Dr.W.வாரன் வியர்ஸ்பி
(நவம்பர்-டிசம்பர் 2021)
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள் (மாற்கு 6:3).
நமது ஆண்டவர் இந்த உலகில் மக்களுக்குக் கற்பிக்கும்போது, பல்வேறு தொழில்களைப் பற்றிப் பேசினார். ஒருநாள் அவர் கூறினார்: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் (மத்.13:3). ஆனால், இயேசு ஒரு விவசாயி அல்ல. இன்னொரு தடவை தன்னை நானே நல்ல மேய்ப்பன் என்றார் (யோவான் 10:14). இந்த உலகில் இருந்தபோது இயேசு ஒருபோதும் மேய்ப்பனாக இருந்ததில்லை. இயேசு என்னவாயிருந்தார்? தெரியுமா? அவர் ஒரு தச்சனாய் இருந்தார்.
அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் உபதேசம் பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும், தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களை குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார் (மாற்கு 6: 1-6) வரை உள்ள வசனங்கள்.
இயேசு இந்த உலகத்துக்கு வந்தபோது தச்சுத் தொழிலைத் தெரிந்தெடுக்கக் காரணம் என்ன? அவர் ஒரு போதகர் (ஆசிரியர்) அவர் குணமாக்குகிறவர். ஆனால், முதலில் அவர் ஒரு தச்சனாய் இருந்தார். பின்னர்தான் அவர் போதிக்கவும், குணமாக்கவும் ஆரம்பித்தார். அவர் நாசரேத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் அவர் தமக்குரிய இடத்தில் ஒரு தச்சனாக அமர்ந்து வேலை செய்தார்.
ஒரு தச்சனின் வீடு
நமது ஆண்டவர் ஏன் ஒரு தச்சன் ஆனார்? என்பதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும். முதலாவது இவர் ஒரு தச்சனின் வீட்டில் பிறந்தார். யோசேப்பு, இந்த உலகத்தில் இயேசுவின் தகப்பன், ஒரு தச்சனாய் இருந்தார். மத்தேயு 13:55 இல் இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? என்று வாசிக்கிறோம். நம் ஆண்டவராகிய இயேசு ஒரு தச்சனின் வீட்டில் பிறந்தார். இது யூத மக்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவர்கள் தங்களுடைய மேசியா ஒரு பெரிய இராஜாவாக, ஒரு இராஜ அரண்மனையில் பிறப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் ஒரு சாதாரண தச்சனின் வீட்டில் பிறந்தார். இயேசு ஒரு மாபெரும் போர்வீரனாக, ஒரு பிடித்தடக்கும் வல்லவராக, யூத மக்களை ரோமரின் அதிகாரத்திலிருந்து விடுவிப்பவராக பிறந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படித் தோன்றவில்லை; ஒரு சாதாரணத் தொழிலாளியாக வந்தார். அவர் ஒரு வேலைக்காரன்; ஒரு தச்சன்!
பழைய ஏற்பாட்டு நூல்கள் அவர் ஒரு பாடு படும் தாசனாகத் தோன்றுவார் என்று குறிப்பிட்டன. ஏசாயா 52,53ஆம் அதிகாரங்களில் ஆண்டவர் ஒரு பாடுபடும் தாசனாக வர்ணிக்கப்படுகிறார். பிலிப்பியர் 2:5 முதல் 8 வசனங்களில், இயேசு அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் என்று பார்க்கிறோம். இயேசு இந்த உலகத்தில் வந்தபோது எபிரெயர் 10:7 இன்படி, தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்றார். இயேசு ஒரு தாழ்மையான ஊழியனாக வந்தார்; அவர் ஒரு தச்சனாக வந்தார்!
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, சாதாரண மக்களோடு பழகினார். வேதாகமத்தில், சாதாரண ஏழை ஜனங்கள் இயேசு பேசியதைச் சந்தோஷமாகக் கேட்டார்கள் என்று வாசிக்கிறோம். ஏனெனில் இந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன தேவை என்றும் இயேசு அறிந்திருந்தார். கடின உழைப்பின் உயர்வை அவர் அறிந்திருந்தார். வேலை செய்வது எப்படி இருக்கும், எப்படி களைப்பு உண்டாகும் என்பது அவருக்கு அனுபவபூர்வமாகத் தெரியும்.
யூத மக்களுக்குப் பல பழமொழிகள் உண்டு. அவற்றில் ஒன்று, “நீங்கள் உங்கள் மகனுக்கு வேலை செய்வது எப்படியென்று கற்றுக்கொடுக்காவிட்டால், ஒரு திருடனாய் இருப்பது எப்படியென்று அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.”
யூதர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை செய்வதில் பயிற்சியளித்தார்கள். ரபீக்கள்கூட வேலை செய்தனர். அப்போஸ்தலனாகிய பவுல் கூடாரம் செய்யும் தொழில் செய்தவர். இயேசு ஒரு தச்சனாக வேலை செய்தார். இதிலிருந்து இயேசு இந்த உலகத்தில் வந்தபோது நம்மைப் போன்ற சாதாரண மக்களோடு மகனாகப் பழகி, அவர்களைப்போல ஒரு வேலையும் செய்து வந்தார். அதுதான் தச்சுத்தொழில்.
ஒரு தச்சனின் வேலை
இயேசு ஒரு தச்சன் ஆவதற்கு இரண்டாவது காரணமாக நான் கருதுவது, அவர் ஒரு தச்சனின் வீட்டில் பிறந்தது மட்டுமல்ல, அவர் தச்சு வேலை செய்யவும் வந்தார் என்பதே. ஒரு தச்சன் செய்வது என்ன? தச்சன் மரத்தளவாடங்களைச் செய்கிறான். பழுதான மரச்சாமான்களைப் பழுது பார்க்கிறான். எனக்கு அத்தகைய திறமை இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்குக் கருவிகளை எடுத்துக்கொண்டு வீட்டில் கதவுகளிலும், ஜன்னல்களிலும், பெட்டிகளிலும் பழுது பார்க்கவும், ஆணி அடிக்கவும் மிகவும் ஆசை. ஆனால், எனக்கு அந்தத் திறமை இல்லை. என்னுடைய வீட்டில் மற்ற பலர் இத்தகைய வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், எனக்கு ஒன்றும் தெரியாது.
நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு மரத்தினால் கட்டுமானப் பணிகள் செய்யவும், பழுது பார்க்கவும் தெரியும். அவர் தச்சு வேலை செய்ய விரும்பி வந்தார். இயேசு வாலிபனாய் தச்சு வேலை செய்துவந்த நாட்களில் ஆட்கள் தங்கள் உடைந்த மேஜைகளையும், நாற்காலிகளையும் கொண்டுவந்து இயேசுவிடம் பழுது பார்த்துத் தரச் சொல்லியிருப்பார்கள். தங்கள் வீடுகளுக்குத் தேவையான இதர தளவாடங்களைப் புதிதாய்ச் செய்து தரச் சொல்லியிருப்பார்கள். விவசாயத்துக்குத் தேவையான கலப்பைகள், நுகத்தடிகள் போன்றவற்றை செய்து தரக் கேட்டிருப்பார்கள். இயேசு இவற்றைத் திறமையுடன் செய்து, மக்களுக்கு உரிய நேரத்தில் கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
இயேசு இந்த உலகத்துக்கு வருவதற்கு முன்னர், பிதாவோடு சேர்ந்து இந்த அகில உலகத்தையும் அனைத்துப் படைப்புகளையும் உண்டாக்கினார். அவருக்குக் கட்டுதல், உருவாக்குதல், உண்டாக்குதல் என்பவை எப்படி? என்று நன்றாகத் தெரியும். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான்1:3). சகலத்தையும் படைத்தவர் இயேசுவே! இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சபையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார் (மத்.16:18). சபை என்பது ஒரு சிறு பிரிவோ, மனிதனில் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்போ அல்ல.
பெந்தெகோஸ்தே நாளுக்குப் பின் ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகமெங்கும் உள்ளவர்கள் கூடியதுதான் சபை. பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், …பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள் (1 பேதுரு 2:5).
அகில உலகையும் படைத்த இயேசு இன்று சபையைக் கட்டியெழுப்பி வருகிறார். அவர் இப்பொழுது கட்டியெழுப்பிக் கொண்டிருப்பதில் நீங்கள் ஓர் அங்கமா? இயேசுகிறிஸ்துவே அதைக் கட்டும் தொழிலைச் செய்கிறார். ஆனால் அதை அழிக்கும் தொழிலைச் சாத்தான் செய்து கொண்டிருக்கிறான். ஒருநாள் இயேசு இப்படிக் கூறினார்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா.10:10).
பாவம் ஒரு அழிக்கும் சக்தி. சாத்தான் மக்களைப் பாவம் செய்யும்படி தூண்டுகிறான். சோதிக்கிறான். பாவம் குடும்பங்களை அழிக்கிறது. பாவம் மக்களின் வாழ்க்கையை அழிக்கிறது. இயேசு கிறிஸ்து கட்டியெழுப்ப வந்தாரேயன்றி, எதையும் அழிக்க வரவில்லை. அவர் ஒரு தச்சன்; அவர் தச்சு வேலை செய்ய வந்தார். அவர் புதிய தளவாடங்களைச் செய்கிறார். கட்டுகிறார், பழையவற்றைப் பழுது பார்க்கிறார்.
ஆண்டவர் பரலோகத்தில் ஒரு வீடு கட்டுகிறார். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்( யோவான் 14:2,3).
இயேசுவைக் குறித்து நாம் அறிந்துகொண்ட தில் ஒரு அற்புதமான ஒரு காரியம் என்னவெனில் நாம் எங்கே போவோம் என்று அறிந்திருக்கிறோம். ஒருவேளை அங்கே செல்ல எவ்வளவு காலம் ஆகும் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இயேசு திரும்பவருவாரா? நாம் இறந்து விடுவோமா? நமக்கு எதுவும் தெரியாது. கிறிஸ்துவுக்குள் மரித்துவிட்டு, பரலோகத்தில் விழித்திருப்போமா? இதை நம் ஆண்டவர் நமக்கு அறிவிக்கவில்லை. ஆனால், அவர் நமக்கு ஒரு வீட்டைப் பரலோகத்தில் கட்டுவதாக உறுதி கூறியுள்ளார். இது நமக்கு அதிக உற்சாகமூட்டுவதாக உள்ளது.
- அகில உலகத்தையும் படைத்த தச்சன்,
- தமது திருச்சபையைக் கட்டியெழுப்பும் தச்சன், தமது சபைக்காகப் பரலோகத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவர் மனித வாழ்க்கையையும் கட்டிக் கொண்டிருக்கிறார். இன்றும், இப்பொழுதும் உங்கள் வாழ்க்கை ஆண்டவரால் கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அல்லது சாத்தானால் கிழித்து, இடித்து, எறியப்பட்டுக் கொண்டிருக்கும். இதற்கு இடையில் நடுநிலை ஒன்றும் இல்லை. நாம் எப்போதுமே வாழ்வில் அசைவற்று, சிலைபோல இருப்பதில்லை. நாம் கட்டி எழுப்பப்பட்டு, வளர்ந்து முன்னேறிக் கொண்டிருப்போம். அல்லது, நாம் வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று, சீர்கெட்டுச் சாத்தானால் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருப்போம்.
அகில உலகிலும் மாபெரும் அழிவு சக்தி பாவமே! பாவம் மக்களின் உள்ளத்தைக் கெடுக்கும் உணர்ச்சிகளையும், சித்தங்களையும் கெடுத்து விடும். பாவம் மனிதனின் சரீரத்தையும் கெடுத்து அழித்துவிடும். ஆனால் இயேசுகிறிஸ்து வாழ்வையும், ஜீவன்களையும் கட்டியெழுப்ப வந்தார். மாற்கு 6:2இல் மக்கள் இவ்வாறு கூறியதாக வாசிக்கிறோம். இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? 5ஆம் வசனத்தில் அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவரால் ஏன் அற்புதங்கள் செய்ய முடியவில்லை? வசனம் 6இல் “அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு” ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப விரும்புகிறார். நீங்கள் விசுவாசித்தால், நிச்சயம் அவர் செய்வார்.
ஒரு தச்சனின் குறைகள்
ஆண்டவராகிய இயேசு ஏன் ஒரு தச்சனாயிருந்தார் என்பதற்கு மூன்றாவதாக ஒரு காரணம் கூறமுடியும். அவர் ஒரு தச்சனின் குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, தச்சனின் வேலையைச் செய்ய வந்தது மட்டுமல்ல, அவர் தச்சனின் முறைகளையும் பின்பற்ற வந்தார்.
ஒரு தச்சன் ஒரு தடியைப் பார்த்ததுமே அதில் என்ன செய்யலாம்? அதன் தன்மை என்ன? அதன் மதிப்பு என்னவென்பதையும் சொல்லிவிடுவான். ஆனால், நம்மால் அதைக் கண்டு பிடிக்கவோ, கூறவோ முடியாது. ஆனால், தச்சன் அதைக் கூறமுடியும். எத்தனையோ தடவை இயேசு ஆட்களுடன் சென்று மரங்களை முறித்து, “இந்த மரத்திலிருந்து இன்னின்ன பொருட்களைச் செய்ய முடியும்” என்று கூறியிருப்பார். தேவன் உங்களைப் பார்த்து, “உன்னில் இன்னின்ன திறமைகள் இருக்கின்றன” என்று கூறுவார். நீங்கள் முகக் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து “என்னால் ஒன்றும் முடியாது. என்னால் எதையும் செய்ய முடியாது” என்று கூறுவீர்கள். இல்லை உங்களால் முடியும்.
இயேசு ஒருநாள் சீமோனைப் பார்த்து, “நீ யோனாவின் மகனாகிய சீமோன். நீ கேபா எனப்படுவாய்” என்றார். கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் (இதன் பொருள் கற்பாறை மத். 16:18). பேதுருவின் நண்பர்கள் இதைக் கேட்டு சிரித்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் கண்டபடி பேதுருவில் “கன்மலை” போன்ற உறுதித்தன்மைகள் எதுவும் இல்லை. ஆனால், இயேசு அவனுக்குள் இருந்த திடத்தன்மையை அறிந்தார்.
தர்சு பட்டணத்தில் சவுலில் இருந்த ஆக்க சக்தியை இயேசு கண்டறிந்தார். யோவான் மாற்குவிடம் இருந்த திறமைகளை இயேசு அறிந்தார். உங்களில் இருக்கும் ஆக்க சக்தியையும் அவர் கண்டறிவார். ஆண்டவர் ஒரு தச்சனின் முறையைப் பின்பற்றுகிறார். தச்சனிடம் வேலை செய்யும்படி கொடுக்கப்படும் பொருள் மரம். அந்த மரத்தைக் கண்டதும் தச்சன் இது தரமானது. இது வைரம். இதில் நல்ல தளவாடங்களைச் செய்யலாம். இது கலப்பை செய்ய உதவாது. இதில் நல்ல கட்டில், மேஜை, பெட்டிகள் செய்யலாம் என்று கூறிவிடுவார்.
என்ன பொருளைச் செய்ய வேண்டுமோ, அதற்குரிய வரைபடம், திட்டம் ஆகியவை அவனிடம் இருக்கும். செய்யவேண்டிய பொருளை இலட்சியமாகக் கொண்டு, திட்டத்தைப் பயன்படுத்திச் செய்து முடிப்பான். இதுபோலவே தேவன் உங்களைக் கண்டதும், என்ன செய்ய சொல்லலாம் என்பதை அறிந்துகொள்ளுகிறார். நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று அவர் நிச்சயிக்கிறார். (போதகர், மிஷனெரி, பாடகர், ஓய்வுநாள் ஆசிரியர், எழுத்தாளர், சுவிசேஷகர், அப்போஸ்தலர், தீர்க்கத்தரிசி).
அடுத்து உங்கள் வாழ்க்கையில் என்ன செய்வது என்று அறியாமல், நீங்கள் விலகி, அலைய வேண்டியதில்லை. நீங்கள் தச்சனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் மூலம் செய்யப்பட வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்கட்டும். அவர் மிகவும் பொறுமைசாலி. அவர் தாம் செய்யும் காரியத்துக்கு அதிக சிரமம் எடுத்துக்கொள்ளுகிறார். அவருக்குத் தம் வேலைக்கு என்னென்ன கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியும். மரம் ஆகிய நான் எப்பொழுது சமப்படுத்தப்பட வேண்டும்? என்மீது உப்புத்தாள் கொண்டு தேய்த்து எப்போது மெருகூட்ட வேண்டும்? எப்பொழுது வழவழப்பாக இருக்கும்படி செய்யப்பட வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.
என் வாழ்க்கையில் எப்போது கர்த்தருடைய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? எப்பொழுது என் வாழ்க்கையில் உள்ள சிறுசிறு பிசிறுகள் போன்ற தவறுகளை விலக்கி மெருகூட்ட மற்றவர்களை, ஊழியர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஆண்டவராகிய இயேசு ஒரு தச்சனின் வேலை முறையைப் பின்பற்றுகிறார். அவர் தொடங்குகிற எல்லா வேலைகளையும், தச்சனைப்போலப் பரிபூரணமாகச் செய்து முடித்துவிடுகிறார். அவர் எந்த வேலையையும் பாதி முடிந்தநிலையில் விட்டு விடுவதில்லை. ஆனால், நம்முடைய பொறுப்பு, நம்மை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
ஒரு தச்சனின் மரணம்
ஒரு தச்சனின் குடும்பத்தில் பிறந்ததனால் இயேசு ஒரு தச்சனாயிருந்தார். அவர் கட்டுமானப் பணியையும், பழுதுபார்க்கும் பணியையும் செய்ய வந்தார். அவர் தச்சனின் வேலை முறைகளைப் பின்பற்றினார். இறுதியாக ஒரு தச்சனின் மரணத்தை அனுபவித்தார்.
அவர் கல்லெறிந்து கொல்லப்படவில்லை. அவர் ஒரு மரத்தின்மீது படுக்க வைக்கப்பட்டுக் கைகளிலும் கால்களிலும் ஆணி அறையப்பட்டார். எத்தனை முறையோ இயேசு தச்சன் என்ற நிலையில் மரங்களைச் சுமந்துகொண்டு சென்றிருப்பார். மரங்களை வெட்டிச் சமப்படுத்தியிருப்பார். உப்புத் தாளினால் பிசுறுகள் நீங்கச் செய்திருப்பார், பளபளப்பாக்கியிருப்பார். அதைப் பயன்படுத்தி தளவாடமோ, விவசாயக் கருவியோ செய்திருப்பார்.
ஒருநாள் சுத்தியையும், ஆணிகளையும் எடுத்துக்கொண்டு இயேசுவையும் அழைத்துக் கொண்டுபோனார்கள். இவை இயேசு தச்சனாய் இருந்தபோது தினமும் கையில் எடுத்து வேலை செய்தவை. இயேசுவை ஒரு மரத்தில் வைத்து ஆணி அடித்தார்கள். பேதுரு இப்படி எழுதுகிறார். அவர்தாமே, தமது சரீரத்திலே, நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1பேது.2:24).
உண்மையிலே ஆணிகள் இயேசுவைச் சிலுவையில் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. அவருடைய அன்பே அவரைத் தாங்கியது. அவர் ஒரு தச்சனின் மரணத்தை அடைந்தார். ஒரு மரத்தில் ஆணிகளால் அடிக்கப்பட்டு மரித்தார். அவர் அந்த மரணத்தை ஏன் தெரிந்துகொண்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்களும், நானும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் இந்தத் தச்சனின் மரணத்தை அடைந்தார்.
இயேசு ஒரு தச்சன் என்று எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து பயன்பெறுவதற்காக அவர் என்னவெல்லாம் அனுபவித்தார் என்பதை நினைவுகூருங்கள். அவர் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வேண்டியதிருந்தது. ஒரு தச்சன் ஒரு மரத்தைச் சுத்தம் செய்து உருப்படியாகக் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குமோ, தேவையில்லாத பகுதிகளை வெட்டியெறிய வேண்டும். நீளத்தைக் குறைக்கவேண்டும். பருமனைக் குறைக்கவேண்டும். சொரசொரப்பானதை வழுவழுப்பாக்கவேண்டும்.
அதுபோல நம்மை இரட்சிக்க, நம்முடைய பாவங்களை, தம் சரீரத்தில் சுமந்து, நம்மைத் தம் இரத்தத்தால் கழுவிச் சுத்திகரித்து, மீட்டுக் கொண்டார். அவர் நம்மை இரட்சித்துவிட்டார் என்று நாம் விசுவாசிக்கும்போது. அவர் நம் வாழ்வில் கிரியை செய்து, நாம் வாழ்வில் அவரது சித்தப்படி என்ன ஆகவேண்டுமென்று திட்டமிட்டுள்ளாரோ, அப்படி ஆக்குகிறார். இயேசுகிறிஸ்து இப்படி நமக்காக உயிர் விட்டார் என்று அறிவது ஆச்சரியமாயிருக்கிறது!
உங்கள் வாழ்க்கையை உருவாக்குவது யார்? உங்கள் வாழ்க்கையைச் சாத்தான் கெடுத்துக் கொண்டிருக்கிறானா? நீங்கள் ஒரு வேளை “யாருடைய உதவியுமின்றி நானாகவே என் வாழ்க்கையில் முன்னேறியவன்” என்று கூறலாம்.
என் நண்பனே, எந்த ஆணும், பெண்ணும் இந்த உலகில் தானாக முன்வந்ததாகச் சொல்ல முடியாது. நாமாகவோ, நம்மிலோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆண்டவராகிய இயேசுவின் கைகளில் ஒப்புக்கொடுத்தால், இந்த அற்புதமான தச்சன் உங்களைப் பண்படுத்தி, இரட்சித்து, உங்களிலிருந்து ஒரு ஊழியத்துக்குப் பயனுள்ள பாத்திரத்தை உருவாக்கிவிடுவார்.
ஆம், அவர் ஒரு தச்சன்தான்! அவர் ஒரு தச்சனின் குடும்பத்தில் பிறந்தார். எனவே அவர் நம்மோடு, நம்மில் ஒருவரைப்போல் பழகுகிறார். வேலை செய்கிறார் உழைக்கிறார் அவர் தச்சனின் வேலையைச் செய்ய வந்தார். நம்முடைய வாழ்க்கையை அழகிய, பயன்மிக்கவைகளாக மாற்றி உருவாக்கும் பணியைச் செய்கிறார். அவர் தச்சனின் வேலை முறைகளைப் பின்பற்றுகிறார். நம் வாழ்வில் அவர் வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்றும்படி பொறுமையாக அவற்றைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு தச்சனின் மரணத்தையடைந்தார். அவர் மூலமாக நீங்கள் நித்திய ஜீவனை அடைந்து வாழும்படி, அவர் தச்சனின் வேலை முறைகளைப் பின்பற்றுகிறார். நம் வாழ்வில் அவர் வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்றும்படி பொறுமையாக அவற்றைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒரு தச்சனின் மரணத்தை அடைந்தார். அவர் மூலமாக நீங்கள் நித்திய ஜீவனை அடைந்து வாழும்படி, அவர் உங்களுக்காக மரித்தார்.
ஒருவேளை இப்பொழுதே நீங்கள் அவர் முன் தலைகுனிந்து, அடிபணிந்து இப்படிக் கூறலாம்: “ஆண்டவராகிய இயேசுவே, நீரே என் இரட்சகர் இப்பொழுதே நான் உம்மை விசுவாசிக்கிறேன். நாம் உம்மை ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னுடைய வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறேன். களிமண்ணைக் குயவன் உருவாக்குவதுபோல, என்னை உமது சித்தத்தின்படி நல்ல பாத்திரமாக உருவாக்கும்; என்னுடைய இரட்சகராயிரும்; உமது மகிமைக்காக இதைச் செய்தருளும்” ஆமென்.
மொழியாக்கம்: Mr.G.வில்சன்
உங்களுக்கு தெரியுமா?
வேதாகமம் நாம் தினசரி உட்கொள்ளும் ஆகாரமேயொழிய அது விசேஷ தினங்களில் நாம் உண்ணும் தின்பண்டமல்ல!