தென்ராஜ்யத்தின் முதல் ராஜா

தியானம்: 2025 நவம்பர் 4 செவ்வாய் | வேதவாசிப்பு: 2நாளாகமம் 12:1-16

YouTube video

அவன் (ரெகொபெயாம்) கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான் (2நாளாகமம் 12:14).

தாழ்மை, கீழ்ப்படிதலைத் தரும்; பெருமை, எதைத் தரும்? தங்களுக்குத் தாங்களே கடவுளானார்கள், கர்த்தருடைய ஆளகையைப் புறந்தள்ளினார்கள், கீழ்ப்படியாமற்போனார்கள் என்று ஏதேனின் சங்கதிக்குப் பல விளக்கங்களைக் கொடுத்தாலும், முதல் மனிதர் தேவனை விட்டு மூன்றாம் சத்தத்திற்குச் செவி கொடுத்து செயற்பட்டதற்கு சாத்தானின் குணமான பெருமை அவர்களுக்குள் புகுந்ததுதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

வடராஜ்யத்தின் முதல் ராஜா, சாலொமோனின் மகன் ரெகொபெயாம். இவன் ராஜாவான போதுதான் ராஜ்யமும் இரண்டாகப் பிரிந்தது. “ரெகொ பெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்” இதுதான் ரெகொபெயாமின் விழுகைக்கு அடிகோலியது. “அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.” இங்கே இஸ்ரவேலர் என்பது தென்ராஜ்ய மக்களாகிய யூதாவையே குறிக்கிறது. ரெகொபெயாம் கர்த்தரைத் தேட முயற்சித்தபோது அவனுடைய ராஜ்யம் திடப்பட்டது. ஆனால் ராஜ்யம் செழிப்படைந்து, பிரபல்யமாகி பலப்பட்டபோது அவன் கர்த்தரை விட்டுவிட்டான். இதன் பலன் அழிவு. ஆம், அவர்கள் கர்த்தரை விட்டுவிட்டதால், கர்த்தர் சீஷாக் என்பவனின் கைகளில் அவர்களை விட்டுவிட்டார் (வச.5).

சுயநம்பிக்கை, சுயதிருப்தி, குறைவற்ற நிலை என்று யாவும் ஒன்றுசேரும்போது பெருமை நமக்குள் ஊர்ந்துவந்து உட்கார்ந்து விடுகிறது. அன்று ரெகொபெயாமுக்கு கர்த்தர் உடனடித் தீர்ப்புக் கொடுத்தார். ஆனால் இன்று தீர்ப்பு தாமதமாகிறதினாலே பெருமை நம்மை மனந்திரும்பவிடாமல், அழிவுக்கே இட்டுச்சென்று விடுகின்ற அபாயம் உண்டு. அன்று செமாயா தீர்க்கதரிசி எச்சரித்தபோது, அவர்கள் தங்களை தாழ்த்தியதைக் கர்த்தர் கண்டார். அப்போது அழிவு நிறுத்தப்பட்டது, ஆனால் தண்டனை இருந்தது.

“கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவன்” என்று பெயர்பெற்ற தாவீதின் பேரனான ரெகொபெயாமின் சங்கதி நம்மைச் சிந்திக்கவைக்கட்டும். அன்றைய ராஜாவைப்போல நாம் நடக்காவிட்டாலும், தேவனுடைய வார்த்தையை மிக இலகுவாக புறந்தள்ளி, சாக்குகள் சொல்லி, பெருமை மிக்க சுயத்தின் வழியில் செல்லத்தக்க சோதனைகள் நிறையவே உண்டு. என்றாலும் மனந்திரும்புவதற்குத் தருணமும் உண்டு. மனந்திரும்பும் பாவியைக் கர்த்தர் புறந்தள்ளார். நாம் நம்மைத் தமக்கு அர்ப்பணித்து ஜீவிக்கவேண்டுமென்பதே தேவனுடைய எதிர்பார்ப்பு. அப்போது அவர் நம்மை ஒருவிநாடிகூட கைவிடவே மாட்டார்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, சுயபெருமை, சுயநம்பிக்கை இவைகள் எங்களை ஆட்கொள்வதற்கு இடங்கொடாமல், உமக்குமுன்பாக எங்களை தாழ்த்துகிறோம். ஆமென்.