ஒருவேளை….!
தியானம்: 2025 மே 25 ஞாயிறு | வேதவாசிப்பு: யாத்திராகமம் 4:1-9

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள் …. என்றான் (யாத். 4:1).
“ஒருவேளை விபத்து நேரிட்டால்? ஒருவேளை என் பிள்ளை வியாதிப்பட்டால்? ஒருவேளை என் வேலை போய்விட்டால்…” என்று நடக்காத காரியங்கள் நடந்துவிடுமோ என சிலர் கலங்குவதுண்டு. எதிர்காலத்தைக் குறித்து நாம் அக்கறைப்படுவதும், அதற்காகத் திட்டமிடுவதும் தவறல்ல. அப்படி திட்டமிடும்போது ‘ஒருவேளை’ இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கற்பனை பண்ணி சிலர் சில மாற்றுத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பார்கள். ஆனால், தேவன் ஒரு காரியத்தைத் தெளிவாக “இப்படிச் செய்” என்று சொல்லும்போது நாம் அதைச் செய்யாமல், மாற்றுத்திட்டத்தைச் செய்ய முடியாது. செய்ய முனைந்தால் அது தீங்காகவே முடியும்.
“எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துக்கொண்டு போ” என்று தேவன் மோசேயிடம் சொன்னபோது, “அவர்கள் என்னை நம்பார்கள். என் வாக்குக்குச் செவிகொடார்கள். கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்று தனது “ஒருவேளை” கற்பனைகளை வெளியிடுகிறார் மோசே. கர்த்தர் சொன்னார் என்றால், பின்னர் அதில் என்ன “ஒருவேளை”?
“ஒருவேளை” என்ற சொல் கிறிஸ்தவர்களை செயலிழக்கச் செய்துவிடுகிறது. கடவுள் ஊழியத்தைச் செய்ய அழைக்கும்போது, “ஒருவேளை என்னால் ஒழுங்காகச் செய்ய முடியாதுபோனால், ஒருவேளை நான் தவறுவிட்டுவிட்டால், ஒருவேளை மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாமல் போனால்…” என்றெல்லாம் பலர் பல சாக்குப்போக்குச் சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர். “ஒருவேளை” என்ற மனப்பான்மையானது நமது பகுத்தறிவை செயலற்றதாக்கி, நம்மிடம் உள்ள நல்லவைகளை அழித்து ஆபத்தான சூழலில் நம்மை நிறுத்திவிடக் கூடும். நமது சிந்தனைகளை செயலற்றதாக்கி, கர்த்தர் தருகின்ற அருமையான தருணங்களை இழக்கச் செய்துவிடும்.
அன்பானவர்களே, “ஒருவேளை” என்னும்போது அது ஒரு சந்தேக எண்ணம்தான். இந்த மனப்பான்மையில் நம்மைக் கொண்டுப்போய்விட சாத்தான் மிகவும் விரும்புவான். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும்போது, தேவன் நமக்கு ஒரு பணியை ஆயத்தம் செய்து வைத்திருப்பதை அறிந்துகொள்வோம். அதனுடன் அதற்குத் தேவையான சகல காரியங்களையும் அவர் பார்த்துக்கொள்வார். இன்று சாத்தான் உங்கள் காதுகளில் “ஒருவேளை” என்று கூறினால், “அதனால் என்ன? தேவன் அதைக் கவனித்துக்கொள்வார்” எனறு நீங்கள் பதில் கூறுங்கள்.
தேவன் உங்களை அழைக்கும்போது “ஒருவேளை” என்ற காரியத்தையும் அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார் என்பதை நம்புங்கள்!
ஜெபம்: என் நம்பிக்கையாகிய கர்த்தாவே, என் வாழ்வில் ஏற்படும் சகல சந்தேக எண்ணங்களையும் தயவாய் என்னைவிட்டு நீக்கியருளும். நீர் என் காரியங்களை பொறுப்பெடுத்து கொள்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.