தைரியமாயிரு!

தியானம்: 2025 ஜுன் 23 திங்கள் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 2:10-15

YouTube video

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப்பார்த்து,… எகிப்தியனை வெட்டி, மணலிலே புதைத்துப்போட்டான் (யாத்.2:11,12).

இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர், தமது சகோதரருக்காக, பிறருக்காக அதிகம் பாரப்பட்டு  ஜெபிப்பதையும், உதவி செய்வதையும் பார்த்து, அவர் அதிக ஆத்தும பாரம் நிறைந்தவர் என்கிறோம். பிறரின் பாரத்தைச் சுமந்து, தைரியமாக உதவுவது நல்லது. சில சமயங்களில் இப்படியாக உதவி செய்யும்போது சில தவறான காரியங்களும் நடந்துவிடுவதுமுண்டு. இதனால் தொடர்ந்து பிறருக்கு உதவி செய்யமுடியாத சூழ்நிலைகளும் உருவாகிவிடுகின்றன. இப்படியான நிலைமையில்தான் அன்று மோசேயின் நிலையும் இருந்தது. ஆனால், அவர் அப்படியே இருந்துவிட்டாரா?

மோசே பார்வோனின் அரமனையிலே வளர்க்கப்பட்டிருந்தாலும், தானும் ஒரு இஸ்ரவேலன் என்பதை அறிந்துகொண்டதும், அடிமைகளாக்கப்பட்டு இன்னல்கள் பல அனுபவிக்கும் தன் இனத்தவருக்காகப் பாரப்பட்டு உதவிசெய்ய நினைத்தார். ஒருதடவை எபிரெயன் ஒருவனை எகிப்தியன் அடிக்கிறதைக்கண்டு, அந்த எகிப்தியனை வெட்டி மணலிலே புதைத்துப்போட்டார். மறுநாளிலே இரண்டு எபிரெயர் சண்டை பண்ணுவதைக் கண்டு, அவர்களில் அநியாயஞ் செய்கிறவனை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவனோ, ‘எகிப்தியனைக் கொன்றது போல…’ என்று சொன்னதும், காரியம் வெளிப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தார். இதைக் கேள்விப்பட்ட பார்வோனும் மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். அப்போது மோசே மீதியான் தேசத்திற்குத் தப்பியோடினார். மோசே தன் இனத்துக்காகப் பாரப்பட்டது நல்லது.

ஆனால், அவர் தன் சுயபெலத்தில் சுயஞானத்தைக்கொண்டு முயற்சி செய்தபோது, தொடர்ந்து தன் ஜனத்தோடு இராதபடிக்கு ஓடவேண்டியதாயிற்று. ஆனாலும், கர்த்தர் அவர்பேரில் ஒரு நோக்கம் வைத்திருந்தார். ஒரு மந்தை மேய்ப்பவனாய் மீதியானிலே 40 வருடங்களைக் கழித்தபின்பு, ஒரு உண்மையான இரட்சகனாக கர்த்தர் மோசேயை திரும்பவும் எகிப்துக்கு அனுப்பி இஸ்ரவேலை இரட்சித்ததை நாம் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, இன்று நாமும் ஆத்தும பாரங்கொண்டு அவசரப்பட்டு சில காரியங்களைச் செய்து, எல்லாமே தவறாகப்போன நிலையில் தைரியமிழந்து முடங்கிப்போயிருக்கலாம். தன் சுயமுயற்சியில் ஈடுபட்ட மோசேயைக் கர்த்தர் தள்ளவில்லை. அவருக்குள் இருந்த ஆத்துமபாரத்தைக் கண்டார். அவரையே இரட்சகராக திரும்ப அனுப்பினார்.

தேவபிள்ளையே, நீங்கள் ஒதுங்கி இருக்கவேண்டி நேரிட்டிருந்தால், இந் நாட்களில் கர்த்தருக்குள் நம்மைப் பெலப்படுத்திக் கொள்வோம். மோசேயை திரும்பவும் அதே எகிப்திற்கு அனுப்பியவர் உங்களையும் பயன்படுத்துவார்.

ஜெபம்: அன்பின் தேவனே, அவசரப்பட்டு ஆலோசனை தவறி என் ஆசீர்வாதங்களை அநேகவேளைகளில் இழந்துவிட்டேன். இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.