தேவனுடைய யுத்தம்!
அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2012)
– Dr.உட்ரோ குரோல்
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின்
வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில்
யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்;
உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது
நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள்,
அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான் (2 நாளா.20:20).
பல்லாயிரம் ஆண்டுகளாக நன்மைக்கும் தீமைக்கும் எதிரான யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. “நான் வானத்துக்கு ஏறுவேன், …உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று லூசிபர் பெருமையுடன் கூறின காலமுதல் (ஏசா.14:13,14) இன்றைய நாள்வரை தேவவல்லமைக்கும் பிசாசின் வல்லமைக்கும் இடையே நடந்து வரும் போராட்டத்துக்கு ஓய்வே இல்லை. இதனை பரி.பவுல் “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத் தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே.6:12) என்று உறுதி செய்கிறார்.
இந்த யுத்தத்தில் சேனைகளின் கர்த்தர் நமது படைத்தலைவர். நாமோ அவரது சேனையின் படை வீரர்கள் மாத்திரமே; இந்த உண்மையைப் புரிந்துகொள்வது சிலருக்குக் கடினமாய் உள்ளது. நாம் பிசாசையும் அவனது கூட்டத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். தீய ஒழுக்கம், தெய்வ பயமின்மை, பாவச்செயல்கள் போன்றவைகளை எதிர்த்து வாழ வேண்டும்; ஆயினும் இந்த யுத்தம் நம்முடையதல்ல; தேவனுடையது. இக்கருத்தினை யோசபாத் என்ற அரசரின் வரலாறு மூலமாய் வேதாகமம் நமக்கு விளக்குகிறது.
யூதாவின் அரசன் ஆசாவின் குமாரன் யோசபாத் அரசாண்ட 25 ஆண்டுகள் அந்நாட்டின் பொற் காலம் எனலாம். கி.மு.872ல் அவர் அரியணை ஏறியபோது 35 வயதாயிருந்தார். தனது தகப்பனுடைய வழியிலே நடந்து கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து மத சீர்திருத்தலையும் எழுப்புதலையும் கொண்டுவந்தார். அதுபோலவே யோசபாத்தின் நாட்களிலும் யூத நாட்டில் கலகம் எழுந்தது. மோவாபியரும் அம்மோனியரும் யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அமைதியைக் குலைக்க முயற்சித்தனர். தேவ வழியில் நடக்கும் எவருக்கும் சாத்தானின் எதிர்ப்புகள் வருவது இயல்பே.
இக்கூட்டணியின் சக்தி, சாத்தானின் சேனையின் சக்திக்கு ஒத்திருந்தது. இது தேவனுடைய ஜனங்களின் அரசனை மருளச் செய்தது. இவர்களை எதிர்த்துப் போரிடுவதா அல்லது அவர்களுக்கு அடிபணிந்து போவதா என்று குழம்பினார். இந்நிலையில் தேவநம்பிக்கையுடைய மனிதர் எவரும் எடுக்கும் முடிவையே யோசபாத்தும் தெரிந்து கொண்டார். இக்கட்டான இச்சூழ்நிலையில் யோசபாத் தன் நாடு முழுவதற்கும் உபவாசத்தை அறிவித்தார். கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்களைக் கூடிவரச்செய்து, சர்வவல்லவரை நோக்கி அபயமிட்டார்.
அப்பொழுது யகாசியேல் என்னும் ஆசாபின் புத்திரரில் ஒருவனான லேவியின் மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினது. அவன் யூதாவையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்” (2 நாளா.20:17).
கர்த்தருடைய வார்த்தையினால் தைரியம் பெற்ற அரசனும் குடிகளும் யெகோவா தேவனுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து தாழ விழுந்து பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, உரத்த சத்தத்தோடே அவரைத் துதித்தார்கள். “பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனை பண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்து போய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்” (2 நாளா.20:21).
அவரிடம் தங்கள் காரியங்களைக் கூறிய பின்னர் யுத்தம் தங்களுடையதல்ல; கர்த்தருடையது என்பதைத் தெளிவாய் உணர்ந்துகொண்டனர். தேவசேனையின் வீரர்களாய் யுத்தம் பண்ண அதிகாலமே எழுந்தனர். வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே போரிட வந்த அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்த்திருந்த வலிமையான எதிரிகள் அங்கே பிரேதங்களாகத் தரையிலே விழுந்து கிடந்தனர். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய்க் கைகலந்தார்கள் (வச.23). ஆம், தேவனே அவர்களுக்காக அங்கே யுத்தம் பண்ணினார்.
இவ்வுலகில் நமக்கும் அநேக போராட்டங்கள் உண்டு; யுத்தம் நமக்கு சாதகமாக அமையாத பொழுது நம்மில் அநேகர் தேவ சேனையிலிருந்து விலகிவிட எண்ணுகின்றனர். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோசபாத்தும் அவனது குடிகளும் தங்கள் பங்கினைச் செய்ததுபோல நாமும் நமது பங்கினை நம் சேனையதிபன் கர்த்தருக்கு செவ்வனே செய்ய வேண்டும். யுத்தம் மும்முரமாகலாம்; ஆயினும் அது தேவனுடையது. ஜெயம் கொடுக்கும் தேவன் நமக்காக யுத்தம் பண்ண மன்றாடுவோம். நம்பிக்கை தொனியோடே அவர் நாமத்தைப் புகழ்ந்திடுவோம். சாத்தானுடனும் அவனுடைய சேனையுடனும் காலம் முழுதும் நடக்கும் யுத்தத்துக்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அதிகாலமே அணிந்து ஆயத்தமாவோம்.
பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்த படியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பி னார்கள் (வச.27).
யோசபாத்தின் தேவன் நம் தேவன், நாம் ஜெயிப்பது உறுதி!
அதிகாலை கீதம்:
எதிரி வல்லவனாயிருந்தாலும் யுத்தம் கடுமையாயினும்
தேவசேனையின் வீரர்கள் நாம் என ஆர்ப்பரிப்போம்
மாறாத அவருடைய உண்மை ஜெயத்தைத் தருமே
இராஜாதி இராஜாவின் சேனையை மேற்கொள்வோன் யார்?
வெற்றி நிச்சயம் என்றே எக்காளம் ஊதுவோம்.