இனித் தீங்கு நேரிடாது!
தியானம்: ஜனவரி 3 செவ்வாய்; வாசிப்பு: செப்பனியா 3:8-16
‘…இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உன் நடுவிலே இருக்கிறார்.
இனித் தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப். 3:15).
‘இனித் தீங்கைக் காணாதிருப்பாய்’ இந்த வாக்கியம் அடங்கிய ஒரு வாக்குத்தத்த அட்டை ஒரு சகோதரியின் கைகளில் கிடைத்தது. வாழ்க்கையில் கீழ்மட்டம் வரைக்கும் கஷ்டம் அனுபவித்திருந்த அவளுக்கு இது ஆறுதல் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் அவள் சொன்னது: ‘இதனை நான் பெற்றுக் கொண்டபோது, ‘இனி’ என்ற சொல் எனக்குள் ஒரு எச்சரிப்பின் சத்தத்தை எழுப்பியது. அப்போ, இப்பொழுது நான் தீங்கின் கைகளில் இருக்கிறேனா என்ற எண்ணம் என்னைக் குழப்பிவிட்டது. ஆம், தீங்கின் கைகளில்தான் நான் இருந்திருக்கிறேன். தேவனுடைய சத்தத்தை சரிவர உணராததால் நான் தீங்கின் கைகளில் விழுந்திருந்தேன் என்பதை இப்போ உணருகிறேன். இந்த வாக்குத்தத்த அட்டை கிடைத்த அதே மாதம் என் குடும்பத்தில் பேரிடி விழுந்தது. வேதனை மிகுதியாயிருந்தாலும், ஏற்ற நேரத்தில் கர்த்தர் தமது வாக்குப்படியே இனித் தீங்கு நேரிடாதபடி அற்புதமாக எங்களை காத்துக்கொண்டார்’ என்றாள்.
தேவ வார்த்தைகளை அறிந்திருந்தாலும், தேவசித்தத்தைக் குறித்த அறிவு இருந்தாலும், பலவேளைகளிலும் இதுதான் சரியான பாதை என்றும், இதுவே தேவன் வகுத்த பாதை என்றும் சொல்லி நாம் தீங்கின் கைகளில் விழுந்து விடுகிறோம். அன்றைய யூதரும் அதைத்தான் செய்தார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை அறிந்திருந்தனர். முற்பிதாக்கள் காலத்தில் நடந்த சங்கதிகள் தெரியும். நியாயப்பிரமாணங்கள் தெரியும். தேவன் தம்மீது வைத்திருந்த வைராக்கிய வாஞ்சையும் தெரியும். ஆனால், அவர்களோ தங்களுக்கு நல்லது சந்தோஷமானது என்று எதை நினைத்தார்களோ அவற்றைப் பிடித்துக் கொண்டு தீமையின் கைகளில் அடிக்கடி விழுந்தார்கள். கர்த்தரும் அமைதியாயிருந்தார். ஏனெனில், தங்களது தெரிவுகள் தீங்கானது என்பதை அவர்கள் உணர்ந்து மனந்திரும்பவேண்டும் என்பது அவரது ஆதங்கம். ஆனால், எத்தீமையும் எல்லைமீறும்போது அவரே தமது ஜனத்திற்காக யுத்தம் பண்ண எழுந்த ஏராளமான சந்தர்ப்பங்களை நாம் வேதாகம சரித்திரத்திலே காண்கிறோம்.
அப்படியிருக்க, அவர் நம்மைக் கைவிடுவாரா? தீங்கை நாம் தேடிப் போகும்போது அது நம்மைச் சாதுரியமாகப் பிடித்துக்கொள்ளும். நல்லது என்று நாம் எண்ணுகின்ற பல காரியங்களே நம்மைத் தீங்கில் விழத்தள்ளி விடுகிறது. இன்று நாம் நிற்கும் இடம் எத்தகையது என்பதை சிந்தித்து தேவனண்டை திரும்புவோமாக. தேவசித்தம் என்று தவறாகக் கணக்கிட்டவற்றை அறிக்கையிடுவோமாக. இதுவரை நமது தெரிவினாலே தீங்கை அனுபவித்தாலும், இனித் தீங்கு நேரிடாமல் தேவன் நம்மை நிச்சயமாகவே காத்து நடத்துவார்.
ஜெபம்: “பிதாவே, என் துக்கங்களின் காரணத்தை உணர்த்தினீர் நன்றி. என் துக்கம் சந்தோஷமாக மாற என்னை உமது கரங்களில் தருகிறேன். ஆமென்.”