அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2012)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(4) ஹங்கேரியன் மொழிபெயர்ப்பு
இன்றிருக்கும் மிகப்பழைய ஹங்கேரிய மொழி வேதாகமப் பிரதிகளின் பகுதிகள் தோமஸ் மற்றும் வெலன்டைன் எனும் இரு பிரான்சிஸ்கன் ஒழுங்கு முறையைப் பின்பற்றிய மதத்துறவிகளினால் தயாரிக்கப்பட்டதாகும். இவை 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்தவையாகும். அதேபோல அந்நூற்றாண்டைச் சேர்ந்த லாடிஸ்லாஸ் பட்டோரி என்பவரது ஹங்கேரிய மொழி பெயர்ப்பு வேதாகமத்தின் பகுதிகளும் தற்சமயம் உள்ளன. ஹங்கேரிய மொழியில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் பகுதி பவுலின் நிருபங்களேயாகும். 1533 இல் வெளிவந்த இப்புத்தகம் லத்தீன் மொழியில் இருந்து பெனடிக்ட் கொம் ஜாத்தி என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டதாகும். பெஸ்தி என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட சுவிசேஷப்புத்தகங்கள் 1536 இல் வியன்னா எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. ஹங்கேரிய மொழியில் முதன் முதலில் வெளிவந்த முழுமையான புதிய ஏற்பாடு ஜானொஸ் எர்டோசிஸ் என்பவரினால் கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இது 1541ல் வெளிவந்தது. 16 ஆம் நூற்றாண்டில் பலர் வேதாகமத்தை ஹங்கேரிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். ஹங்கேரிய மொழியில் முழுமையான வேதாகமம் 1590 இல் பிரசுரிக்கப்பட்டது. இது கஸ்பர் கரோலி என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். நீண்ட காலமாக ஹங்கேரிய மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கிய இவ்வேதாகமத்தின், நூற்றுக்கும் அதிகமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. 1626 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க சபையினரது ஹங்கேரிய மொழி வேதாகமமும் வெளிவந்தது.
16ஆம் நூற்றாண்டு சபை சீர் திருத்தத்திற்கு எதிராக ரோம சபை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, ஹங்கேரிய வேதாகமத்தை வேறிடங்களில் அச்சிட்டு வெளியிட வேண்டியதாயிற்று. 1675இல் ஜியோர்ஜி சிஸ்ப்கெஸ் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமம் 1719 இலேயே வெளிவந்தது. வெளி நாட்டில் அச்சிடப்பட்ட இவ்வேதாகமங்கள் ஹங்கேரியாவுக்கு கொண்டு வரப்படும்போது, பல பிரதிகள் ரோம சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டன. சீர்திருத்த சபைகளைச் சேர்ந்தவர்கள் மொழி பெயர்த்த வேதாகமங்களே ஹங்கேரிய மக்களால் விரும்பப்பட்ட மையினால் அதைத் தடுப்பதற்காக, ரோம சபை லத்தீன் மொழி வேதாகமத்திலிருந்து ஹங்கேரிய மொழி பெயர்ப்பொன்றைத் தயாரித்தது. ஜியோர்ஜி கல்டி என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட இவ்வேதாகமம் 1626 இல் வியன்னா என்ற இடத்தில் வெளியிடப்பட்டது.
பிற்காலத்தில் இவ்வேதாகமம் பல தடவைகள் திருத்தப்பட்டதோடு, 1865 இல் நவீன ஹங்கேரிய பேச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இக்கர் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1886 இல் தியோடர் துக்கா என்பவர் கரோலி என்பவருடைய மொழிபெயர்ப்பை திருத்தும் பணியில் ஈடுபட்டார். இவருடைய முயற்சி காரணமாக 1898இல் வெளிவந்த ஹங்கேரிய வேதாகமம் கிறிஸ்தவர்களது பலத்த விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உட்பட்டமையினால், அதை மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு 1908 இல் திருத்தி மொழி பெயர்த்து வெளியிட்ட வேதாகமமும் வெற்றியளிக்கவில்லை.
இதனால் சகல ஹங்கேரிய கிறிஸ்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்க பலர் முயன்றனர். இவற்றுள், சீர் திருத்த மற்றும் லூத்தரன் சபைகளது கூட்டுமுயற்சி குறிப்பிடத்தக்கது. இவர்களது முயற்சி காரணமாக 1952 இல் புதிய ஏற்பாடு நவீன ஹங்கேரிய மொழியில் வெளிவந்தது. அதன்பின் பழைய ஏற்பாட்டின் புத்தகங்களும் வெளிவரத் தொடங்கின.
(5) இத்தாலிய மொழிபெயர்ப்பு
13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே முழு வேதாகமமும் இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு முற்பட்ட காலங்களில் வேதாகமத்தின் சில பகுதிகள் மட்டுமே இத்தாலிய மொழியில் இருந்துள்ளன. இன்று 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவிசேஷப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதியின் பகுதிகளும், சங்கீதப் புத்தகத்தின் பகுதிகளும் இத்தாலிய மொழியில் உள்ளன. 1471ஆம் ஆண்டிலேயே இத்தாலிய மொழி வேதாகமம் அச்சிடப்பட்ட புத்தகமாகியது.
வேனிஸ் எனும் இடத்தில் பிரசுரிக்கப்பட்ட இவ்வேதாகமம் நிக்கோல்டி மல்ஹர்பி என்பவரினால் தயாரிக்கப்பட்டதாகும். 1530 இல், அன்டோனியோ புரூகோலி என்பவர் புதிய ஏற்பாட்டையும் பிற்காலத்தில் முழுவேதாகமத்தையும் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1551 இல் புதிய ஏற்பாட்டின் புதிய இத்தாலிய மொழி பெயர்ப்பு ஒன்று தியோஃபிலொ என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டு லியோன்ஸ் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1562இல், புரூகோலி என்பவர் மொழிபெயர்த்த வேதாகமம் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டு ஜெனீவா எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது.
இத்தாலிய மொழியில் சீர்திருத்த சபையினது முதலாவது வேதாகமம் ஜியோவானி டயோடாடி என்பவரினால் தயாரிக்கப்பட்டது. மார்க்க ரீதியான சித்திரவதைக் காரணமாக இவர் தன் குடும்பத்தினர் சகிதம் இத்தாலியை விட்டு ஓடிப்போக வேண்டியதாயிருந்தது. இத்தாலிய மொழியில் இவர் மொழிபெயர்த்த வேதாகமம் 1607 இல் ஜெனீவாவில் பிரசுரமாகியது.