என்னைத் தொடரும் கண்கள்!

தியானம்: 2025 ஜனவரி 28 செவ்வாய் | வேத வாசிப்பு: யோபு 23:1-10

YouTube video

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார் (யோபு 23: 10).

இந்த அறிக்கையைச் செய்த யோபு பக்தன் கடந்து சென்ற பாதை எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர், “ஆனாலும்…” என்று கூறுவதைக் கவனியுங்கள். அவரது அங்கலாய்ப்புக்களை உணர்ந்துகொள்வார் யாருமிருக்கவில்லை; தன் நண்பர்களினால், அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராகக் கணிக்கப்பட்டார்; இந்த நிலையில் கர்த்தரைச் சந்திக்கும் இடத்தைத் தேடுகிறார். முன்னாகவும் அவர் இல்லை; பின்னாலும் அவரைக் காணவில்லை; இடதுபுறத்திலும் இல்லை; வலதுபுறமும் வெறுமையே. எந்தத் திக்கிலும் அவரால் தேவ சமுகத்தை உணரமுடியவில்லை. “ஆனாலும்…”

இப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டு, வழிகள் யாவும் அடைபட்ட நிலையில் தேவனைத் தேடும் தேவபிள்ளையே, கலங்காதே. சிவந்த சமுத்திரம் மற்றும் கரைபுரண்டோடிய யோர்தான் நதிபோன்ற பிரச்சனைக்கு முகங்கொடுத்த இஸ்ரவேல் மக்களை தேவன் கைவிட்டாரா? சோதனை, கண்ணீர், தப்பான அபிப்பிராயங்கள், சந்தேகங்கள், யாவும் நமது வாழ்க்கையின் நம்பிக்கையை அழித்துப்போடுவதுபோல நம்மைப் பயமுறுத்தலாம். தாகத்தோடு வந்த இஸ்ரவேலர் முதலில் கசப்பான மாராவைத்தானே சந்தித்தார்கள். தேவன் அதை மதுரமாக்கிக் கொடுக்கவில்லையா? உணவுக்காக கஷ்டப்பட்ட மக்களுக்கு மன்னாவை கொடுத்தது போன்ற சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்த நமது வாழ்க்கை வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார் என்பதையும் மறக்கக்கூடாது. ஏனெனில், வழியிலே இலகு தோன்றும்போது இலகுவில் இடறியும் நாம் விழக் கூடுமே. ஆகவே, அவ்வழிகளிலும் நம் கால்கள் இடறாமல் அவரே காத்துக் கொள்கிறார். ஏழு மடங்கு அதிகரிக்கப்பட்ட சூளையின் மத்தியில் தன் பிள்ளைகளுடன் உலாவியவர், நம்மைக் கைவிடுவாரா? சூளை சூடாக அனுமதிக்கிறவர் அவரே; அதிலே நாம் அழிந்துபோகாமல், பொன்னாக மிளிரும்வரை நம்மருகில் இருப்பவரும் அவரே. யோபு, தன் நம்பிக்கை யாவும் அற்றுப்போன வேளையிலும், குடும்ப வாழ்வு சிதறிவிட்ட நிலைமையிலும் தன் கர்த்தருடைய கரத்தையேக் கண்டார்.

அப்படியானால் அதே கரத்தை ஏன் நாமும் காணக்கூடாது? நமது வழி கர்த்தரால் அறியப்பட்ட வழி என்பதை உறுதியாக நம்புவோமானால், “அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” என்ற விசுவாச அறிக்கையைச் செய்வது நமக்குக் கடினமாக இராது. தேவபிள்ளையே, உன் வழிநெடுகிலும் அளவற்ற இரக்கத்துடன் உன்னைப் பின்தொடரும் அவரது கண்களைக் காணும்படிக்கு இன்றைக்கே உன் விசுவாசக் கண்களைத் திறந்துகொள். அதன்பின் உன் துன்பவழிகளும் உனக்கு நன்மையின் வழியாகவேத் தெரியும்.

ஜெபம்: அன்பின் பிதாவே, எந்தத் துன்பம் வந்தாலும், நான் போகும் வழியை நீர் அறிந்திருப்பதனால் நான் தைரியமாய் முன்செல்லுவேன். உமக்கே துதி கனம் மகிமை உண்டாகட்டும். ஆமென்.