வெற்றியின் முடிவு!

தியானம்: ஜுன் 30 வியாழன்; வாசிப்பு: லூக்கா 22:24-34

நீ குணப்பட்டபின்பு
உன் சகோதரரை ஸ்திரப்படுத்து
(லூக்கா 22:32)

இயேசுவின் அழைப்புப் பெற்ற பன்னிரண்டு சீஷர்களில் இன்னொருவர் சீமோன் பேதுரு. இவரையும் ஆண்டவர் மனுஷரைத் தேவனுக்காய் பிடிக்கும் உன்னதமான ஊழியத்துக்கே அழைத்தார். இன்றைய தியானப்பகுதியிலே அவர் எதிர்கொள்ள இருக்கும் ஒரு சோதனையைக் குறித்து ஆண்டவர் எச்சரித்ததை வாசிக்கிறோம். ஆனால் பேதுருவோ அதை உணராதவராக, உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன், ஆண்டவரே என்று கூறினார். ஆனால், பினனர் கிறிஸ்து கூறியதுபோலவே, அவரைத் தெரியாது என மூன்று தடவைகள் பேதுரு மறுதலித்தார். ஆனால் தான் செய்த தவறை உணர்ந்தவராக மனங்கசந்து அழுது மீண்டும் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டார்.

மீண்டும் ஆண்டவரின் மரணத்தின் பின்னர், மீன் பிடிப்பதற்காக தனது சக தோழர்களையும் கூட்டிக்கொண்டு கடலில் இறங்கியவரை, தேவன் கடற்கரையில் வைத்துச் சந்தித்தார். என்னை நேசிக்கிறாயா என்ற கேள்வியை மூன்று தடவைகள் ஆண்டவர் கேட்டார். உம்மை அறியேன் என மூன்றுதரம் மறுதலித்த அதே பேதுரு, இப்போது அதே ஆண்டவரை நோக்கி, உம்மை நேசிக்கிறேன் என மூன்று தடவைகள் அறிக்கையிடுகிறார்.

என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொன்ன ஆண்டவர், பேதுருவை தாம் அழைத்ததன் நோக்கத்தை, பேதுருவுக்குரிய ஊழியப் பொறுப்பை இந்த இடத்தில் வைத்து வெளிப்படுத்தினார். பேதுருவும், யூதாசும் ஒரே பணிக்காக அழைக்கப்பட்டவர்களாய் இருந்தும், இருவரது நோக்கமும் வித்தியாசமானதாய் இருந்தது. பேதுரு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஆண்டவரையே பின்பற்றினான், ஆனால் யூதாஸோ பண ஆசை உள்ளவனாக, இயேசுவைவிட அவருடைய வல்லமையிலும் அதிகாரத்திலுமே நாட்டம் வைத்தான்.

தேவ அழைப்பைப் பெற்றதுடன் காரியம் முடிவதில்லை. அதில் நாம் நிலைத்து நிற்கவேண்டும். பேதுருவும் யூதாசும் ஆண்டவரால் ஒரே அழைப்பைப் பெற்று வந்தவர்கள். ஆனால் அந்த அழைப்பைப் பின்பற்றுவதில் இருவருமே வித்தியாசமாய் காணப்பட்டார்கள். ஒருவன் தோற்றுப்போனான். மற்றவரோ விழுந்தாலும், தேவ அன்புக்குள் மீண்டும் வந்தவராக, கிறிஸ்துவுக்காய் உன்னதமான ஊழியத்தைச் செய்து, அநேகரை அவரண்டை வழிநடத்தினார். கிறிஸ்து அவரை எதற்காகப் பிடித்தாரோ அந்த நோக்கத்தை பேதுரு பூரணப்படுத்தினார். நமது அழைப்பில் நாம் எப்படியாக செயற்படுகிறோம்? நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கிறதுபோல நாமும் உண்மையுள்ள இருதயத்துடன் அவருக்காய் பணி செய்வோமா!

ஜெபம்: உன்னதமான பணிக்காக என்னையும் அழைத்த தேவனே, உமது ஊழியத்தை முழு மனதோடு செய்ய உதவி செய்தருளும். ஆமென்.