தூசியை விட்டு எழுந்திரு!

தியானம்: 2025 ஜுன் 17 செவ்வாய் | வேதவாசிப்பு: ஏசாயா 52:1-12

YouTube video

தூசியை உதறிவிட்டு எழுந்திரு… (ஏசாயா 52:2).

ஒருமுறை, இருமுறை அல்ல. பலதடவைகள் இஸ்ரவேல் ஐனங்கள், தங்களை மீட்டுவழி நடத்திய தேவனை மறந்து, அவருடைய வழிகளைவிட்டு விலகிப் போனார்கள். தேவனுடைய வார்த்தையை மீறி அந்நிய ஜனத்தோடுள்ள உறவை ஏற்படுத்தி, அந்நிய தெய்வங்களை வழிபட்டு, இப்படியாக இஸ்ரவேலர் நடந்ததால் அவர்கள் மீண்டும் அடிமைத்தனத்துக்குள் செல்ல நேர்ந்தது. ஏசாயா தீர்க்கன்மூலம் எச்சரித்து உணர்த்திய தேவன், இங்கே, “தூசியை அகற்றிவிட்டு எழுந்திரு” என்று இஸ்ரவேலை மீண்டும் உற்சாகப்படுத்துகிறார். இங்கு “தூசி” என்று தேவன் கூறியபோது அது தேவனைவிட்டுப் பிரிந்துநின்ற இஸ்ரவேலின் பாவ வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றது. தேவனுக்குப் பிரியமற்ற வாழ்க்கை, தேவனுக்கும் அவரது கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமற்போன வாழ்க்கை; இவைகளை தேவன் வெறுக்கிறார். அதைவிட்டுப் புறப்படும்படி அழைக்கிறார்.

இன்றும்கூட, உலகத்தோடு ஒத்து வாழவேண்டும் என்று சொல்லி தேவபிள்ளைகள் தேவனுக்குப் பிரியமற்ற வாழ்வு வாழ்கின்றனர். உலக ஆசாபாசங்கள், சிற்றின்பவாழ்க்கை என்று நாடி ஓடுகிறார்கள். தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் தாம் நினைத்தபடி தமது வசதிக்கேற்றபடி வாழ்கிறார்கள். இன்னும் மற்றவர்களுக்கு மறைவாக பல பாவச்செயல்களைச் செய்கிறார்கள். இவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். இவற்றைத் தூசியாக உதறித் தள்ளிவிட்டு எழும்பும்படி ஆண்டவர் இன்று நம்மை அழைக்கிறார். நமது கழுத்தைச் சுற்றியுள்ள இவ்வுலகக் கட்டுகளை அறுத்து எறியும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார். மனதுருக்கமும், மன்னிக்கிறவரும், அன்பு நிறைந்தவருமான தேவன் தம் ஜனம் அழிந்துபோவதை விரும்புகிறவரல்ல. வல்லமையைத் தரித்துக்கொள்ளச் சொன்னார். அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளும்படி கூறினார் (ஏசா.52:1). வல்லமை, வஸ்திரம் ஆகிய இவை இரண்டும் தேவனுடைய பெலத்தையும், அவர் அருளும் இரட்சிப்பையும் எடுத்துக்காண்பிக்கின்றது.

தேவபிள்ளையே, இந்நாளில் நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்போம். நமது வாழ்வில் ஏற்படும் பல கட்டுக்களுக்கும் சிறையிருப்புகளுக்கும் நமது வாழ்வில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசிகளே காரணமாகும். தூசிகளுக்குள் நாம் உழன்று கொண்டு, தேவனோடு சேர்ந்துவாழ நம்மால் முடியாது. ஆகவே, தூசிபோன்ற நம்மில் ஒட்டியிருக்கிற தேவனுக்குப் பிரியமற்ற பாவங்களிலிருந்து விடுபட்டு, தேவனுடைய பெலத்தோடு நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பில் நிலைத்திருக்கத் தீர்மானிப்போமாக. தேவன் நமக்கு உதவி செய்வார்.

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு (ஏசா.52:2).

ஜெபம்: அன்பின் தேவனே, என்னில் படிந்திருக்கிற தூசிகளை அகற்றிப்போட முடியாத படி என் வாழ்வில் இருக்கும் தடைகளை தயவாய் நீக்கியருளும். ஆமென்.