விசுவாச அறிக்கை
தியானம்: 2017 நவம்பர் 3 வெள்ளி; வேத வாசிப்பு: யோசுவா 1:10-18
“…இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள்….” (யோசுவா 1:11).
“மரணபயம்தான் நேரிட்டாலும் முன்னோக்கிச் செல்வதே விசுவாசம்.” இச்சிறுகுறிப்பை எழுதியவர் யார் என்பது அறியப்படாவிட்டாலும், இதில் உண்மை உண்டு. தேவனை நம்பாமல் பின்வாங்கிப்போய் ஜீவிப்பதைவிட, தேவ நாமம் மகிமைப்படும்படி மரணத்தைச் சந்திக்க நேர்ந்தால் அது எவ்வளவோ மேல். இது சொல்லுவதற்கு இலகு என்றாலும் மரண பயமுறுத்தல் யாரைத்தான் விட்டது? என்றாலும் அதை வென்று ஜெயமெடுத்தவர்களும் அநேகர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் யோசுவா.
மோசேக்குப் பின்பு இஸ்ரவேல், யோசுவாவின் தலைமையில் கானான் பயணத்தைத் தொடரவேண்டியதிருந்தது. ஆரம்பத்தில் ஒரு சிவந்த சமுத்திரம்; இங்கே ஒரு யோர்தான் நதி. கானானை நெருங்கியபோதும், இந்த நதி அவர்களுக்குப் பெருத்த தடையாகத் தெரிந்தது. அது அறுப்புக்காலம்; இதுவும் தேவ திட்டமோ! ஏனெனில் யோர்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தை இந்த நதிக்கூடாகக் கடக்கப்பண்ணுவது என்பது முடியாத காரியம். மாத்திரமல்ல, இந்த நதிக்கூடாகவே செல்லவேண்டும் என்று சொன்னால், ஜனங்கள் நிச்சயம் முறு முறுப்பார்கள்; அதற்கும் யோசுவா முகங்கொடுக்க நேரிடும். அதற்காக யோசுவா மாற்று வழிகளைத் தேடவில்லை. மாறாக, இன்னும் மூன்று நாளைக்குள் இந்த நதியைக் கடந்துபோவீர்கள் என்று யோசுவா நிச்சயமாய் சொல்லிவிட்டார்.
ஒருவனின் சிந்தனையும் பார்வையும் எதை நோக்குகின்றதோ, அதுவே அவன் வாயின் வார்த்தையாக வெளிப்படுவதுடன், அதுவே அவனுடைய வாழ்க்கைப் பயணத்தையும் நிர்ணயிக்கின்றது. “நீங்கள் கடந்துபோவீர்கள்” என்ற யோசுவாவின் திட்டவட்டமான வார்த்தைகள் அவனது மனநோக்கும் பார்வையும் எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. மாத்திரமல்ல, “போவீர்கள்” என்னும்போது தங்கள் பயணத்தைக் குறித்த உறுதியையும் முடிவையும்கூட யோசுவா வெளிப்படுத்திவிட்டார்.
நமது வாழ்க்கைப் பயணத்திலும் முன்செல்ல முடியாதபடி பல பாடுகளும் தடைகளும் நமக்கு எதிராயிருக்கலாம். இவற்றை உணரும்போது அல்லது கண்கள் இவற்றை நோக்கும்போது நாம் என்ன சிந்திக்கிறோம்? என்ன அறிக்கை பண்ணுகிறோம்? தேவனிடம் நம்பிக்கை இருக்குமானால் எந்தத் தடையும் நமக்குத் தூசிதான். அந்த உறுதி நமக்குண்டா?
“நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாய்… இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அது அப்படியே ஆகும்” (மத்தேயு 21:21).
ஜெபம்: எங்கள் நம்பிக்கைக்குரியவரே, எங்களது சிந்தனை, மனநோக்கு, பார்வை எல்லாம் எப்போதும் தேவனுடைய வார்த்தையில் உறுதியாயிருக்க உமது பெலனைத் தந்தருளும். ஆமென்.