நன்மை செய்வதில் ஒருமனப்படுங்கள்!
தியானம்: 2023 அக்டோபர் 22 ஞாயிறு | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 5:1-10

கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? (அப்.5:9).
குடும்ப வாழ்க்கையிலே கணவனும் மனைவியும் சேர்ந்து காரியங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதால் உள்ள நன்மை என்னவென்றால், அவர்களில் ஒருவர், தெரியாமல் விடக்கூடிய தவறுகளை மற்றவர் கண்டு, அதைத் திருத்திக்கொள்ள ஏதுவாக அமையும். ஆனால், தாம் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு தவறுக்கு உடன் படுவார்களேயானால் அது மிகவும் பரிதாபகரமானது!
இன்று வாசித்த வேதப்பகுதியில் அனனியா, சப்பீராள் ஆகிய இருவரும் தமது நிலத்தை விற்று அதை அப்போஸ்தலருக்குக் கொடுக்கவேண்டும் என விரும்பினார்கள். அது நல்லதொரு தீர்மானமே. ஆனால், தாம் விற்ற பணத்தில் கொஞ்சத்தைத் தமக்கென வைத்துக்கொண்டு, முழுத்தொகையையும் அப்போஸ்தலருக்குக் கொடுப்பதாக மாய்மாலம் பண்ணினார்களே! ஆம், அந்தக் காரியத்தையே கர்த்தர் வெறுத்தார். அவர்கள் இருவரும் தமது வஞ்சக செயலை அப்போஸ்தலர்கள் அறியமாட்டார்கள் என நினைத்தார்கள். ஆனால், அவர்கள் வஞ்சித்தது கர்த்தருடைய ஊழியரை அல்ல; மாறாக, அவர்கள் கர்த்தரையே வஞ்சித்தார்கள். அதன் காரணமாக அவர்கள் இருவரும் கர்த்தரின் தண்டனைக்கு ஆளானார்கள்.
ஆனால், பழைய ஏற்பாட்டில் நாபாலின் மனைவி அபிகாயில், தன் கணவன் மதிகெட்டு ஒரு தவறான காரியத்தைச் செய்யத் துணிந்தான் என்பதைக் கண்டதும் அவள் புத்தியாய் ஒரு காரியத்தைச் செய்தாள். தன் கணவனிடம் “நீங்கள் செய்வது தவறு” என அவனது தவறைச் சுட்டிக்காட்டினாலும் அவன் தன் தவறை உணர்ந்துகொள்ளமாட்டான் என்பதை அறிந்துகொண்ட அவள், நேரடி யாக நாபால் அவமதித்த தாவீதிடம் சென்று தன் கணவன் செய்த தவறுக்காய் மன்னிப்புக் கேட்டு, தன் கணவனையும் தன் குடும்பத்தையும் ஒரு பெரும் அழிவிலிருந்து காத்துக்கொண்டாள் (1சாமு.25).
பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்று, ஒருவர் நன்மை செய்யும்போது மற்றவர் பாராட்டுகிறீர்களா? அதேவேளை ஒருவர் தவறான தீர்மானங்களைச் செய்ய முற்படும்போது மற்றவர் அதை அன்போடும் ஞானத்தோடும் உணர்த்திக் காட்டுகிறீர்களா? உங்கள் தீர்மானங்கள் தெரிந்தெடுப்புக்கள் எல்லாவற்றிலும் இருவரும் சேர்ந்து கர்த்தரைக் கனம் பண்ணுகிறீர்களா? அப்படிக் கனம் பண்ணும்போது, கர்த்தருடைய மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். அப்படி யாக கர்த்தரைக் கனப்படுத்தவும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்கவும் இப்போதே தீர்மானிப்பீர்களா?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்கள் தீர்மானங்களில் உம்மைத் திருப்திப்படுத்தவும், உம்மைக் கனப்படுத்தவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நாங்கள் மாய்மாலத்தை வெறுத்து உமக்கு உண்மையாய் இருக்கவும் உதவி செய்தருளும். ஆமென்.