முப்பத்தாறாம் வருஷம்
தியானம்: 2025 நவம்பர் 7 வெள்ளி | வேதவாசிப்பு: 2நாளாகமம் 16:1-13

இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர் (2நாளாகமம் 16:9).
“இந்த விஷயத்தில்” என்னும்போது, மற்ற விஷயங்களில் மதியுடன் நடந்திருக்கலாம் என்று நாம் அர்த்தம்கொள்ளலாம்! ஆம், நாமும் இப்படித்தான்; எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு, முக்கிய விஷயத்தில் யாவையும் தொலைத்து விட்டிருப்போம். அந்த ஒன்றினால், அத்தனை காலங்களும் நாம் கட்டிக்காத்துக்கொண்ட நற்பெயரும், நல்ல விஷயங்களும் கேள்விக்குறியாகி விடுகிறது.
ஆசா யூதாவை 41 ஆண்டுகள் ராஜ்யபாரம் பண்ணின ஒருவன். இவனது ஆட்சியில்முதல் 10ஆண்டுகள் அமைதியாக இருந்தது. கர்த்தரின் பார்வைக்குச் செம்மையான யாவற்றையும் செய்தான். பிரச்சனைகள் நெருக்கங்கள் வந்தபோது கர்த்தரையே தேடினான். தேவனையே தேடும்படி தனது ராஜ்யத்தின் மக்களையும் தீர்க்கமாக வழிநடத்திய ஒருவன்தான் இந்த ஆசா. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் பேருடனும் முந்நூறு இரதங்களோடும் யூதாவுக்கு எதிராகவந்தபோதுகூட ஆசா கர்த்தரையே நாடினான். கர்த்தர் எத்தியோப் பியரை முறியடித்தார். இப்படியே 35 ஆண்டுகள் நன்றாகவே ஓடியது. முப்பத்தாறாம் வருஷத்தில் இவனுக்கு என்னவாயிற்று? இப்போது இஸ்ரவேலின் ராஜா பாஷா யூதாவுக்கு எதிராக வந்து தடைகளை கட்டினான். இதுவரை கர்த்தரையே நாடிய ஆசா, இப்போது கர்த்தரை நாட மறந்தது என்ன? இவன் இப்போ, சீரியா நாட்டுராஜாவின் உதவியை நாடுகிறான். அவனும் உதவி செய்கிறான். கர்த்தரோ, அனானி என்பவனை எழுப்பி, இத்தனை வருடங்களாக உம்மை நடத்திய தேவனை நீர் மறந்ததென்ன என்று கேட்கிறார். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையைவிளங்கப் பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” இதை நீர் மறந்ததென்ன என்று கண்டிக்கிறார். ஆசாவோ இதைக் கேட்டு மனந்திரும்பாமல், அனானியை சிறையில் அடைக்கிறான். அவன் கால்களில் வியாதி கண்டது, அப்போதும் அவன் கர்த்தரைத் தேடவில்லை. பின்னர் அவன் மரித்துப்போனான்; மனந்திரும்பியதாக எழுதப்படவில்லை.
35ஆண்டுகள் கர்த்தரையே தேடினவன், இறுதிக் காலத்தில் கர்த்தரை விட்டுவிட்டது நமக்குச் சிறந்த எச்சரிக்கையாயிருக்கிறது. நாம் கர்த்தரோடிருந்தால், நம்மோடு அவர் இருப்பார். நாம் அவரைத் தேடினால் அவர் நம்மோடு இருப்பதை அவர் வெளிப்படுத்துவார். நமது பாரங்களை அவர் சுமப்பார். நமது போராட்டங்களில் அவர் ஜெயம் தருவார். நாம் அவரை விட்டுவிட்டால்? “முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத்.24:13). நாம் தடுமாற வேண்டிய அவசியமில்லை. முடிவுபரியந்தம் நம்மை நிலைநிறுத்துகிற ஆண்டவர் இயேசு இன்று நம்முடன் இருக்கிறார். நாம் அவருடன் நிற்கிறோமா? அவரோடு நடக்கிறோமா?
ஜெபம்: கர்த்தாவே நான் விழுந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்கள் நேரிட்டாலும் மீண்டு எழுந்து. மனந்திரும்பி முன்நோக்கிச்செல்ல உமதுகிருபையைத் தாரும் ஆமென்.