போருக்கான அணிகலன்கள்!

தியானம்: 2025 ஜுன் 14 சனி | வேதவாசிப்பு: எபேசியர் 6:10-18

YouTube video

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 6:11).

போராட்டமில்லாத வாழ்வு இல்லை. அன்றாடம் நாம் அநேக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சிலரால் அவற்றை மேற்கொள்ள முடிவதில்லை, அதினால் வாழ்வில் முன்னோக்கி செல்லமுடியாமல் திகைத்து நின்றுவிடுகின்றனர். சாத்தான் கொண்டுவரும் இப்படிப்பட்ட தந்திரமான போராட்டங்களை ஜெயித்து முன்செல்ல பவுல் நல்லாலோசனை எழுதியுள்ளார். அதாவது, போருக்குச் செல்லும் போர்வீரன் எப்படி தன் அணிகலன்களைச் சரிவரத் தரித்துச்செல்ல வேண்டுமோ அதுபோல, நாமும் தேவன் அருளிய போருக்குரிய சர்வாயுதவர்க்கத்தை அணிந்தவர்களாக ஆவிக்குரிய போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டும்.

பவுலடியார் ஆறுவகையான போர் உடைகளைக் குறிப்பிட்டுள்ளார். சத்தியம் என்ற கச்சை, நீதி என்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசம் என்னும் கேடகம், இரட்சண்யம் என்னும் தலைச்சீரா, தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்.

இங்கே முக்கியம் என்னவென்றால், ஒரு போர் வீரன் இந்த ஆறு அணிகலன்களையும் அணிந்தாக வேண்டும். இவைகளில் எதையும் தவிர்க்கமுடியாது. மார்க்கவசத்தைத் தவிர்க்கலாமா? அல்லது, தலைச்சீராவைத்தான் தவிர்க்க முடியுமா? அதுபோலவே, பிசாசு கொண்டுவரும் ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் ஜெயம்பெற வேண்டுமானால், வேதவசனத்தையோ அல்லது சுவிசேஷத்தையோ அல்லது வேறு எதையுமோ தவிர்க்கமுடியாது. இன்னுமொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒரு உலக போர்வீரனைப்பார்க்கிலும் ஆவிக்குரிய போரில் நிற்கும் நாம், இந்தப் போராயுதங்களை அணிந்திருந்தாலும்கூட, எந்நேரமும் ஆவியினாலே ஜெபிக்கிறவர்களாக கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைகின்றவர்களாக இருக்கவேண்டும். ஜெபம்தான் நமக்குப் பெலன்! கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சித்தான் நமது பயத்தைப் போக்குகிறது!!

தேவபிள்ளையே, ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அந்த நாளுக்குரிய ஆயத்தத்தை முன்னெடுப்பது நமக்கு அவசியம். அடுத்த நிமிஷம் என்னவாகும் என்று தெரியாத இந்த வாழ்விலே, நாம் சற்று அசதியாக இருந்தாலும் சத்துருவினுடைய தந்திரத்தில் நாம் அகப்பட்டுவிடுவோம். அந்தந்த நாளுக்குரிய வேதப்பகுதியைத் தியானித்து அதை நமது இருதயத்தில் வைத்து வைக்கப் பழகிக்கொள்வோம். எந்தச் சூழ்நிலையிலும் நமது விசுவாசத்தில் தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வோம். ஏனெனில் அதுதான் பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை அவித்துப்போடக்கூடிய பெலத்தை நமக்குத் தருகிறது. எல்லாச் சோர்வுகளையும் உதறித் தள்ளிவிட்டு, தேவன் தந்த ஆயதங்களை தரித்துக்கொண்டு முன்சென்று ஜெயம் பெறுவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் எங்களுக்குத் தந்த ஆவிக்குரிய போர் அணிகலன்களை அணிந்து சாத்தானை எதிர்த்து பயப்படாமல் போர்களத்தில் நிற்க கிருபை தாரும். ஆமென்.