காலமே தேவனைத் தேடு!
தியானம்: 2023 அக்டோபர் 23 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 143:1-12

“அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்; உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்..” (சங்.143:8).
பாவமும் பாடுகளும் நிறைந்த இந்த உலகத்திலே, கர்த்தருடைய வழிகளில் தடுமாற்றமின்றி நடப்பதற்கு அனுதினமும் அவரது சமுகத்தை நாம் தேட வேண்டியது முக்கியமாகும். தேவன் நமது கரத்தில் கொடுத்த பொறுப்புகளை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்துமுடிக்க, தினமும் அதிகாலை நேரத்தில் பரமனின் பாதத்தை நாடினார்கள் தேவபக்தர்கள்.
தன்னை அழைத்த தேவனின் முன் நிற்க அதிகாலையில் எழுந்தார்; ஆபிரகாம் (ஆதி.19:27). தன்னைத் தெரிந்துகொண்ட தேவனை ஆராதிக்க ஒரு பலி பீடத்தைக் கட்டும்படிக்கு அதிகாலையில் எழுந்தார் யாக்கோபு. (ஆதி.28:18). தம் ஜனத்தை மீட்க அழைக்கப்பட்ட மோசே தேவனைத் தரிசிக்க அதிகாலையில் சீனாய் மலையில் வந்து சேர்ந்தார் (யாத்.34:4). தமக்காக ஒரு குழந்தையைக் கேட்ட அன்னாளும், எல்க்கானாவும் அதிகாலையில் கர்த்தரின் பாதத்தில் விண்ணப்பித்தனர் (1சாமுவேல் 1:19). தம் பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்த, அதிகாலையில் எழுந்தார் பக்தனான யோபு (யோபு 1:5). தேவனைத் துதித்து, ஜெபிக்க தாவீது ராஜா அதிகாலையில் எழுந்திருந்தார் (சங்.119:147, 57:8). காலமே எழுந்திருந்து நகரத் தின் பிரபுக்களோடு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான் எசேக்கியா (2நாளா. 29:20), நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுங்கூட அதிகாலையில் எழுந்து வனாந்தரமான ஒரு இடத்தை நாடிச் சென்று ஜெபித்தார் (மாற்கு 1:35).
ஆம்! பிரியமானவர்களே, அதிக சந்தடியற்ற அதிகாலை நேரமானது அமர்ந்த தண்ணீரைப் போன்றது. நமது உள்ளங்களில் எந்தவிதமான அழுத்தங்களோ கலக்கங்களோ இல்லாத அருமையான நேரம் அது. கர்த்தரின் சமுகத்தைத் தேடுவதற்கு அதுவே சிறந்த வேளையாகும். அதனாலேயே அநேக தேவபக்தர்கள் பொழுது புலர்வதற்கு முன்பதாக எழுந்திருந்து, அந்த அமைதியான வேளையிலே தேவனின் சத்தத்தைக் கேட்கவேண்டுமென் பதற்காக அவர் பாதத்தை நாடிச் சென்றார்கள்.
தேவபிள்ளையே, பாடுகள் நிறைந்த வாழ்க்கையிலே, உன்னை அன்போடு தேற்ற, உன் விண்ணப்பங்களைக் கேட்க, உன்னை வழிநடத்த, உனக்குப் போதித்து புத்திச்சொல்ல, உன்னை ஆசீர்வதிக்கக் காத்திருக்கும் அன்பர் இயேசுவின் பாதத்தை அதிகாலையில் நாடு. அவர்தாமே உனக்கு சந்தோஷ சமாதானத்தைத் தந்து உன்னைக் காத்து வழிநடத்துவார்.
ஜெபம்: அன்பின் தேவனே, மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் உள்ளத்தின் வெறுமையை நீக்கி உமது தெய்வீக சமாதானத்தால் நிரப்பியருளும். ஆமென்.