சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2020)

“கர்த்தரிடத்தில் மனமகிழச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்.37:4).


இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் கடந்து வந்துவிட்டோம். கடந்துபோன ஆண்டில் நம்முடன் இருந்த அநேகர் இன்று நம்முடன் இல்லை. இன்னமும் நம்மை ஜீவனுள்ளோர் தேசத்தில் ஜீவனுள்ளோர் தொகையில் ஜீவன் சுகம் பெலத்துடன் வைத்திருக்கிற தேவனுக்கே துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக. அவர் நம்மை இன்னமும் வைத்திருக்கிறார் என்றால் அதில் ஒரு தேவநோக்கமும் இருக்கிறது. அதை உணர்ந்து அவருக்கே மகிமை கொண்டுவருவோமாக!

கர்த்தருக்குள் மனமகிழ்ச்சி:

கடந்த ஆண்டிலே நம் இருதயத்தின் விருப்பங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதா? சில நிறை வேறியிருக்கலாம், சில நிறைவேறாதிருக்கலாம்; சில தாறுமாறாக நடந்திருக்கலாம்! அப்போ, நமது வேண்டுதல்கள் நிறைவேறுவதில் தாறுமாறுகள் ஏற்படுவது ஏன்?˜ நாம் நமது சொந்த மன மகிழ்ச்சியை, அதாவது நமக்கு மகிழ்ச்சி தருவது எது என்று நாமே தீர்மானித்து, அதையே தேடுவதால்தான் நாம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா! ஏனென்றால், தாவீதின் சங்கீத வார்த்தையைக் கவனித்துப்பார்த்தால், “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”, அப்பொழுது நமது மனவிருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என்று தான் பாடிவைத்துள்ளார். மாத்திரமல்ல, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறவன், தன் வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவித்துவிட்டு, அவரையே நம்பியிருப்பான் (சங்.37:5).

சாதாரணமாக ஒருவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பது என்பது எப்படி? ஒருவரைச் சந்திக்கும் போது, நாம் சந்தோஷப்படுகிறோம் என்றால், முதலாவது நாம் அவரை அறிந்திருக்கவேண்டும்; அவர் நமக்குப் பிரியமானவராக இருக்கவேண்டும். அவரைக் காணமாட்டோமா என்ற ஆவல் நமக்குள் இருக்கும். அவரை நாம் நம்புவோம், நம் உள்ளக்கிடக்கைகளைக்கூட அவரிடம் கொட்டிவிடத் தயாராயிருப்போம். ஆனால், மறுபக்கத்தில், அவருடைய பிரியத்துக்கும் நாம் பாத்திரராய் இருக்கவேண்டும். அவர் நம்மில் பிரியமாயிருக்கவேண்டுமென்றால், நாம் அவருக்குப் பிரியமானதைச் செய்து, பிரியமானபடி நடக்கவேண்டும். இப்போ, அவரைக் கண்டாலே என்ன, நினைத்தாலே நமக்குள் மகிழ்ச்சி துள்ளி விளையாடும் அல்லவா! இப்படியாக ஒருவரின் அன்புக்கும் பிரியத்துக்கும் நாம் பாத்திரராய் இருக்கவேண்டுமென்றால், அவருக்குப் பிடித்தமில்லாத காரியங்கள் நம்மில் காணப்படுவது எப்படி? ‘என் மனைவிக்குப் பிடிக்காததால் நான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன்’ என்றார் ஒருவர். ‘என் நண்பிக்குப் பிடிக்காததால் என் உடை நடையையே மாற்றிவிட்டேன்’ என்றாள் ஒரு இளம்பெண்.

இப்படியிருக்க, கர்த்தருக்குள்ளான மன மகிழ்ச்சி நமக்கு உண்டாயிருக்க வேண்டுமென்றால், அவருடைய சந்நிதானத்தில் நாம் மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்றால், அவரையே நம்பி நமது வாழ்வின் சகலத்தையும் அவரிடம் ஒப்புவித்துவிட்டு, அவரே தஞ்சம் என்று நாம் சரணடையவேண்டுமென்றால், முதலாவது அவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது வெறுமனே கிறிஸ்தவன் என்ற பெயரோடு நாம் வாழுகிறோமா? அடுத்தது, அவருடைய பிரியம் என்னவென்பதை நமக்குள் உள்வாங்கி, அவருக்குப் பிரியமாய் வாழும்படிக்கு நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கிற அவருக்குப் பிரியமில்லாத காரியங்களைத் தள்ளிவிட்டு, தேவனோடு நம்மை ஒப்புர வாக்கும்படிக்குத் தம் ஜீவனையே பலியாகக் கொடுத்த இயேசுவையும் அவருடைய சிந்தையையும் தரித்துக்கொள்வதைத் தவிர கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதற்கு வேறு வழி இல்லை.

கர்த்தருக்காக ஒரு புதிய காரியம்:

தள்ளிவிடுதல், அழித்துவிடுதல் அல்லது களைந்துபோடுதல் என்பதுவும், தரித்துக்கொள்ளல், புதிதாகுதல் என்பதுவும் நமக்குப் பழக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் ஆகிவிட்டன. ஆனால், இது வேதாகமக் கட்டளை என்பதையும், கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும், நமது வேண்டுதல்கள் அருள்செய்யப்படவும் இதுவே வழி என்பதையும் நாம் சிந்திப்பது அரிதாயிருக்கிறது. இவை யாவையும் ஒட்டுமொத்தமாகச் சிந்தித்தால், தேவனுடைய வார்த்தைக்கு முழுமனதுடனும் அர்ப்பணத்துடனும் கீழ்ப்படிவது ஒன்றே, தள்ளிவிடுதலுக்கும், தரித்துக்கொள்வதற்கும் நம்மை இட்டுச்செல்லுகிறது என்பதை மறுக்கமுடியாது.

ஒரு புதிய ஆண்டு, பிறந்த நாள் வரும்போது, வாக்குத்தத்தம் என்னவென்று தேடுவதில் நாம் மிகுந்த தீவிரம் காட்டுவதுண்டு. வாக்குத்தத்தங்கள் யாவையும் கர்த்தர் தீர்க்கமாகக் கொடுத்துவிட்டாரே. வேதாகமம் முழுமையும் தேவனுடைய வாக்குத்தான். அப்படியானால் இப்புதிய ஆண்டிலே தேவனுக்காக ஒரு புதிய காரியத்தை நாம் ஏன் செய்யக்கூடாது! கர்த்தர் என்ன தருவார் என்று ஏங்கிநிற்பதைவிட, கர்த்தருக்கு நான் என்ன கொடுக்கப்போகிறேன் என்று நிதானித்து, நம்மை ஒப்புவித்துப் பார்ப்போமா! இது தருகின்ற கர்த்தருக்குள்ளான மனமகிழ்ச்சியை நாம் எங்கும் காணமுடியாது. ‘என்னைத் தருகிறேன்’ என்று பாடினால் போதாது. கர்த்தர் எப்படியாகத் தமது அன்பைச் செயலில் வெளிப்படுத்தினாரோ, நமது பெலத்துக்கு ஏற்றபடி நாமும் செயலில் வெளிப்படுத்தி தேவனை மகிழ்விக்கலாமே!

பரிசுத்த வேதாகமம் நமது வாழ்வுக்கு அவசியமான அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்ற உத்தம ஆசானாக இருக்கிறது. நாமோ நமக்குச் சாதகமானவற்றை எடுத்துக்கொண்டு, ஏனையவற்றை விட்டுவிடுகிறோம். அது தவறு. ஆக, இந்தப் புதிய ஆண்டிலே கர்த்தரை முன்னிட்டு, நம்மோடு கலந்து இணைந்து ஒன்றித்திருக்கின்ற வார்த்தை உணர்த்துகின்ற ஒரு வீண் காரியத்தைத் தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் ஒரு குணாதிசயத்தையாவது தரித்துக்கொள்ள நம்மை அர்ப்பணிப்போமா! செய்துபார்ப்போம், அப்போதுதான் அதன் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.

ரோமருக்கு எழுதிய நிருபத்திலிருந்து ……

“இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று: ஆகையால், அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம்”(ரோமர் 13:12). ‘தள்ளி விட்டு… தரித்துக்கொள்’. கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கு, தேவனை அறிகிற அறிவில் அதிகமாக வளருவதற்கு, தேவபிரசன்னத்தில் தரித்திருப்பதற்கு, அவருக்குள் மகிழ்ந்திருப்பதற்கு அவசியமான ஆரம்ப பாடமே இதுதான் என்றால் அது மிகையாகாது. ஒருவன் அல்லது ஒருத்தி இயேசு கிறிஸ்துவுக்குள் திடமாக ஸ்திரமாக நிலைத்திருக்கவும், அவருக்குள் சாட்சியாக வாழவும் வளரவும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட இரட்சிப்பின் அனுபவம் மிகவும் அவசியம். அதுவே ஆரம்பம். ஆனால், அந்த அனுபவத்துள் வந்த ஒருவன், அப்படியே இருந்திடமுடியாது. அவன் இலக்கை நோக்கி வளரவேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியம் ஒன்றுண்டு. நமக்குள் வேரூன்றியிருக்கிற தேவையற்ற, அசுத்தமான, அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றையும் தினம் தினம் தேவாவியானவர் துணையோடு அடையாளங்கண்டு, அப்பப்போ அவற்றை ஒவ்வொன்றாக அகற்றியோ அழித்தோ தகர்த்துப்போட்டு, அந்த வெற்றிடத்தை இயேசுவின் குணாதிசயத்தால் நிரப்பவேண்டும். இது அன்றாடம் நடக்கவேண்டிய காரியமாகும்.

ஒரு விடயத்தையேனும் தள்ளிவிடுவோமா!

நம்மோடு அதிகமாக ஒட்டி உறவாடுகின்ற ஒரு விடயத்தைக் குறித்து நாம் இப்போ சிந்திப்போமா! இது ஒரு சிறிய விஷயம்போலத் தெரியலாம்; ஆனால் இது பிறரில் மாத்திரமல்ல; நம்மிலும் மகா சிதைவைக் கொண்டுவரக்கூடியது. இதை நாம் தெரிந்தும் செய்கிறோம், சிந்திக்காமலும் செய்கிறோம், செய்யவேண்டுமென்று தீர்க்கமாகவும் செய்கிறோம். இந்தப் புதிய ஆண்டில், இந்த ஒரு விடயத்தைத் தன்னும் நம்மைவிட்டுத் தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் அன்பைத் தரித்துக்கொள்வேன் என்று தேவனுக்காக ஒரு காரியத்தையாவது முடிவெடுத்து, தவறி விழுந்தாலும் மீண்டும் எழுந்து, முன்செல்வோமா! ஆண்டவர் நமக்காகச் செய்துமுடித்த ஒப்பற்ற காரியத்தின் முன்பாக இந்த அற்பமான அர்ப்பணிப்பையாவது இப்புதிய ஆண் டில் அவருக்காக முன்னெடுப்போமா? ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத் தெரிந்தாலும், நிச்சயம் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சி உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த விஷயம் என்ன?

“அப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 14:13). இவ்வளவும்தான்!

நாம் பலவேளைகளிலும் மூன்று காரியங்களைச் செய்துவிடுகிறோம். ஒன்று, அடுத்தவனைக் குற்றப்படுத்துவது, அடுத்தது, குற்றஞ்சாட்டுவது, இறுதியாக, அடுத்தவனை வெகு இலகுவாக குற்றவாளி என்று தீர்த்துவிடுவது.

குற்றப்படுத்துதல்: “இவன் இப்படித்தான், இவள் செய்திருப்பாள்” என்றெல்லாம் நாவு கூசாமல் பேசும்போது, அதில் உண்மை உண்டோ இல்லையோ, நமது கற்பனையில் எழுகின்ற சிந்தனைகளுக்கு இடமளித்து, “அப்படியா” “இருக்கும் இருக்கும்” என்ற சொல்பிரயோகங்களை எடுத்து வீசிவிடுகிறோம். அது அடுத்தவனை வீணாகக் குற்றப்படுத்துவதுடன், குற்றப்படுத்துவதில் நாமும் பங்காளிகளாகிறோம் என்பதை நாம் சிந்திப்பதில்லை. இப்படியாக அவன் எழுந்திருக்கமுடியாதபடி அவன் முன்பாக ஒரு தடுக்கலைப் போட்டுவிடுகிறோம்.

குற்றம்சாட்டுதல்: இது ஏதேனின் தெளிவான வெளிப்பாடு. நாம் தப்பித்துக்கொள்ள, நமது குற்றத்தை மறைக்க, நமது குற்றத்தை அடுத்தவனில் சுமத்திவிடுகிறோம். அல்லது, அடுத்தவனையும் குற்றத்துள் இழுத்துவிடுகிறோம். இது அவனுக்கு இடறலை உண்டாக்கிவிடுகிறது.

குற்றவாளியாகத் தீர்ப்பது: எதையும் சிந்திக்காமல், அடுத்தவனுடைய நிலைமையை உணராது, கண்கள்கண்டதும் காதுகள் கேட்டதும் மெய்யென்று எடுத்துக்கொண்டு, அடுத்தவனைக் குற்றவாளியாகத் தீர்த்தேவிடுகிறோம். “இவனுக்கு இது தேவை” என்றும், “செய்த பாவத்துக்கு இது வேண்டும்” என்றும் ஏதேதோ சொல்லி, அடுத்தவனை வெகு இலகுவாகத் தூக்குமரத்தில் தூக்கி விடுகிறோம். அடுத்தவனை நியாயந்தீர்க்க நாம் யார்? நியாயாதிபதி தேவன் ஒருவரே. அவருடைய நியாயாசனத்தில் அமர யாருக்கும் அதிகாரமுமில்லை, அதைக் கிட்டிச்சேர நினைக்கின்ற தகுதிகூட யாருக்குமே இல்லை.

நியாயந்தீர்க்க நாம் யார்?

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (மத்.7:1,2). இது ஆண்டவரின் வார்த்தை இதற்கு மேல் என்னதான் வேண்டும்.

தமது சாயலில் தமக்கென்று படைத்து உருவாக்கிய ஒரு மனிதனைக் குற்றப்படுத்தி நியாயந் தீர்ப்பதை தேவன் வெறுக்கிறார். ரோமர் 14:13 “இப்படியிருக்க” என்று ஆரம்பிக்கிறது. அப்படியானால் “எப்படியிருக்க” கேட்டுப்பார்க்கவேண்டும். அதற்கு முந்திய 12ம் வசனம், “ஆதலால், நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” என்றிருக்கிறது. அப்படியானால் அந்த “ஆதலால்” என்பதன் அர்த்தம் என்ன?˜ அதற்கு 11ம் வசனத்தைப் பார்ப்போம். “அந்தப்படி, முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்… என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது”. அப்போ, இந்த “அந்தப்படி” என்பது எந்தப்படியைக் குறிக்கிறது? “இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? ..நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே” என்கிறார் பவுல். அப்படியானால், இந்த, “இப்படியிருக்க” என்பது என்ன?

ஆம், நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் கர்த்தருக்கென்றே எல்லாமே நடக்கிறது. ஆகவே, எது நடந்தாலும் நாம் எல்லோரும் கர்த்தருடையவர்கள். கிறிஸ்து மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கிறார். இப்படியிருக்க, நாம் நமது சகோதரரைக் குற்றப்படுத்துவது எப்படி? ரோம சபையில் ஏற்பட்ட பல குழப்பநிலைகளைச் சரிப்படுத்தவென்றே இந்த 14ம் அதிகாரத்தை எழுத ஆரம்பித்த பவுல், எந்த நிலையிலும் சகோதரனைக் குற்றப்படுத்துவது, குற்றமென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். ரோமர் 12:9-21வரைக்கும் சகோதர உறவைக் குறித்து ஆணித்தரமாக எழுதிய பவுல், எந்த விஷயத்திலும் குற்றப்படுத்துகின்ற, நியாயந்தீர்க்கின்ற குற்றத்திற்கு விலகும்படி புத்தி சொல்லுகிறார்.

நாம் அன்புகூரக் கடன்பட்டிருக்கிறோம்

ரோமர் 13:8-10 வரைக்கும் பவுல் எழுதுகின்ற இன்னுமொரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். நாம் அன்புக்குக் கடன்பட்டிருக்கிறோம். ஒருவரிலொருவர் அன்புகூருகிற கடனே அல்லாமல் நாம் எவருக்கும் எவ்விதத்திலும் கடன்பட்டிருக்கக்கூடாது. நாம் பணம் கடன்பட்டிருக்கிற ஒருவரைக் காணும்போது நாம் அவருக்குக் கடன் கொடுக்கவேண்டும் என்பது நினவுக்கு வருகிறது போல, நம்மைச் சார்ந்த விசுவாசிகளைக் காணும்போது, நாம் அவர்களுக்குச் செலுத்தவேண்டிய அன்பின் கடனை அது நமக்கு நினைவுபடுத்த வேண்டும்.

“களைந்துபோடு ….. தரித்துக்கொள்” என்று பவுல் எபேசியர் 4:20-5:2 வசனங்களில் எழுதியிருப்பதையும் இந்த இடத்தில் நாம் கருத்திற்கொள்வது நல்லது. தேவனற்ற குணாதிசயங்களை முற்றிலும் களைந்துபோட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் தரித்துக்கொள்ள இந்தப் புதிய ஆண்டில் முன்வருவோமா? அப்பொழுது நம்மைப் பற்றிப்பிடித்திருக்கிற, அல்லது நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிற பாவசுபாவத்தைத் திருப்திப்படுத்துகின்ற சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.

4-ம் நூற்றாண்டுக் கிறிஸ்தவத் தலைவராகிய பரி.அகஸ்டீன் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் இது, அவரே அதைக் குறித்து எழுதியுள்ளார்:

“நான் இன்னும் பாவத்தின் கைதியாகவே இருந்ததை உணர்ந்தேன்…. அப்பொழுது ஒரு தடவை அருகிலிருந்த வீட்டிலிருந்து பாடல் பாடுகின்ற ஒரு சிறுப்பிள்ளையின் ஓசையைக் கேட்டேன். “எடுத்து வாசி, எடுத்து வாசி” என்று அந்தப் பாடல் வரிகள் கேட்டன. என் கண்களில் ஊற்றெடுத்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, காலூன்றி எழுந்துநின்று, வேதப் புத்தகத்தைத் திறந்து, முதலில் என் கண்களில் தெரிகின்ற பகுதியை வாசிக்கவேண்டும் என்ற தேவகட்டளைதான் இது என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நான் வேதத்தைப் பற்றியெடுத்து, அதை அமைதியாகத் திறந்து, முதலில் என் கண்களில் பட்ட பகுதியை வாசித்தேன்: களியாட்டத்திலும், வெறியிலும்…… அல்லாமல், துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து உங்களில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்”….. இதை வாசித்தவுடனே நம்பிக்கையின் பேரொளி என் இதயத்தை வெள்ளம் போலச் சூழ்ந்ததையும், எல்லா அவநம்பிக்கையின் காரிருளும் என்னை விட்டு அகன்றுபோனதையும் உணர்ந்தேன்” என்பதாகும்.

‘இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்கதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள்’ (ரோமர் 14:13). வீண் பேச்சுக்கள், வீண் உறவுகள், வீண் அலுவல்கள், தொலைபேசி வீண் உரையாடல்கள் என்பவற்றைக் குறித்து அதிக கவனமும் விழிப்பும் கொண்டிருந்தால் நிச்சயம் நாம் இந்த வார்த்தைக்குக் கீழ்ப்படியமுடியும்; இந்த ஆண்டிலே இந்த ஒரு காரியத்தையாவது ஒழித்துப்போட்டு, கிறிஸ்துவின் அன்பைத் தரித்துக்கொண்ட திருப்தி நமக்குள் உண்டாகும். கர்த்தருக்குள் மகிழ்ச்சி உண்டாகும். அவரும் நமது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றுவார். ஆமென்.