பாவத்துக்கு அழைத்துச் செல்லும் படிகள்

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2012)
Dr.உட்ரோ குரோல்

காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின்
கையில் கொடுத்து அனுப்பினான் (2 சாமு.11:14).

அமெரிக்க நாட்டின் அதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கன், புகழேணியின் உச்சியை அடையும் வேளையில் மரித்துவிட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஒருவேளை இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் சில தவறுகளால் அவரது புகழுக்கு இழுக்கு வந்திருக்க வாய்ப்புகள் உண்டாயிருக்கும் என்றனர். இஸ்ரவேலின் இராஜாவான தாவீதுக்கும் இதுபோன்றதோர் நிகழ்வு நடந்தது. அவன் மாபெரும் அரசனாக மாறி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் உரியாவின் மனைவியான பத்சேபாளுடன் மாபெரும் பாவம் செய்யவும், உரியாவின் மரணத்துக்குக் காரணமாகவும் அமைய நேரிட்டது.

யோர்தான் நதிக்குக் கிழக்கே வாழ்ந்த அம்மோன் புத்திரருடன் தாவீது யுத்தம் செய்தான். ரப்பா பட்டணத்தை (தற்காலத்தில் இது ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மான்) முற்றுகையிட தனது படைத்தலைவனான யோவாபை அனுப்பிவிட்டு, தாவீது எருசலேமில் இருந்துவிட்டான். போர்க்களத்தின் இரைச்சலுக்கும், ஆபத்துக்கும் விலகி, அரண்மனையின் ஆடம்பரத்தையும் சுகபோகத்தையும் அனுபவிக்க எண்ணியிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவன் அரண்மனையில் தங்கியது, தேவனுக்கு விரோதமான பாவத்துக்கு நேராய் அவனை நடத்திற்று. ஆதாம், ஏவாள், ஆகான் போன்றவர்களையும் பாவத்துக்கு அழைத்துச் சென்ற படிகளே அவை. தாவீதை பாவத்தில் விழ வைத்த படிகளை நாம் ஆராய்வோமானால் அவைகள் மிகச் சாதாரணமானவைகளே என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

படி 1:

ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தனது அரண்மனையின் உப்பரிகைக்குச் சென்று உலாத்திக் கொண்டிருக்கும்பொழுது ஓர் அழகிய பெண் நீராடுவதைக் கண்டான். கண்ணால் காண்பது பாவமாகாது. சிலவேளைகளில் பாவமான காரியங்களைப் பார்க்கவேண்டிய கட்டாய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். பாவம் எப்பொழுதும் பார்வையில் அல்லது உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளிலேதான் ஆரம்பமாகும். ஆனால் இரண்டாம் முறை காணக்கூடாததைக் காண்பதே பாவமாகும். முதலாவது தாவீதின் எண்ணங்களில் பாவம் விழுந்தது.

படி 2:

நீராடிக்கொண்டிருந்த ஸ்திரீயைப் பார்க்க நேர்ந்தது பாவமல்ல; ஆனால் அதைப் பார்த்து இச்சித்ததும், அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டான். மேலும் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். அதனால் அவனது இரண்டாவது பார்வை இச்சையாக மாறிவிட்டது. இவ்வாறு தாவீதின்உணர்ச்சிகளில் பாவம் உண்டாயிற்று.

படி 3:

அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள் (2சாமு.11:4). தாவீது தனது இச்சையை கிரியைகளில் வெளிப்படுத்தினான். ஏதேன் தோட்டத்தில் பார்வைக்கு இன்பமாய் இருந்த கனியைப் புசித்த ஏவாளைப் போலவும், எரிகோவுக்கு எதிரான போரில் சாபத்தீடானதை இச்சித்து எடுத்து ஒளித்து வைத்த ஆகானைப் போலவும் தாவீது தன் கண்கள் இச்சித்த பெண்ணுடன் பாவத்தில் ஈடுபட்டான். முன்றாவதாக, தாவீதின் சரீரத்தில் பாவம் செயலாக்கப்பட்டது.

கண்களின் இச்சை கர்ப்பம் தரித்து பாவத்துக்கு அழைத்துச் செல்லும் படிகள் உலகம் முழுவதிலும் ஒன்று போலவே காணப்படுகின்றன. தாவீதைப்போலவே நம்மையும் அந்த இச்சையானது நிலைகுலையச் செய்துவிடும். பாவத்தில் ஓரடி எடுத்து வைத்துவிட்டோமானால் அது அடுத்தநிலை, அடுத்தநிலை என்று அடுக்கடுக்காக அழைத்துச் சென்று, நம்மால் தடுக்கவோ அல்லது அதிலிருந்து வெளிவரவோ முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். பார்வையை முதல் நிலையிலேயே தடுக்காததால், தனக்கு அவகீர்த்தியையும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாற்றில் ஒரு தலைக்குனிவையும் உண்டாக்கி விட்டான்.

விபச்சாரப் பாவம் ஒரு தனிப்பட்ட மனிதனை மாத்திரமல்ல, அவனுடன் தொடர்புடைய மற்றவர்களையும் பாதிக்கும் ஒரு செயலாகும்.

படி 4:

தாவீதின் பாவத்துக்கு அப்பாவியான பத்சேபாளின் கணவனாகிய ஏத்தியனாகிய உரியா தன் உயிரை இழக்கும்படி நேரிட்டது. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள் (2சாமு. 11:5). பாவத்தின் விளைவை மறைக்க தாவீது முயற்சிசெய்து தோல்வியையே தழுவினான். ஏத்தியனாகிய உரியாவை எருசலேமுக்கு வர வழைத்து யுத்தத்தின் காரியத்தைக் கேட்பதுபோல நடித்தான்.

பின்னர் உரியாவை அவனது வீட்டுக்கு அனுப்பினான். ஒருவேளை அன்றிரவு உரியா தன் மனைவியுடன் தங்கியிருந்தால், அவனே பத்சேபாளின் கர்ப்பத்திற்குக் காரணம் என யாவரும் எண்ணியிருப்பர். தனது பாவமும் மறைக்கப்பட்டுவிடும் என்று தாவீது எண்ணினான். ஆனால் இராஜ விசுவாசம் கொண்ட உரியாவோ, சகவீரர்கள் போர்முனையில் இருக்கும்போது தனது மனைவியுடன் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவன் அன்றிரவு தன் வீட்டுக்குப் போகாமல் சேவகர்களுடனே படுத்துக்கொண்டான். ஏமாற்றமடைந்த தாவீது, அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான் (வச. 13).

உரியா தனது குடிவெறியிலும் இராஜவிசுவாசம் குறையாமல் உண்மையாய் இருந்தான். இத்திட்டம் பலிக்காததால் பத்சேபாளின் குழந்தை உரியாவினுடையது அல்ல என்ற உண்மை உலகுக்கு வெளிப்பட்டுவிடுமே என்று தாவீது பயந்தான். மறுநாள் காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான் (2 சாமு.11:15). அரசனுடைய கட்டளையின்படியே உரியா போரில் செத்தான். தனது விபச்சார பாவத்துடன் உரியாவைக் கொலை செய்த பாவத்தையும் தாவீது கூட்டிக் கொண்டான்.

இஸ்ரவேல் ஜனங்களின் மேல் இராஜாவாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதனிடம் இத்தகைய கீழ்த்தரமான செயலை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.

பாவத்தின் வாசலில் நாம் தயங்கி நிற்கும்போது அது தன் கதவை விரிவாகத் திறந்து, நம்மை ஆர்வமுடன் வரவேற்கும். நாம் சற்றே உள்ளே நுழைவோமானால் அது நம்மை நிச்சயமாகவே பாதாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.

தாவீது அரசன் தனது உப்பரிகையின்மேலிருந்து ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த பத்சேபாளை நீண்ட நேரம் கவனித்துவிட்டார். அச்சோதனையின் ஆரம்பத்திலேயே அவர் உப்பரிகையிலிருந்து இறங்கியிருந்தால் பாவத்தின் பிடியில் சிக்கியிருக்கமாட்டார். நீங்களும் நானும் சோதனைக்கு விலகியோடி தீமைக்கு விலகியிருந்தால் மாத்திரமே நாம் தேவனுக்கு உண்மையாக வாழ முடியும். பாவமென்னும் கிருமியைத் தடுக்கும் சக்தி நம்மில் எவருக்கும் இல்லை. தேவ வசனமாகிய சத்திய வேதத்தை நம் இருதயத்திலும் சிந்தையிலும் நிரப்பியிருந்தால்மட்டுமே இப்பாவத்தின் வல்லமைக்கு நாம் விலகியிருக்க முடியும்.

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்.119:9,11) என்ற சங்கீதக்காரனின் சாட்சி நம்முடை யதாக தேவன் உதவி செய்வாராக.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை