வாக்கில் உண்மையுள்ள தேவன்!
தியானம்: 2025 ஆகஸ்டு 5 செவ்வாய் | வேதவாசிப்பு: எபிரெயர் 11:8-19

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே (எபிரெயர் 10:23).
தமது ஜனங்களை அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து மீட்டெடுத்த அன்பின் தேவன், அவர்களுக்கு அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றி, வழிநடத்தி, தாம் வாக்குப்பண்ணிய கானான் தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அந்த உன்னத தேவன் “நான் அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி.1:11) என்று கூறி இன்றும் நம்மை நடத்தி வருகிறவராயிருக்கிறார். அன்று மீட்கப்பட்ட தம் ஜனத்திற்கு எப்படியாக வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவர்களை வழுவாது வழிநடத்தினாரோ, இன்றும் அப்படியே நம்மையும் வழிநடத்த வல்லவராயிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கிறோமா?
“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்பதை நாம் அறிந்திருந்தால் இன்றும் அவருடைய வாக்குத்தத்தங்களை நமதாக்கி, அவற்றை நமது இருதயத்திலே பதித்து, அவருக்குள் மகிழ்ச்சியாயிருப்போம் அல்லவா? அப்பொழுது கார்மேகங்கள் நமது வாழ்க்கையை நிரப்பினாலும், எப்பெரும் தடைகள் நமது வாழ்க்கையில் வந்தாலும், எத்துன்பம் நமது வாழ்க்கையை மூடினாலும், நாம் தயங்காது, கலங்காது முன் செல்வோம்.
தேவன் அருளும் வாக்குத்தத்தங்களாவன:- “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா.41:10). “நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை” (ஏசா.49:23). “நான் அவர்களுக்குச் சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும், சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்” (எரே.33:6). “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத்.15:26). “கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15). “உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” (உபா.28:4). ஏனென்றால், நீ கர்த்தருடைய பிள்ளை!
அதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான வாக்குத்தத்தங்கள் வேதாகமத்தில் நமக்காக தரப்பட்டுள்ளது. அவற்றை விசுவாசித்துக் காத்திருப்பதில் நமக்கு என்ன தடங்கல்? விசுவாசிப்போம், தேவமகிமையைக் காண்போமாக.
…. தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே (2 கொரி.1:20).
ஜெபம்: வாக்களித்த அன்பின் தேவனே, நீர் வாக்குமாறாதவராக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். உமது வாக்குத்தத்தங்களைச் சுதந்திரமாக்கிக்கொள்ள என்னை ஒப்புவிக்கிறேன். எனக்குக் கிருபை தந்தருளும். ஆமென்.