நல்ல போராட்டம்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 4:1-20

நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் என்றேன் (நெகேமியா 4:20).

தேவனுடைய ஊழியத்தை நாம் உண்மையாய்ச் செய்யும்பொழுது, தேவனின் எதிரிகளின் எதிர்ப்புகள் நமக்கு நிச்சயமாக உண்டு. சில வைராக்கியமான கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள போராட்டம் தொடர்பான உருவகங்களால் கலக்கமடைந்துள்ளனர். ஆனால் அந்த உருவகங்களை நாம் புறக்கணிக்கமுடியாது. யூத மக்களின் வரலாற்றில் அவர்கள் அநேக போர்களை சந்தித்தனர். திருச்சபையும் தனக்குரிய எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. முதல் முறை சபை என்ற சொல் புதிய ஏற்பாட்டில் கட்டிடத்தையும் யுத்தத்தையும் இணைத்தே குறிப்பதாக உள்ளது (மத்.16:18). பவுல் அப்போஸ்தலனும் யுத்தங்களைச் சார்ந்த உவமைகளை தனது நிருபங்களில் எழுதுவதைத் தவிர்க்கவில்லை (எபே.6:10-20; 2தீமோ.2:1-4; 1 கொரி.15:57; 2 கொரி.2:12-17; 10: 4-6). தேவனுடைய பகைவர்களை நாம் எதிர்க்கும்பொழுது அவர் நமக்காக யுத்தம் பண்ணுவார்.

தேவனுடைய தன்மை இதனை வெளிப்படுத்துகிறது: செங்கடலை இஸ்ரவேலர் கடந்த பின்னர் “ஆண்டவர் போரில் வல்லவர்” (யாத்.15:3) என்று பெண்கள் பாடினர். அமலேக்கியர் இஸ்ரவேலரைத் தாக்கியபொழுது மோசேயின் ஜெபமும், யோசுவாவின் படையும் அவர்களைத் தோற்கடித்தது (17:8-16). மோசே இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “யேகோவாநிசி” (ஆண்டவர் என் வெற்றிக்கொடி) என்று பெயரிட்டழைத்தார். மோசேயின் கடைசி வார்த்தைகளில் “உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே” (உபா.33:29) என்று விளக்கியுள்ளார். “ஆண்டவர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு முன்செல்வார்” (ஏசா.42:13) என்று ஏசாயா தீர்க்கதரிசியும், “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்” (எரே.20:11) என்று எரேமியா தீர்க்கதரிசியும் எழுதியுள்ளார். நம்முடைய தேவன் பரிசுத்தர், நீதியும் நேர்மையும் அவரது பரிசுத்த தன்மைக்கு சாட்சிகள். தேவஜனங்கள் துன்மார்க்கரின் கூட்டத்துக்கு எதிர்த்து நிற்கும்பொழுது, ஆண்டவரும் அவர்களோடு போராடுவார்.

தேவனுடைய உடன்படிக்கையை லேவியராகமம் 26,27 மற்றும் உபாகமம் 28-30 வரையுள்ள அதிகாரங்களில் நாம் காணலாம். இஸ்ரவேலர் கானானை அடைந்தபொழுது, “நீங்கள் உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள், அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்” (லேவி.26:7,8). “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” (உபா.28:7) என்று தைரியப்படுத்துகிறார்.

தேவனின் உடன்படிக்கை இதனை அறிவிக்கிறது: இயேசு தமது இரத்தத்தால் சபையுடன் செய்த உடன்படிக்கையானது, நிலம், செல்வம் இவற்றுடன் தொடர்புடையது அல்ல. ஆனால், அது ஆன்மீகம் தொடர்பானது. அவருடைய சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளமாட்டாது (மத்.16:18). “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1கொரி.15:57). “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4). கிறிஸ்தவ வீரர்கள் சமாதானத்தின் காலணிகளை அணிந்துள்ளனர் (எபே.6:15). நாம் நற்செய்தியை அறிவிக்கும்பொழுது போரையல்ல; சமாதானத்தையே நாடுகிறோம். எனவே சாத்தான் நம்மை எதிர்க்கிறான். “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37).

தேவனுடைய பிள்ளைகள் இதனைச் சார்ந்து இருக்கவேண்டும்: இந்த ஆன்மீகப் போராட்டத்தில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாய் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவருடைய வாக்குறுதியை நம்பியிருப்பதே நமது பங்கு. அனுதினமும் அவருடைய வார்த்தையை தியானித்து, ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்காய் உறுதியாய் நிற்கவேண்டும். இருமனமுள்ள கிறிஸ்தவர்கள் வெற்றியை அல்ல தோல்வியையே தழுவுகிறார்கள். “நல்மீட்பர் பட்சம் நில்லும்” (Stand up, Stand up for Jesus) என்ற பழைய பாடலுக்கேற்றபடி இந்த ஆன்மீக போரில் தேவனுக்கு சாட்சியாக நிற்பதும் ஒரு சாதனையே. இது நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்புகளைத் தருகிறது. போர்கள் வரும் பொழுது “நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்” (நெகேமியா 4:20) என்று நெகேமியா சொன்னதை நினைவில் வையுங்கள். நீங்கள் தனியாகப் போராடவில்லை. நாம் தேவனுடன் இணைந்திருப்பதால் அவரும் நம்முடன் போராடுகிறார். “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு” (1 தீமோ. 6:12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை