கனப்படுத்து!
தியானம்: 2025 ஜுன் 6 வெள்ளி | வேதவாசிப்பு: 1இராஜாக்கள் 2:1-12

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே (நீதிமொழிகள் 1:8).
தாவீது, வயதுசென்று மரணமடையும் காலம் சமீபித்தபோது, தனது மகன் சாலொமோனைத் தனது சிங்காசனத்தில் அமர்த்தினார். சாலொமோன் ராஜாவானான் என்ற செய்தியைக் கேட்டதும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று தாவீது பணிந்துகொண்டார் (1இராஜா.1:18). இந்த ராஜ ஸ்தானத்தை சாலொமோன் பெற்றுக்கொண்டபோது, தாவீது அவனுக்குப் பல காரியங்களைக் கட்டளையாகச் சொன்னார். முக்கியமாக, கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தருக்குப் பிரியமானபடி அரசாளவேண்டும் என்று புத்தி கூறினார். சாலொமோனும் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான் என்றும் வாசிக்கிறோம் (1 இராஜா.3:3). கிபியோனிலே பலியிடப்போன சாலொமோனிடம் கர்த்தர் சொப்பனத்திலே தோன்றி விரும்புகிறதைக் கேட்கும்படி கூறினார். சாலொமோனும், கர்த்தருடைய ஏராளமான ஜனத்தை ஆளுவதற்குவேண்டிய ஞானத்தைக் கேட்டான். கர்த்தரோ, ஞானத்தோடு சகல ஐசுவரியத்தால் அவனை நிறைத்தார் (1இராஐh.3:3-15) தகப்பன் தாவீது தன் மகனுக்கு தேவபயத்தைக் கற்றுக்கொடுத்தார். மகனும் அதன்படி நடந்தவரைக்கும் தேவன் அவன்மீது பிரியமாகவே இருந்தார்.
ஆனால், எப்போது சாலொமோன் தந்தையின் புத்திமதியை மீறினாரோ அப்போதே அவருடைய விழுகை ஆரம்பமானது. இராஜ்யபாரமும் இரண்டாகக் கிழிந்தது. சாலொமோன் தான் எழுதிய நீதிமொழிகளிலே முக்கியமாக தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படியவேண்டுமென்று பிள்ளைகளுக்கு அநேக ஆலோசனைகளை வழங்கிய அவரே, தனது பின்நாட்களில் அவற்றை மீறி நடந்தார் என்பது எத்தனை பரிதாபம்!
இன்று வாழ்க்கைமுறைகளும் பெற்றோர் – பிள்ளை உறவுகளும் தள்ளாடுகின்றன என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மையாகும். “பிள்ளைகளே! உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” என்று பவுல் எழுதியுள்ளார். (எபே.6:1-3) பெற்றோரைக் கனம்பண்ணுதல் என்பது அவர்களது கடமையை நிறைவேற்றுவது மாத்திரம் அல்ல; அவர்களுக்குக் கீழ்ப்படிவதிலும் கனப்படுத்துதல் தங்கியிருக்கிறது. இதனை தேவன் தமது பிள்ளைகளாகிய நம்மிடமும் எதிர்பார்க்கிறார். பிதாவாகிய தேவனை நாம் கனப்படுத்துவது உண்மையானால், இன்று அவரது வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். எனவே குடும்பமாக, பிள்ளைகளோடு தேவவார்த்தைக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம்.
ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனம் பண்ணவும் பெற்றோருக்குக் கீழ்ப்படியவும் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்தருளும். ஆமென்.