்து நம்முன் செல்ல
நம் வெற்றி கீதம் எங்கும் எதிரொலிக்கட்டும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை