அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் குழுவினரது மொழிபெயர்ப்புப் பணிகளின் காரணமாக 1863-ல் புதிய ஏற்பாடும் 1868-ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறவில்லை.

மாறாக, புதிய மொழிபெயர்ப்பு இன்னும் திருத்தப்படவேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டினர். அதேசமயம், புதிய மொழிபெயர்ப்பு மூலமொழியைத் தழுவியதாயிருக்கையில் தமது மொழிபெயர்ப்பு தமிழ் நடையில் சிறந்ததாயிருக்கின்றமையினால், இவ்விரண்டையும் ஒருங்கே கொண்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்க யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தீர்மானித்தனர். எனினும், அச்சமயம் இன்னுமொரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்ய சென்னை வேதாகமச் சங்கம் விரும்பாததினால், யாழ்ப்பாண மிஷனெரிகளின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பைத் திருத்த தீர்மானித்தது. மூலமொழியில் உள்ள ஒரு வார்த்தையைப் பலவாறு தமிழில் எழுதக்கூடிய தாயிருப்பினும் அழகிய சொற்களை உபயோகிப்பதே நல்லது என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறினர்.

1869-ல் இரு நாட்டினது மிஷனரிகளும் ஹென்றி பவரின் வீட்டில் கூடி அவரது மொழிபெயர்ப்பைத் திருத்தினர். மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் 468 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதுபோல ஏனைய புத்தகங்களிலும் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுவரை காலமும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், ஹென்றி பவரின் திருத்தப் பதிப்பு பெப்ரீஷியசினுடைய மொழி நடையையே பின்பற்றியது. எனினும், தேவை ஏற்படும்போது ரேனியஸ் மற்றும் பேர்சிவெல் என்போருடைய மொழிபெயர்ப்புகளில் இருந்தும் சொற்கள் எடுக்கப்பட்டன.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் 1871-ல் சென்னையில் அச்சிடப்பட்டது. லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபைகளையும் சேர்ந்தவர்கள் இத்திருத்த மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு, ஐக்கியப் பதிப்பு அல்லது ஒன்றிணைப்புப் பதிப்பு என அழைக்கப்படுகின்றது. லூத்தரன் சபையினர் மட்டும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.

ஹென்றி பவரின் தலைமையின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனையின்படி திருத்தப்பட்ட ஐக்கியப் பதிப்பு வேதாகமமே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் வேதாகமமாகும். வேதாகமம் முதன்முதலில் 1714-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், நாம் இன்று 1871-ல் வெளி வந்த திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே உபயோகிப்பது அநேக கிறிஸ்தவர்கள் அறியாத ஒரு உண்மையாகும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தாம் உபயோகிக்கும் வேதாகமமே முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதென்றும், இதை எவ்வகையிலும் திருத்த முயல்வது தேவனுடைய வார்த்தையை மாற்றுவது எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். ஆயினும், நாம் உபயோகிக்கும் வேதாகமம் பல தடவைகள் திருப்பி மொழி பெயர்க்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருப்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பிலும், அதைத் திருத்தும் பணியிலும் எல்லா மிஷனரி சங்கங்களையும் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் எல்லோரும் அதையே உபயோகிக்கத் தொடங்கினர். மேலும் வேதாகம மொழிபெயர்ப்பு பற்றி அக்காலத்தில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களை இம்மொழி பெயர்ப்பு திருப்திப்படுத்துவதாய் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இம்மொழி பெயர்ப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஹென்றி பவர், தமது மொழி பெயர்ப்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மொழி பெயர்ப்பாக இருப்பதற்காக, மொழி பெயர்ப்பு பற்றி எவர் எதைச்சொன்னாலும் அதையெல்லாம் கவனித்துக் கேட்டு எல்லோரிடமும் ஆலோசனைகளைப் பெற்று வேதாகமத்தை மொழி பெயர்த்துள்ளார்.

இதனால்தான், முதலில் தான் மொழிபெயர்த்த வேதாகமத்தைத் திருத்தவேண்டும் என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறியபோது, அவர்களது ஆலோசனையின்படி தனது மொழிபெயர்ப்பைத் திருத்தினார். இம்மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் வேதாகமச் சங்கம் வேறு எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் அச்சிடாததினால், நாளடைவில் இதுமட்டுமே தமிழ் மொழியில் இருக்கும் வேதாகமம் எனும் கருத்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

(தொடரும்)