கர்த்தரின் பரிசுத்த பந்தி!

தியானம்: மார்ச் 22 வியாழன்;
வாசிப்பு:
மல்கியா 1:11-14; லூக்கா 22:14-20

…என் நாமத்தைப்
பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.
(மல்கியா 1:12)

இரவு போஜன மேசை; அப்பா வந்தமர, பிள்ளைகளும் வந்தமர, அம்மா உணவு பரிமாற ஆயத்தமாயிருக்க, எல்லோரையும் பரிவோடு பார்த்த அப்பாவின் கண்கள் இளையவனில் வந்து நின்றது. கலைந்த தலை, மேலுக்குச் சட்டையும் இல்லை. எழுந்திரு என்றார் அப்பா. அப்போதுதான் அவன் விளித்தான்; ஓடினான். முகங்கழுவி, தலை சீவி, ஒழுங்காய் உடுத்து வந்து அமர்ந்தான். பின்னர்தான் உணவு பரிமாறப்பட்டது. இதுதான் முந்தைய நாட்களில் மேல் நாட்டில் மாத்திரமல்ல, நமது வீடுகளிலும் நடந்த சங்கதி. ஆனால், இப்போது குடும்பப் பந்திகளே உதாசீனப்படுத்தப்படும்போது, மற்றவற்றை என்ன சொல்ல?

இஸ்ரவேலும் கர்த்தருடைய பந்தியை அற்பமாக எண்ணினார்கள். தகாததைப் படைக்கத் துணிந்தார்கள். காணிக்கை கொடுப்பதும் அவர்களுக்குத் தொல்லையாயிருந்தது. இதற்கு ஆசாரியரும் உடந்தையாயிருந்தார்கள். கர்த்தரோ, இதனால் என் நாமத்தையே பரிசுத்த குலைச்சலாக்குகிறீர்கள் என்றார். இது எவ்வளவு பயங்கரமான வார்த்தை என்பதை நாம் உணருகிறோமா? அன்று மக்கள் பலிகளைக் கொண்டுவந்து கர்த்தருடைய பந்தியை அனுசரித்தனர். இன்று நமக்கென்று பலியானவரை நினைவுபடுத்தும்படி நமக்கொரு பந்தியை ஆண்டவர் ஆயத்தம்செய்து போனார். இயேசு, தமது சீஷருடன் அமர்ந்த அக்கடைசி பஸ்காப் பந்தியிலே, இது உங்களுக்காக அடிக்கப்படும் என் சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதை வாங்கிப் புசியுங்கள் என்றும், இது என் இரத்தத்தினாலான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கிறது, இதில் பானம்பண்ணுங்கள் என்றும் சொன்னபொழுதும், சீஷருக்கு அப்போது ஒன்றும் புரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், நாம் இன்று அந்தப் பந்தியைக் குறித்து என்ன மனநிலையில் இருக்கிறோம். அந்தப் பந்தியின் தாற்பரியத்தை உணர்ந்து அதில் பங்குபெறுகிறோமா? அல்லது, சுயதிருப்தியும் சுகமும் கிடைக்கும் என்ற சுயநோக்கோடு பங்குபெறுகிறோமா?

நமக்காகப் பலியானவரின் நேசத்தை மறந்து, மனக்கசப்புகளையும், மறைவான பாவங்களையும், வார்த்தையாலும் மனதாலும் பிறரைக் கொலை செய்துகொண்டும், கடமைக்காக பாவமன்னிப்பு ஜெபத்தைச் செய்துவிட்டு, இப்பந்தியில் நாம் அமருகின்றபொழுது, நீ என் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்குகிறாய் என்ற தேவனுடைய சத்தம்கூட நமது காதுகளில் விழாத அளவுக்கு நாம் மந்தமாகிவிட்டோம். கர்த்தருடைய பந்தி, அது பரிசுத்த பந்தி. மனஸ்தாபமும் மனந்திரும்புதலும் இல்லாமல் அந்தப் பந்தியில் அமர்ந்து தேவ நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கும் பாவத்திற்கு விலகிவிடுவோமாக.

ஜெபம்: எனக்காக பலியானவரே, உடைந்த உள்ளத்தோடும் மனந்திரும்புதலோடும் உமது பரிசுத்தபந்தியில் அமர என்னை வழிநடத்தும். ஆமென்.