ஒருவரே தேவன்!
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2012)
– Dr.உட்ரோ குரோல்
அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன்
கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது மல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது (1சாமு.5:4).
“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்”, “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” (உபா.6:4, 5:7) என்ற கட்டளையைக் கொடுத்ததேவன், தாம் ஒருவரே சர்வவல்லவர் என்பதை பல்வேறு சூழல்களில் நிரூபித்துக் காட்டுகிறார். சிலவேளைகளில் அவை நாடக முறையில் அமைந்திருப்பதை நாம் வரலாற்றில் காணமுடியும். கறவலாடுகளின் பின்னே திரிந்த தாவீது, பெலிஸ்தரின் பலசாலியான கோலியாத்தை தன்னுடைய கரத்தில் தேவன் ஒப்புவிப்பார் என்ற நிச்சயத்துடன் எதிர்த்து நின்றான். அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள் (1சாமு.17:46). ஆம், ஒரே கவண் கல்லால் அவனை முறியடித்ததினால், இஸ்ரவேலின் தேவனே மெய்யான தேவன் என்பதனை அனைவரும் அறிந்துகொண்டனர்.
அதைப்போலவே அசீரியா ராஜாவான சனகெரிப் எருசலேமின் மேல் படையெடுத்து வந்தபொழுது, எசேக்கியா ராஜா தேவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து, கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் (2இரா. 19:15) என்று விண்ணப்பம் பண்ணினார். ஏற்றசமயத்தில் பூமியின் சகல போலியான தேவர்களுக்கும் மேலாகத் தம்மை உயர்த்தி, ‘தாம் ஒருவரே தேவன்’ என்பதை நிரூபிக்க யேகோவா வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
ஆசாரியனான ஏலி முதிர்வயதாயிருந்தபொழுது சாமுவேல் ஒரு சிறு பிள்ளையாயிருந்தான். பெலிஸ்தர்களின் தேவனைவிட தாமே மேலானவர் என்பதைக் காட்ட தேவன் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கினார். எபெனேசர் என்ற இடத்தில் இஸ்ரவேலரும் ஆபெக் என்ற இடத்தில் பெலிஸ்தரும் எதிரெதிராக நின்று போர் செய்தனர். அப்போரில் இஸ்ரவேலர் தோல்வியைச் சந்தித்தனர். ஆகவே அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அவர்கள், கடந்த காலங்களில் தேவன் தம் மக்களுக்குச் செய்த வல்லமையான காரியங்களை நினைவுகூர்ந்தனர். அவரைத் தங்கள் மத்தியில் வரவழைக்க ஒரு திட்டம் தீட்டினர். ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண் டியது என்றார்கள் (1சாமு.4:3).
தேவபிரசன்னத்தின் அடையாளமான உடன்படிக்கைப் பெட்டி தங்கள் மத்தியில் இருந்தால் அது வெற்றியைத் தரும் என நம்பினர். எனவே அப்பெட்டியை போர்க்களத்துக்குக் கொண்டு வந்தனர். ஆயினும் அவர்கள் தோல்வியைத் தழுவினர். அன்று சுமார் முப்பதினாயிரம் பேர் உயிரிழந்தனர். ஏலியின் இரு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தனர். இஸ்ரவேலரின் எதிரிகளான பெலிஸ்தர்களால் உடன்படிக்கைப் பெட்டி பிடிபட்டது. அதனை அவர்கள் அஸ்தோத்துக்குக் கொண்டுவந்து தங்கள் தேவனாகிய தாகோனின் கோவிலில் வைத்தனர். அன்றிரவு அம்மக்கள் இஸ்ரவேலரை வெற்றி கொண்ட திருப்தியிலும், அவர்கள் தேவனைவிட தங்கள் தேவன் உயர்ந்தவர் என்ற எண்ணத்திலும் இன்பமாய் உறங்கினர்.
மறுநாள் அதிகாலமே எழும்பி தங்கள் வெற்றியைக் கொண்டாட தாகோனின் கோவிலுக்கு வந்தனர். (1சாமு.5:3) . அங்கே தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் தாகோன் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேவனின் பெட்டியை தாகோன் பணிந்துகொண்டதுபோல அது அமைந்திருந்தது. ஓசையின்றி தாகோனை அதன் இருப்பிடத்தில் நிறுத்திவிட்டு அஸ்தோத்தின் மக்கள் பெருமூச்சு விட்டனர். அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது.
உடன்படிக்கைப் பெட்டி மட்டும் இருந்தால் வெற்றி பெறமுடியும் என்று நம்பியிருந்த மக்களுக்கு பாடம் புகட்ட, அப்பெட்டி பெலிஸ்தரிடம் பிடிபட தேவனே அனுமதித்தார். இஸ்ரவேல் மக்கள் தோல்வியடைந்தாலும், இஸ்ரவேலின் தேவன் தமது மகிமையை இழந்துவிடவில்லை. பெலிஸ்தர்கள் வெற்றியடைந்தாலும், அதைக்கொண்டாடி மகிழ முடியவில்லை. அவர்களது ஆணவம் அழிந்தது. இஸ்ரவேலின் தேவனுக்கு தாகோன் ஒருபோதும் ஈடாகமுடியாது. “ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்.86:8,10) என்று தாவீது அறிக்கையிட்ட பாடத்தை பெலிஸ்தரும் அறிந்துகொண்டனர். நாமும் இக்கருத்தினை அறிந்து கொள்ளவேண்டும். நமது தேவனே ஒப்பற்ற மெய்யான தேவன். துதிக்குப் பாத்திரரான அவரையே போற்றிப் புகழுவோம்.
அதிகாலைப் பாடல்:
கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?