ஆத்தும காப்புறுதி

தியானம்: 2025 ஆகஸ்டு 10 ஞாயிறு | வேதவாசிப்பு: எபிரெயர் 9:7-22

YouTube video

… அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன் (யாத்திராகமம் 12:13).

இன்றைய உலகில், நம்மில் பலர் பலவிதமான “காப்புறுதிகளைச்” செய்திருக்கலாம். வீடுகள், பொருட்கள், சொத்துக்கள், வாகனங்கள் மாத்திரமல்ல, நம் வாழ்க்கைக்கும் இன்று பலவித காப்புறுதி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இந்தக் காப்புறுதி என்பது என்ன? நம்முடைய பணத்தை நாமே முன்கூட்டி முதலீடு செய்து, மாதத்திற்குரிய தவணைப் பணத்தையும் செலுத்தி, நமக்கு எதிர்பாராத நஷ்டம் அல்லது இழப்புக்கள் ஏற்படும்போது அந்த காப்புறுதி நம்மைத் தாங்கும் என்று நம்புகிறோம். சுருக்கமாகச் சொன்னால், இது பாதுகாப்பிற்காக நமக்கு நாமே ஏற்படுத்துகிற முன்னேற்பாடு.

ஒன்றைக் கவனித்துப் பார்ப்போமேயானால், நாம் எடுக்கின்ற இந்தப் பாதுகாப்பு முயற்சிகளும், அது தற்காத்துத் தருகின்ற காரியங்களும் இவ்வுலக வாழ்வு முடிந்துபோகும்போது, அவையும் அழிந்துபோகும் காரியங்களாகவே இருக்கும். அத்துடன் அந்தக் காப்புறுதி நமக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யுமே தவிர, அந்த நஷ்டம் நமக்கு வராதபடி நம்மைக் காப்பாற்ற முடியாது. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எந்தக் காப்புறுதியானாலும் அது நமது ஆவி, ஆத்துமாவைக் காப்பாற்றிக் கொடுக்கமுடியாது. அழிந்துபோகின்ற சகலத்திற்கும் காப்புறுதியைக் கொடுக்கின்ற இந்த உலகத்திற்கு, அழியாத நமது ஆத்துமாவிற்குக் காப்புறுதி கொடுக்கவே முடியாது. ஏனெனில் இவ்வுலகமே ஒருநாள் அழிந்துபோகுமே! அப்படியானால் நமது ஆத்துமாவிற்கு காப்புறுதி கொடுப்பது யார்?

பிரியமானவர்களே, ஒரு நல்ல செய்தி தெரியுமா? நாம் முதலீடு செய்யாமல், மாதாந்திர தவணைப் பணம் செலுத்தாமல், நமது அழியாத ஆத்துமாவிற்குக் காப்புறுதி ஒழுங்கு செய்யப்பட்டாயிற்று. இந்த ஒழுங்கை தேவன் அநாதியாய் செய்துவிட்டார். அதற்கான சகல முதலீட்டையும் செலுத்திவிட்டார். ஆம், அந்த முதலீட்டுக் கிரயம் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மாசற்ற இரத்தமே! அந்தத் திட்டத்தில் நாமும் பங்கடைந்து நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். எனக்காக ஒருவர் காப்புறுதிக் கிரயத்தைச் செலுத்திவிட்டார் என்று விசுவாசிக்கவேண்டும். அவ்வளவுதான். இயேசு எனக்கான எல்லாவற்றையும் சிலுவையில் செலுத்தி தீர்த்துவிட்டார். இனி நான் விடுவிக்கப்பட்டவன். அழியாத நமது ஆத்துமா தேவனை விட்டு அழியாமல் காக்கப்பட இந்த ஆத்தும காப்புறுதித் திட்டத்தில் இணைந்துகொள்ள நம்மை இன்றே ஆண்டவருக்கு அர்ப்பணிப்போமாக. அவரது இலவச மீட்பில் இன்றே இணைந்து பயனடைவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது ஆத்துமா அழிந்துபோகக்கூடாது என்று என் மேல் எவ்வளவாக கரிசனை கொண்டு என்னை மீட்கும்படி உம்மையேக் கொடுத்தீர். இந்த சிந்தனை என்னைவிட்டு நீங்காதிருக்க என்னை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். ஆமென்.