ஆலய சுத்திகரிப்பு

தியானம்: 2025 நவம்பர் 13 வியாழன் | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 29:12-19

YouTube video

…கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே காத்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள் (2நாளாகமம் 29:15).

ஒரு காரியத்தைக் குறித்து மனதிலே நிர்ணயம் பண்ணிக்கொண்டால், அதாவது தீர்மானித்துவிட்டால், அதை முன்னெடுப்பதற்குத் தாமதிப்பது நல்லதல்ல. தாமதம், சிலசமயம் இல்லை என்ற நிலைக்கு நம்மைத் தள்ளிப் போடவும் கூடும்.

பிதாக்கள் கர்த்தரைக் கோபப்படுத்தியதையும், கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டு அவர்கள் திரும்பி முதுகைக் காட்டியதையும், தனது தகப்பனாகிய ஆகாஸ் தேவனுடைய ஆலயத்துக்குச் செய்தவைகளையும், பலிகளை நிறுத்தி, தூபங்காட்டாமல் விளக்குகளை அணைத்து, கதவுகளைப் பூட்டிவிட்டதையும் வாலிபனான எசேக்கியா கவனித்திருந்திருக்கிறான் என்பதை அவனுடைய ராஜ்யபாரத்தின் ஆரம்பமே நமக்கு உணர்த்துகிறது. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் பூட்டப்பட்டிருந்த ஆலயக் கதவுகளைத் திறந்தான் என்றும் (வச.3), முதல் மாதம் முதல் தேதியிலே (வச.17) ஆலய சுத்திகரிப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது என்றும் காண்கிறோம். ஆசாரியரையும் லேவியரையும் அழைப்பித்து, தங்கள் மக்களின் சாவுக்கும், சிறையிருப்பில் அகப்பட்டதற்குமான காரணத்தை விளக்கி, கர்த்தருடைய ஆலயப்பணியைச் செய்வதற்கு இவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அவர்களுக்கு உணர்த்தி, பணியை ஆரம்பிக்க ஊக்குவிக்கிறார். அவர்களும் தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, பணியை ஆரம்பிக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், “கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்” என்பதே. அதாவது, கர்த்தருடைய வசனத்துக்கு ஏற்ப ராஜா அவர்களுக்குக் கட்டளை கொடுத்தான், அதனால் அவர்களும் கீழ்ப்படிந்தார்கள்.

எசேக்கியாவின் வார்த்தைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு ஒத்ததாக இருந்ததை அறிந்து, அவர்கள் சகலவித சுத்திகரிப்பையும் செய்து, ஆகாஸ் செய்த அத்தனை அசுத்தங்களையும் மாற்றிப்போட்டார்கள். இன்று நாம் பலவித பிரச்சனைகள் சோதனைகளுக்குள் இழுப்புண்டு சத்துருவின் தந்திரத்திற்குள் அகப்பட்டிருக்கிறோமா? இதற்கெல்லாம் காரணம், நமது முன்னோர்களோ, பிறரோ அல்ல; கர்த்தருடைய வார்த்தைக்கேற்றபடி நமது வாழ்வு இருக்கிறதா என்பதே கேள்வி. வார்த்தைக்கு ஏற்புடையதல்லாத எதுவானாலும் அதை அகற்றிப்போட மனதிலே நிர்ணயம் பண்ணிக்கொண்டு, தாமதமின்றி அதை இன்றே செயற்படுத்துவோமாக. அது கடினமாக இருந்தாலும், கர்த்தருடைய வசனங்களுக்கொத்த எதுவானாலும் அதைச் செய்ய கர்த்தரே நமக்குக் கிருபை தருவார். எசேக்கியாவின் துணிகரம் நமக்குள்ளும் வரட்டும்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்புடையதல்லாத எந்த காரியமும் எங்களில் காணப்படாதபடி வசனத்தின்படி வாழ்வினை நடத்த கிருபை தாரும். ஆமென்.