உத்தமத்தில் நிலைத்திரு!

தியானம்: ஏப்ரல் 28 சனி; வாசிப்பு: சங்கீதம் 101:1-6

…தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை…
(யோபு 8:20)

என் வழிகளிலெல்லாம் உத்தமமாயிருந்தும், என் வாழ்க்கையில் ஏன் இத்தனை எதிர்ப்பும், போராட்டமும், வேதனையும் என்று ஏக்கத்தோடு வாழும் அருமை சகோதரனே சகோதரியே, உத்தமர்களைக் குறித்து நமது பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழிகளின் புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா!

1. கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண் (நீதி. 10:29)

2. உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும் (நீதி. 11:5).

3. உத்தமர்களின் வாய் அவர்களைத் தப்புவிக்கும் (நீதி. 12:6).

4. உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன், தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள் (நீதி. 28:10).

கர்த்தருக்குப் பயந்தவனும், உத்தமனுமாயிருந்த யோபுவின் வாழ்க்கையில் தான் எத்தனை இழப்புகள், வேதனைகள், போராட்டங்கள். அவருடைய சிநேகிதர்கள் பலவித வார்த்தைகளைக் கூறி அவரைத் தடுமாற வைத்தார்கள். ஆனாலும் யோபு, என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை விட்டுவிலக்கேன் (யோபு 27:5) என்று கூறிய யோபு, தேவனுடைய வழி உத்தமமானது (சங்.18:30) என்றும், அவர் உத்தமனை வெறுக்கிறதுமில்லை (யோபு 8:20) என்றும் நன்கு அறிந்திருந்தார். யோபு மாத்திரமா, நோவாவைப் பாருங்கள். நோவாவின் காலம் அக்கிரமமும் பாவமும் நிறைந்த காலமாயிருந்தது. அப்படிப்பட்ட காலத்திலும் நோவா இறுதிவரை தன் உத்தமத்தில் தவறவில்லை. அழிவுவந்தபோது, நோவாவும் அவருடைய வீட்டார் அனைவரும் இரட்சிக்கப் பட்டார்கள். கர்த்தர் உத்தமர் என்றும், தன் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதி இல்லையென்றும் (சங்.92:14) அறிந்த தாவீது ராஜா, நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர் (சங்.41:12) என்றும் ஜெபித்தார். அந்த உறுதியோடு, தான் எதிர்கொண்ட போராட்டங்கள், பயமுறுத்தல்கள் அனைத்தையும் மேற்கொண்டு வெற்றியோடு முன்சென்றார்.

உத்தமம் என்பது குற்றப்படுத்தப்படாத வாழ்க்கை. நம்மில் யார் அப்படி இருக்கிறோம்? நான் உத்தமன் என்று நினைப்பவனல்ல; கர்த்தருக்கு முன் உத்தமமாய் நடப்பவர்களை என்ன வந்தாலும் தேவன் கைவிடவேமாட்டார். ஆகவே நமது வழிகளை உத்தமமாய் காத்துக்கொள்வோமாக!

ஜெபம்: உத்தமனாய் நடக்கிறவனே இரட்சிக்கப்படுவான் என்ற வார்த்தையின்படி, என்னை என்றும் உத்தமத்தில் வழிநடத்தும் கர்த்தாவே. ஆமென்.