நிகுஸ்தான்

தியானம்: 2025 நவம்பர் 10 திங்கள் | வேதவாசிப்பு: 2இராஜாக்கள் 18:1-4; எண்.21:5-10

YouTube video

அவன் (எசேக்கியா) தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் (2இராஜாக்கள் 18:3).

தாவீது ராஜா எப்படி கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தாரோ (அப்.13:22) அப்படியே எசேக்கியாவும் செய்தான். இவன் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரையே கனப்படுத்தி ராஜ்யபாரத்தை உத்தமமாய் நடத்தினான் என்பது விளங்குகிறது. விக்கிரகங்களை உண்டுபண்ணின தனது தாயையே தள்ளிப் போட்ட ஆசா ராஜாவுக்கு இவன் சளைத்தவன் அல்ல என்பதுபோல யூதாவிலே எசேக்கியா செயற்பட்டான்.

கானானை அண்மித்த நிலையில் இஸ்ரவேலர் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி, கர்த்தர் கொடுத்த உணவையும் வெறுத்து முறுமுறுத்தபோது, கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார் என்றும், அவை கடித்ததால் அநேகர் செத்தார்கள் என்றும் வாசிக்கிறோம். ஜனங்கள் தமது பாவத்தை உணர்ந்தபோது, மோசே விண்ணப்பம் பண்ணியபோது, அந்த சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதைக் கம்பத்தில் உயர்த்தி வைக்கும்படிக்கும், கடிக்கப்பட்டவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றும் கர்த்தர் சொன்னார். அப்படியே மோசே செய்துவைத்தான். அதை நோக்கிப் பார்க்கிறவர்கள் அந்த சர்ப்பத்தின் உருவத்தால் குணமடையவில்லை. மாறாக, தங்கள் பாவத்தின் கோரத்தை அந்த உருவத்தில் கண்டது மல்லாமல், கர்த்தருடைய சமுகம், அவருடைய வல்லமை, அவருடைய இரக்கம் மன்னிப்பு யாவையும் அது அவர்களுக்கு நினைவூட்டியது. அதைப் பார்த்து தேவனை ஆராதிக்கவேண்டிய மக்கள், அந்த உருவத்தையே ஆராதனைப் பொருளாக மாற்றிவிட்டிருந்தார்கள். அந்த சர்ப்பத்தின் சிலையானது யூதாவின் ஜனத்திற்குள் எசேக்கியா ராஜாவின் காலம் வரைக்கும் நீண்டகாலமாக இருந்ததைக் காண்கிறோம். எசேக்கியா ராஜா, இந்த நீண்ட கால பாவத்தைத் துடைத்தெறிந்தார். அந்த சர்ப்பத்தின் உருவத்தை, மக்களின் ஆராதனைப் பொருளாயிருந்த விக்கிரகத்தை உடைத்துப்போட்டார்.

ஆராதனைக்குத் தூண்டுதலாக இருக்கிறவைகள் ஒருபோதும் ஆராதனைக்குரியவைகளாக மாறக்கூடாது. இது கர்த்தருக்கு அருவருப்பான செயலாகும். தேவனுடைய பிரசன்னத்தை, அவர் அளித்த மன்னிப்பு, தயவு யாவையும் நமக்கு நினைவூட்டுகின்ற விஷயங்களே இன்று நமக்குத் தெய்வங்களாகி விட்டன என்பதை உண்மை மனதுடன் சிந்தித்தால் ஆவியானவர் நமக்கு நிச்சயம் உணர்த்துவார். நமது முழுமையான ஆராதனைக்கும் பாத்திரர் கர்த்தர் ஒருவரே. அந்த இடத்தை எது எடுத்துக்கொண்டாலும் அது விக்கிரகம்தான். அந்த விக்கிரகத்தை நமது சந்ததிக்கும் கடத்துவது சரியா? இதை உடைக்க இன்னுமொரு எசேக்கியா எழும்பமுடியாது. இன்றே நம்மை ஆராய்ந்து, நம்மை ஆட்கொண்டிருக்கிற அசுத்தங்களை அழித்துப்போடுவோம்.

ஜெபம்: அன்பின் தகப்பனே, எங்களை ஆட்கொண்டிருக்கும் எல்லா அசுத்தங்களையும் அழித்துப்போட ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.