மன நிர்ணயம்

தியானம்: 2025 நவம்பர் 12 புதன் | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 29:1-11

YouTube video

…கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கை பண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன் (2நாளாகமம் 29:10).

வாழ்வில் தேவனுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்பது தெளிவான சத்தியம். ஆனால், எல்லா வேளைகளிலும் தேவனுக்கே முதலிடம் கொடுக்கிறோமா? ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது ஜெபத்துடனே ஆரம்பிப்போம்; ஆனால் அது நமது உள்ளார்ந்த ஜெபமா அல்லது பழகிப்போன ஒன்றா? எந்தச் சூழ்நிலையிலும் முதலாவது தேவனைத்தேட மூடியிருக்கிற நமது இதயக்கதவுகளைத் திறப்போமாக.

எசேக்கியா ராஜா தன் ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொண்ட அந்த மாதத்திலேயே, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்க்கும் முழுமுயற்சியிலே இறங்கினான். தனது தகப்பன் பூட்டிப்போட்ட ஆலயக் கதவுகள்தான் (2நாளா.28:24) எசேக்கியாவின் இருதயத்தில் முதலில் வந்து நின்றது. இவன் ராஜாவாகும்போது இவனுக்கு வயது 25, வாலிப வயது; தகப்பன் இறந்ததும் முதலாவது அவன் ஆலயத்தையே நோக்கினான் என்றால், தகப்பன் ஆலயக் கதவுகளை மூடியபோது இவனது இருதயம் பட்டிருக்கக்கூடிய வேதனையை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கமுடியும். ஆசாரியரை லேவியரை அழைத்த எசேக்கியா, “முதலில் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்” என்றான். ஏனெனில் அவர்கள் பணிசெய்ய வேண்டிய இடம் கர்த்தருடைய ஆலயம். ஆலயப் பணியில் ஈடுபடுகிறவர்களின் பரிசுத்தம் மிகமுக்கியம் என்பதை எசேக்கியா அறிந்திருந்தான். அடுத்ததாக, “அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்” என்றான். அவர்களும் முதல் மாதம் முதல் தேதியிலே தங்கள் வேலையைத் தொடங்கி, பதினாறாம் தேதியிலே அதை முடித்தார்கள் (2நாளா.29:17). இத்தனைக்கும் காரணம், எசேக்கியா கர்த்தரோடே உடன்படிக்கை பண்ண தன் மனதிலே நிர்ணயித்துக்கொண்டான் என்பதே.

பிதாக்கள் செய்த துரோகம், அதனாலுண்டான தேவ கோபம், அதன் விளைவுகள் யாவும் எசேக்கியாவின் இருதயத்தை வாதித்திருந்தது என்பது விளங்குகிறது. ஆக, முதலாவது அவன் தன் இருதயத்தைத் திருப்பி, பிதாக்கள் உடைத்துப்போட்ட கர்த்தருடனான உடன்படிக்கையை மீள்செய்ய மனதிலே நிர்ணயம் பண்ணிக்கொண்டான். இன்று நமது மனதின் நினைவுகள் என்ன? உலக நெருக்கங்களா? நம்மைக் குறித்த, குடும்பத்தைக் குறித்த கவலையா? வியாதி வேதனைகளால் உண்டான தொல்லையா? அல்லது, கர்த்தருடைய ஆலயங்களாக திகழவேண்டிய ஏராளமான மக்கள் அழிவை நோக்கி ஓடுகிறார்களே அந்தப்பாரமா? கர்த்தருடைய ஆலயமாக இருக்கிற தேவமக்கள் இதயக் கதவுகளைப் பூட்டி, வார்த்தையைவிட்டு விலகி நிற்கிறார்களே, அந்தப் பாரமா? இன்று நமது மனதில் நாம் எதை நிர்ணயிக்கப்போகிறோம்.

ஜெபம்: கர்த்தாவே, அழிவைநோக்கி ஒடிக்கொண்டிருக்கும் மக்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்பவேண்டுமென்ற ஆத்துமபாரத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்..