அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2012)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(2) டச்சு மொழிபெயர்ப்பு

ஐரோப்பாவிலுள்ள ஒல்லாந்து மற்றும் பெல்ஜியம் எனும் நாடுகளில் பேசப்படும் டச்சு மொழியில், 16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்த காலம்வரை வேதாகமத்தின் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனினும் அவை நேரடியான மொழி பெயர்ப்புகளாய் இராமல், விளக்க மொழிபெயர்ப்புகளாகவே இருந்தன. இவற்றுள், இன்றுவரை இருக்கும் மிகப் பழைய கையெழுத்துப்பிரதி கி.பி.10 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த சங்கீதப் புத்தகத்தின் விளக்க மொழிபெயர்ப்பாகும். இது லிம்பேர்க் எனுமிடத்தைச் சேர்ந்த ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியில் ஏற்பட்ட எழுப்புதல் காரணமாக வேதாகமமானது டச்சு மொழியில் நேரடியாக மொழிபெயர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டமையினால் சில டச்சு மொழி வேதாகமங்கள் வெளியிடப்பட்டன. இவற்றுள் இன்றிருக்கும் பிரதிகளுள் முக்கியமானது கி.பி.2 ஆம் நூற்றாண்டில் டேட்டியன் என்பவரினால் ஒருங்கிணைக்கப்பட்ட சுவிசேஷப் புத்தகங்களில் இருந்து (லத்தீன் மொழியில் இருந்து) மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

1271 இல் ஜேக்கப் வொன் மீர்லன்ட் என்பவர், டச்சு மொழியில் வேதாகம சரித்திர புத்தகமொன்றை வெளியிட்டார். அதே சமயம் பெல்ஜியம் பகுதியில் பேசப்பட்டுவந்த டச்சு மொழியில் சங்கீதப் புத்தகங்களும், 1300இல் சுவிசேஷங்களும், நிருபங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. மேலும் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒல்லாந்தில் பேசப்பட்ட டச்சு மொழியில் வேதாகமப் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டதோடு பல சுவிசேஷப் புத்தகங்களின் தொகுப்பு நூல்களும் வெளிவந்தன. 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இன்னுமொரு வேதாகம சரித்திர புத்தகம் டச்சு மொழியில் வெளியிடப்பட்டது.

1384 இல் ஜோஹான் ஸ்குட்கன் என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்ட டச்சு மொழி புதிய ஏற்பாடும், சங்கீதங்களும் பிரபல்யம் பெற்ற மொழிபெயர்ப்பாக இருந்தது. சங்கீதங்கள் தவிர்ந்த ஏனைய பழைய ஏற்பாட்டின் பகுதிகள் 1477 இல் டெல்ஃட் எனும் இடத்தில் அச்சிடப்பட்டது. டச்சு மொழியில் முதன் முதலில் அச்சிடப்பட்ட இவ்வேதாகமம் 1300 ஆம் ஆண்டு ஃலெமின் என்பவரினால் லத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட வேதப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக நம்பப்படுகின்றது. 1480 இல் சங்கீதப் புத்தக மொழி பெயர்ப்பு இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரை 1522 ஆம் ஆண்டே அதன் டச்சு மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகியது. அன்ட்வேர்ப் எனுமிடத்தில் வெளியிடப்பட்ட இவ்வேதாகமம், லத்தீன் மொழியிலிருந்து டச்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1522 இல் சபை சீர்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் மொழி பெயர்த்த ஜெர்மன் வேதாகமம் வெளிவந்த பின்னர், பலர் அதை டச்சு மொழிக்கு மொழிபெயர்க்கத் தொடங்கியமையினால், 1523 இல் அன்ட்வேர்ப் மற்றும் அம்ஸ்டர்டாம் எனுமிடங்களில் புதிய ஏற்பாட்டின் புதிய டச்சு மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதற்குப் பிறகு இன்னும் சில இடங்களிலும் இப்புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. அதேசமயம் எரஸ்மஸ் என்பவருடைய கிரேக்க மற்றும் லத்தீன் புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்புகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட டச்சு மொழி புதிய ஏற்பாடு 1524 இல் டெல்ஃட் எனுமிடத்திலும், 1525 இலும் 1526 இலும் அன்ட்வேர்ப் எனுமிடத்திலும் வெளியிடப்பட்டன.

டச்சு மொழியில் முழு வேதாகமத்தையும் ஒன்றாக மொழிபெயர்த்து வெளியிடும் பணியை ஒரு குழுவினர் மேற்கொண்டனர். இதில் ஆதியாகமம் முதல் உன்னதப்பாட்டு வரையிலான பகுதியும் புதிய ஏற்பாடும் மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேதாகமத்தை அடிப்படையாய்க் கொண்டும், ஏனைய பகுதிகள் வேறு ஜெர்மனிய மொழிபெயர்ப்புகளை அடிப்படையாய்க் கொண்டும் மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வேதாகமத்தை 1526 இல் ஜே.வென் லீஸ் வெல்ட் என்பவர் அச்சிட்டு வெளியிட்டார். 1527 இற்கும் 1539 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பல ரோமன் கத்தோலிக்க டச்சு மொழிபெயர்ப்பு வேதாகமங்களும் வெளிவந்தன. 1548 இல் கொலோன் இலும் லுவைன் இலும் வெளியிடப்பட்ட டச்சு மொழி வேதாகமங்களே பிற்கால ரோமன் கத்தோலிக்க சபையினது டச்சு மொழி வேதாகமங்களுக்கு அடிப்படையாய் இருந்தன.

டச்சு மொழி சீர்திருத்த சபை, ரெமான்ஸ்ட்ரன்ட் சபை என பிரிவடைந்த பின்னர், ஒவ்வொரு குழுவும் தமக்கென பிரத்தியேகமாக வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கியமையினால், பல புதிய டச்சு மொழி பெயர்ப்பு வேதாகமங்கள் வெளியிடப்பட்டன. இவற்றுள் அரசின் பொதுவான வேதாகமம் என அழைக்கப்படும் மொழிபெயர்ப்பு முக்கியமானது. இது டோர்ட் எனுமிடத்தில் 1618 முதல் 1619 வரையிலான காலப்பகுதியில் கூடிய சீர்திருத்த சபை ஆலோசனை சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, மூலமொழிகளை அடிப்படையாய்க் கொண்டு தயாரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகும். 1637 இல் வெளிவந்த, லின்டன் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்ட இவ்வேதாகமமே ஒல்லாந்த சீர்திருத்த சபையின் அங்கீகாரம் பெற்ற வேதாகமமாயிற்று.

மார்ட்டின் லூத்தரின் ஜெர்மனிய மொழிபெயர்ப்பிலிருந்து டச்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் 1823 இல் திருத்தி மொழி பெயர்க்கப்பட்டு, லூத்தரன் சபையினது அதிகாரபூர்வமான வேதாகமமாகியது. லின்டன் எனுமிடத்திலிருந்த இறையியல் கல்லூரியின் கல்வி பீட அங்கத்தவர்களினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு 1866 இலும் பழைய ஏற்பாடு 1901 இலும் வெளிவந்தது. இதன் பின்னர் நெதர்லாந்து வேதாகமச்சங்கம் டச்சுமொழியில் ஒரு புதிய மொழி பெயர்ப்பு வேதாகமத்தை 1951 ஆம் ஆண்டு வெளியிட்டது.

(3) கிரேக்க மொழிபெயர்ப்பு

முதலாம் நூற்றாண்டு கிரேக்க மொழியானது காலம் செல்லச் செல்ல மாற்றமடைந்தமையினால், அக் காலத்தைய கொய்னி என அழைக்கப்படும் கிரேக்க மொழி வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. தற்காலத்தைய நவீன கிரேக்கம், 10ஆம் நூற்றாண்டளவில் பழைய கொய்னி கிரேக்கத்திலிருந்து வளர்ச்சியடைந்த கிரேக்க மொழியாகும். இந் நவீன கிரேக்க மொழியில் முதல் தடவையாக கி.பி. 1547 இல் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களும் கொன்ஸ்டன்டி நோபிள் நகரத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

மக்ஸ்சிமஸ் எனும் கிரேக்க மதத் துறவி 1638 இல் நவீன கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். இது ஜெனீவா நகரத்தில் பிரசுரிக்கப்பட்டது. அனெஸ்டாசியஸ் மைக்கேல் என்பவரினால் தயாரிக்கப்பட்ட இதன் திருத்தப் பதிப்பு ஹலே எனும் இடத்தில் 1710 இல் வெளியிடப்பட்டது. கான்ஸ்டன்டி நோபிள் நகரத்திலிருந்த துறவு மடத்தைச் சேர்ந்த ஹிலரியொன் என்பவரது கிரேக்க மொழிபெயர்ப்பு வேதாகமம் ஒன்று 1828 இல் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு வேதாகமச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது.

இதன்பின், பல கிரேக்க பண்டிதர்களினால் தயாரிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டை 1840இலும், புதிய ஏற்பாட்டை 1844இலும் இவ்வேதாகமச் சங்கம் வெளியிட்டது.

வேதாகமச் சங்கம் வெளியிட்ட கிரேக்க வேதாகமங்களில் தள்ளுபடி யாகமப் புத்தகங்கள் இடம்பெறாதமையினால் கிரேக்க சபைகள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் 1848 இல் வெளிவந்த பம்பாஸ் என்பவரின் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு அரசியல் காரணங்களினால் அதிக வரவேற்பைப் பெறவில்லை.

அதேபோல, 1900 இல் ஏதேன்ஸ் பட்டணத்தில் வெளியிடப்பட்ட நவீன கிரேக்க மொழி சுவிசேஷப் புத்தகங்களும் பலத்த எதிர்ப்புக்கு முகங் கொடுத்தது. ஏதேன்ஸில் கலவரங்கள் ஏற்பட இம்மொழிபெயர்ப்பு காரணமாகியமையினால், நவீன கிரேக்க மொழிபெயர்ப்பு வேதாகமங்களை உபயோகிக்க அரசு தடை விதித்தது. இத்தடை 1924 ஆம் ஆண்டே நீக்கப்பட்டது. 1927 இல் சங்கீதப் புத்தகங்கள் கெலி நிக்கஸ் என்பவரினால் நவீன கிரேக்கத்தில் அத்தென்ஸ் பட்டணத்தில் வெளியிடப்பட்டது. இதற்குப் பிற்பட்ட காலத்தில் வேறு சிலரும் சங்கீதப் புத்தகத்தை நவீன கிரேக்கத்தில் மொழி பெயர்த்து அத்தென்சில் வெளியிட்டுள்ளனர். 1954 ஆம் 1955 ஆம் ஆண்டுகளில் அத்தனேசியொஸ் கஸ்டூப்சிஸ் மற்றும் நிக்கோலஸ் லூவாரிஸ் எனும் இருவரும் முழுமையான நவீன கிரேக்க மொழி வேதாகமத்தை ஏதேன்ஸில் வெளியிட்டனர்.

மேலும், சில நவீன விளக்க மொழி பெயர்ப்பு கிரேக்க வேதாகமங்களும் அண்மைக்காலத்தில் பிரசுரிக்கப்பட்டன.

(தொடரும்)