ஆராதனை மீண்டும் ஆரம்பித்தது
தியானம்: 2025 நவம்பர் 14 வெள்ளி | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 29:21-36

…இவ்விதமாய்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் பண்ணப்பட்டது (2 நாளாகமம் 29:35).
பூட்டப்பட்டிருந்த நமது கிராமத்து வீட்டுக்குப்போனபோது மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதன் தோற்றம் கவலையைக் கொடுத்தது. பனை ஓலைகள் காற்றில் அசைந்து எழுப்பிய ஓசை பழைய இனிய நினைவுகளை நினைவூட்டினாலும், அதை இழந்துவிட்ட துக்கமும், வீட்டின் தோற்றமும் நெஞ்சை அடைக்கத்தான் செய்தது. இன்று அந்த வீடு திருத்தப்பட்டு, மறுபடியும் பாவனைக்கு உரியதாக மாறியபோது நமக்கிருந்த சந்தோஷம் சொல்லி முடியாது.
ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு, சகல பணிமுட்டுகளும் புதுப்பிக்கப்பட்ட செய்தியைக்கேட்ட ராஜா, காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான் (2நாளா.29:20) என்பதில் கர்த்தருடைய ஆலயத்தின்மீது எசேக்கியாவுக்கு இருந்த வாஞ்சை தெளிவாகிறது. “கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள்” என்று கட்டளையிட்டான் ராஜா. பலிகள் செலுத்தப்பட்டன; பாவநிவாரண பலியும் செலுத்தப்பட்டது. லேவியரையும் ஆசாரியரையும் நிறுத்தி, கீத வாத்தியங்களும் பூரிகைகளும் முழங்கத்தொடங்கின. கர்த்தருடைய துதி எழுந்தது; யாவரும் மகிழ்ச்சியோடே துதிசெய்து, தலைகுனிந்து கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். மக்களும் சர்வாங்க தகனபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வந்து செலுத்தினார்கள். “இவ்விதமாய்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் பண்ணப்பட்டது” (2நாளா.29:35). ராஜாவும் மக்களும் சந்தோஷப்பட்டார்கள். கைவிடப்பட்டு, அசுத்தப்படுத்தப்பட்டு இருந்த ஆலயம் மறுபடியும் சீரமைக்கப்பட எசேக்கியா கர்த்தரால் தூண்டப்பட்டு, சகலமும் செய்து முடித்தான் என்றால், அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையாய் நடந்ததால், கர்த்தரும் அவனைக்கொண்டே தமது ஆலயத்தை கர்த்தர் மீண்டும் எழுப்பினார் என்பதைக் கவனிக்கவேண்டும்.
அன்று கர்த்தருடைய ஆலயமும், ஆராதனையும், பலிசெலுத்துதலும் இஸ்ரவேலில்முக்கிய பங்கு வகித்திருந்தது. அதை ஒருவன் தீட்டுப்பண்ணினான். அவன் மகன் அதை சீரமைத்தான். இன்று கர்த்தர் தங்கிவாழும் ஆலயமாகிய நமது இருதயத்தின் நிலை என்ன? “என்னை ஜீவபலியாய் ஒப்புவிக்கிறேன்” என்று துணிகரமாகப் பாடுகின்ற நமது பலிகள் எங்கே? பலி இல்லாமல் அதை ஆராதனை என்று கூறமுடியாது. பண்டிகைகள் யாவும் அதன் பின்னர்தான். இன்று நமது வாழ்வு தேவனை ஆராதிக்கும் புனித இடமாக இருக்கிறதா? சபையாக ஏறெடுக்கின்ற ஆராதனை மெய்யாகவே சர்வாங்க தகனபலியாக நம்மை ஒப்புக்கொடுத்த ஆராதனைகளாக இருக்கிறதா? நாம் தேவனைத் துக்கப்படுத்த முடியாது, அவர் பார்வைக்கு நாம் செம்மையாய் நடக்கத் தீர்மானித்தாலே அவர் மிகுதியைச் செய்துமுடிப்பார்.
ஜெபம்: தேவனே, என் இருதயமும் என் வாழ்வும் உமக்குப் பிரியமானதாக இருப்பதற்கு ஏற்ப அவைகள் சுத்திகரிக்கப்பட இன்றே என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.