நம்பிக்கை அழிந்தாலும்…

தியானம்: ஏப்ரல் 7 சனி; வாசிப்பு: மத்தேயு 27:57-66

அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு,
காவல்வைத்து, கல்லறையைப்
பத்திரப்படுத்தினார்கள். (மத்தேயு 27:66)

வாழ்க்கையில் ஒரு நூலிழை நம்பிக்கை இருக்கும்வரைக்கும் நாமும் முயற்சிபண்ணிக்கொண்டே இருப்போம். காற்றுக்கூட நுழையமுடியாதபடி என்று சொல்லுவார்களே, அப்படியாக எல்லா நம்பிக்கையின் கதவுகளும் அடைக்கப்பட்டால் நாமும் மரித்தவர்கள்போல ஆகிவிடுகிறோம்.

இப்படிப்பட்ட மனநிலையில்தான் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தனர். இனி இயேசு இல்லை. அவரது சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டு, ஒரு பெரிய கல்லினால் வாசலும் அடைக்கப்பட்டாயிற்று. போதாததற்கு, சமயத் தலைவர்கள் பிலாத்துவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு கல்லுக்கு முத்திரையிட்டு, காவலும் வைத்தனர். கல்லறைக்கு ஒரே வாசல்தான் உண்டு. அந்த வழியும் அடைக்கப்பட்டதால் இயேசு எழும்பினாலும் வெளியே வர வழியே இல்லை. எல்லா நம்பிக்கையும் அழிந்துபோனது. நடந்ததைப் பார்க்கும்போது, தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து இயேசு சொன்னதை சீஷர்கள் நினைவுகூரவுமில்லை, விசுவாசிக்கவும் இல்லை. அவரை அடக்கம்செய்யவேண்டுமே என்றுகூட நினைக்கவுமில்லை. இதுவரை இரகசிய சீஷனாயிருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புதான் சரீரத்தை அடக்கம் செய்தான். ஆனால், இயேசு கூறியதை சமயத் தலைவர்கள் நம்பினார்கள். அதிலும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்திடுவாரோ என்று பயந்தார்கள். அதனால்தான் மூன்றுநாள்வரைக்கும் காவல் வைத்தனர். ஆனால் இயேசு உயிர்த்தெழக்கூடும் என்று நம்பினாலும், அம் மகிமையை அவர்களால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. மொத்தத்தில் சகல நம்பிக்கையின் கதவுகளும் அடைக்கப்பட்டாயிற்று. இயேசு உயிர்த்தெழுந்தாலும் வெளியேவர வழியும் இல்லை என்றாயிற்று. இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்தக் காவலும் தடைசெய்ய முடியாது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

தேவபிள்ளையே, உன் வாழ்விலும் நம்பிக்கையிழக்கும் சந்தர்ப்பங்கள் வராது என்று சொல்லமுடியாது. சீஷர்கள் உயிர்த்தெழுதலை மறந்து ஓடி ஒளிந்தனர். சமயத்தலைவர்கள் அது நடந்துவிடும் என்று பயந்து, தடுக்கும் வழிகளைத் தேடினர். இதிலே நீ யார்? மலைகளையும் குன்றுகளையும் படைத்த சர்வ வல்லவரைத் தடுக்க, கல்லும் முத்திரையும் காவலர்களும் எம்மாத்திரம்? நீ ஏன் எல்லாவற்றையும் மறந்துபோகிறாய்? இயேசு, அவர் ஆண்டவர். அவரை எதுவும் தடைசெய்ய முடியாது. அவர் சொன்னபடியே செய்வார். சரியான வேளையிலே அவர் உன்னையும் எழுப்புவார். கல்லறைக்கு முன்னே நம்பிக்கையற்று உட்கார்ந்திருக்காதே. ஓடி ஒளியாதே. நீ நம்பு. உன் நம்பிக்கை வீண்போகாது.

ஜெபம்: கர்த்தாவே, நீர் சர்வ வல்லவர் என்று அறிந்தும் நான் நம்பிக்கையற்றிருந்த வேளைகளை மன்னித்து என்னைத் தூக்கி நிறுத்தும். ஆமென்.