குடும்ப ஜெபம்!

தியானம்: மே 26 சனி; வாசிப்பு: யோசுவா 24:14-16

நானும் என் வீட்டாருமோவென்றால்,
கர்த்தரையே சேவிப்போம். (யோசுவா 24:15)

குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு என்பார்கள். நான் சிறுவனாயிருந்தபோது எனது தாய் தந்தை இருவரும் ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு பிள்ளைகளாகிய எங்கள் எல்லோரையும் அழைத்து குடும்ப ஜெபம் வைப்பார்கள். இரவு குடும்ப ஜெபம் முடிந்த பின்னர்தான் சாப்பிடச் செல்வோம். என் தாயார் பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரையும் கண்ணீருடன் தேவனிடம் ஒப்படைத்து இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன் நடந்த தெய்வமே என்ற பாடலைப் பாடி தேவனை ஸ்தோத்தரித்து ஜெபிப்பார்கள். சுகவீனமான மக்கள், தேவையில் உள்ளோர் அனைவருக்காகவும் ஜெபிப்பார்கள். கர்த்தர் எங்கள் குடும்பத்தை அதிசயமாக வழிநடத்தினார்.

யோபு ஒரு சரியான குடும்பத் தலைவனுக்கு உதாரணமானவர். அவர், அதிகாலமே எழுந்து தன்னுடைய பிள்ளைகளின் இலக்கத்தின்படியே சர்வாங்க பலிகளைச் செலுத்துவார் (யோபு 1:5). அடிக்கடி வழிதவறிப்போன இஸ்ரவேல் மக்கள் மத்தியில் யோசுவா ஒரு உதாரணமாக விளங்கினார். கர்த்தரைச் சேவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய யோசுவா, ஜனங்கள் யாரைச் சேவித்தாலும், தன்னைப் பொறுத்தளவில் தான் கர்த்தரையே சேவிப்பதாக சவால் விட்டார். அந்த நேரத்திலே அவரது வாயில் புறப்பட்ட வார்த்தையானது மிகவும் பெலம் வாய்ந்தது. அவர், நான் சேவிப்பேன் என்று சொல்லாமல், நானும் என் வீட்டாரும்… என்று சொன்னதை நாம் சிந்திக்கவேண்டும். யோசுவா தன் குடும்பத்தாரின் சம்மதத்தைக் கேட்டாரோ இல்லையோ தெரியாது. ஆனால் அவருடைய வார்த்தை மிகவும் திட்டவட்டமாக வெளிவந்தது.

சிறைச்சாலைக்காரனுக்குப் பவுல் சொன்னதும் இதைத்தான். நீ விசுவாசித்தால் உன் வாழ்க்கை மாறும்போது, அதைப் பார்த்து, உன் வீட்டாரும் தேவனண்டை வருவார்கள். அன்பானவர்களே, குடும்பம் என்பது தேவன் அருளிய மகத்தான ஈவு. அது அவருடைய அநாதித் திட்டம். அந்தக் குடும்பம் செழித்திருக்கவேண்டுமானால் நாம் குடும்பமாக தேவனுடைய பாதத்தில் அமர வேண்டியது கட்டாயமல்லவா? அப்படியிருக்க, நம்முடைய குடும்பத்தில் குடும்ப ஜெப ஒழுங்கை எவ்வளவாகக் கடைபிடித்து வருகின்றோம். சாக்குப்போக்குகள் சொல்லி குடும்ப ஜெபத்தைப் புறக்கணிப்பது நமக்கு நல்லதல்ல. நமக்குக் குடும்பத்தை அமைத்து தந்தவரை மறந்து நாம் குடும்ப வாழ்வை அனுபவிப்பது எப்படி? ஒன்றுகூடி ஜெபிக்கும் குடும்பம் ஒன்றாய் வாழும். அப்பொழுதுதான் நமது பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் (ஏசாயா 54:13).

ஜெபம்: கர்த்தாவே, நீர் அமைத்துத் தந்த குடும்பத்துக்காக நன்றி. தினமும் குடும்பமாக ஜெபித்து, உம்மையேத் தேடி, உமக்கென்று வாழ கிருபை தாரும். ஆமென்.