கொடுத்த வாக்கைக் காப்பாற்று

தியானம்: 2017 நவம்பர் 18 சனி; வேத வாசிப்பு: யோசுவா 6:22-25

“…நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்” (யோசுவா.6:22).

நமக்கு யாராவது ஒரு உதவி செய்துவிட்டால், “இந்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன். உங்களுக்கு நான் நிச்சயம் இன்னது செய்வேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், பின்னர் சந்தர்ப்பம் வரும்போது சாக்குச் சொல்லி நழுவுவது சரியல்ல. ஒன்று செய்யக்கூடியதைச் சொல்லவேண்டும்; அல்லது வாக்குக் கொடுக்கக்கூடாது.

யோர்தானைக் கடந்ததும், அரணான பட்டணமாகிய எரிகோவின் நிலையை அறிந்துவரும்படி யோசுவா இரண்டு வேவுகாரரை அனுப்பினான். இஸ்ரவேலின் வேவுகாரர் பட்டணத்திற்குள் வந்துவிட்டார்கள் என்று அறிந்த ராஜா, பட்டணத்து அலங்கத்தின் மதிலில் வீடுகட்டிக் குடியிருந்த வேசியாகிய ராகாபிடம் விசாரிக்கும்படி ஆட்களை அனுப்பினான். ராகாபோ மிக ஞானமாக இஸ்ரவேலின் வேவுகாரரைத் தப்புவித்தாள். மாத்திரமல்ல, எரிகோ, இஸ்ரவேலுக்குப் பயந்திருக்கிறது என்ற செய்தியையும் சொன்னாள். அவர்களைத் தப்புவித்ததால் தன் குடும்பத்தை அவர்கள் காப்பாற்றவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். அதற்கு அவர்கள்: “நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்” (2:11-14). இதுவே இஸ்ரவேல் ராகாபுக்குக் கொடுத்த வாக்கு. இப்போ, எரிகோ விழுந்துவிட்டது. அந்த சந்தோஷத்தில் யோசுவா கொடுத்த வாக்கை மறக்கவில்லை. அவளையும் அவளது குடும்பத்தையும் தப்புவித்தான். அன்று எரிகோவில் தப்பியது ராகாபின் குடும்பம் ஒன்றுதான்.

யோசுவா, தன் காரியம் முடிந்தது என்று தப்பித்துக்கொள்ளவில்லை. அவள் தவறானவள், அவளும் சாகட்டும் என்று விட்டுவிடவுமில்லை. ஒரு வேசி என்றும் பாராமல், அவளுக்குக் கொடுத்த வாக்கை யோசுவா காப்பாற்றியதற்கு முக்கிய காரணம், அவன் கர்த்தருக்குப் பயந்தவன் என்பதேயாகும். யாருக்கென்றாலும், கொடுத்த வாக்குக் கொடுத்ததுதான். நாம் உண்மையாகவோ, உணர்ச்சிவசப்பட்டோ சக மனிதருக்குக் கொடுக்கின்ற வாக்கை நிறைவேற்ற முடியாதிருப்பதற்கு முக்கிய காரணம் நமக்குள் கர்த்தருக்குப் பயப்படும் பயம் மிகவும் குறைவு என்பதேயாகும். வாக்குமாறாத தேவனுடைய பிள்ளைகள் நாம் வாக்குமாறலாமா? கூடாதல்லவா!

“கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் என்றும், …. அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்” (உபா.26:17).

ஜெபம்: தேவனே, பிறருக்குக் கொடுத்த வாக்கில் உண்மைத்துவத்துடன் நடந்து கொள்வதற்கு உமது பெலனைத் தந்தருளும்.  ஆமென்.