கட்டுப்பாடு தேவகரத்தில்!

தியானம்: மார்ச் 20 செவ்வாய்; வாசிப்பு: 1சாமுவேல் 2:1-10

பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள். அவரே
அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
(1சாமுவேல் 2:8)

தேவனுடைய கர்த்தத்துவம், வல்லமை என்பவற்றில் எவ்வளவுதூரம் நாம் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறோம்? இருந்தால், நமது வாழ்வின் முழுமையான கட்டுப்பாடும் தேவகரத்தில்தான் உள்ளது என்பதையும் நம்பவேண்டும்; அதற்குச் சாட்சியாக வாழவேண்டும். அப்படியா நாம் வாழுகிறோம்?

அன்னாள், குறைவுகள் மத்தியிலும், தனது வாழ்வின் முழுகட்டுப்பாடும் தேவகரத்தில்தான் உள்ளது என்ற உறுதியைக் கொண்டிருந்தாள். இல்லையானால் அவளால் அப்படியொரு ஜெபத்தை ஏறெடுத்திருக்கமுடியாது. கர்த்தரைப்போல ஒரு கன்மலை இல்லை என்றாள். ஆம், தேவன் மாறாதவர், அசைக்கப்படமுடியாதவர்; மாத்திரமல்ல, அவரே பெலனாயும் இருக்கிறவர் என்பதை அன்னாள் தன் வாழ்வில் உணர்ந்தாள். பெனின்னாளுக்கு எதிராக வாயே திறக்காத அன்னாள், இனி யாரும் மேட்டிமையாகப் பேசவேண்டாம். தேவனுடைய செய்கைகள் யாதார்த்தமானவைகள் என்று தலைநிமிர்ந்து சொன்னாள். கர்த்தரே பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணுகிறவர் என்று தேவனுடைய அசைக்கமுடியாத அதிகாரத்தை அன்னாள் அறிக்கை செய்தாள். அவளது ஜெபத்தின் உச்சக்கட்டம் என்னவெனில்: அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் என்பதே. இந்த வார்த்தைகளில் அவளது நன்றி நிறைந்த இருதயம் வெளிப்பட்டது. இத்தனையையும் சொல்லி அவள் எப்போது ஜெபித்தாள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. இன்னுமொரு குழந்தை கிடைக்குமோ என்று தெரியாதபோதும், பிறந்த குழந்தையை தன் பொருத்தனைப்படி ஆலயத்திலே விட்டபின்னரே இந்தத் துதி ஜெபத்தை அன்னாள் ஏறெடுத்தாள். நம்மால் இது முடியுமா?

இயேசு மரணத்தைச் சந்திக்கும்வரைக்கும் மௌனமாக இருந்த தேவன் தாமே, கிறிஸ்துவை உயிர்த்தெழவும் செய்தவர் என்பதை நாம் இந்த லெந்து நாட்களில் உணரவேண்டும். தேவனே பூமியை அஸ்திபாரப்படுத்தியவர். அதன் மேல் உலகத்தை வைத்தவரும் அவரே. இந்தப் பூமியை ஒருநாள் நொருக்கிப் போடுபவரும் அவரே. அவரே சகலத்தையும் கட்டுப்படுத்துகிறவர். நமது வாழ்வின் முழுமையான கட்டுப்பாடும் இந்த தேவனுடைய கரத்திலேதான் இருக்கிறது, இருக்கவேண்டும். இருக்கிறது என்பது மெய்யானால் ஏன் நாம் வாழ்வில் தடுமாறவேண்டும். அன்னாளுக்குக் குழந்தை பிறந்தபோது அல்ல; குழந்தையை ஆலயத்தில் விட்டுவந்துதான் தேவனைத் துதித்தாள் என்று பார்த்தோம். ஆம், தனது வாழ்வு தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை அன்னாள் நம்பினாள். அதன்படியே நடந்தாள். நமது காரியம் என்ன?

ஜெபம்: பிதாவே,என் வாழ்வை உமது கட்டுப்பாட்டில் ஒப்புக்கொடுத்து அதற்கு சாட்சியாய் வாழ உமதாவியானவர்தாமே என்னை நடத்துவாராக. ஆமென்.