ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2025)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்திலும் நாம் ஆறு மாதங்களைக் கடந்துவர தேவன் நமக்கு கிருபை செய்துள்ளார். அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை நாம் ஏறெடுப்போம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.
நமது தேசத்திலும் உலகத்தின் பல பகுதிகளிலும் யுத்தங்களையும் போர் சூழல் மூண்டு வருவதை நாம் காணமுடிகிறது. இவைகளெல்லாம் இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு நாம் சமீபமாக இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனபடியால் நாம் யாவரும் இயேசுகிறிஸ்து மாற்கு 13:37இல் நமக்கு அறிவுறுத்தினபடியே நாம் விழித்திருப்பது அவசியமாயிருக்கிறது.
ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னை வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ்ட் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படும். சென்னையிலுள்ள பங்காளர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட அன்பாய் அழைக்கிறோம். இதைக்குறித்த விபரங்கள் 7ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி தொடரில் வேதாகமம் எவ்வாறு உருவானது என்ற புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். ஜூலை மாதத்தில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானங்களின் இரண்டாம் பகுதியின் மொழியாக்கத்தையும், ஆகஸ்டு மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம் வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.
கே.ப.ஆபிரகாம்